
முதல் காதலுக்கான இரண்டாவது வாய்ப்பு
( மூலம்- ஒரு பத்திரிகைச் செய்தி)
மனைவி: கண்டிப்பா அந்த ரீயூனியன் விழாவிற்கு நீங்க போகக் கூடாது.
கணவன்: எல்லோரும் அன்பா கூப்பிடறப்ப நான் வர முடியாதென சொல்ல முடியாதேம்மா.
மனைவி: அதெலாம் எனக்குத்தெரியாதுங்க. நானா? இல்லை உங்க ரீயூனியனா? நீங்களே முடிவு செஞ்சுக்கங்க.
கணவன்: 30 வருஷம் கழிச்சு பள்ளியில் 11th 12th படிச்சவங்க ஒன்னா சந்திக்க போறோம். உனக்கு என்ன அதில பிரச்சனை.
மனைவி: எனக்கு அதாங்க பிரச்சனையே. போன வருஷம் கல்லூரி நண்பர்கள் எல்லாம் சந்திச்சீங்க, நான் ஏதாச்சும் சொன்னேனா. பத்தாததுக்கு தண்ணி போட்டுட்டு நடக்க முடியாம நடந்து வந்தீங்க. நான் ஒன்னும் சொல்லலியே.
கணவன்: இப்ப மட்டும் என்ன வந்துச்சு?
மனைவி: WhatsApp ல வந்த அந்த ரீயூனியன் பற்றிய செய்திகளைப் படிக்கிறப்ப, உங்கள் முகம் பளிச், பளிச்சின்னு மின்னுதுங்க.
கனவன்: அதிலென்ன தப்பு. 30 வருஷம் கழிச்சு பார்க்கப் போறோம்ங்கிற சந்தோஷம்.
மனைவி: அதான், அதான். கல்யாணம் ஆன புதுசில உங்களோடு பள்ளியில் படித்த ஆஷாவுக்கு உங்க மேல இருந்த கிரஷும் உங்களுக்கு அவள் மேல இருந்த கிரஷைப் பற்றியும் சொல்லி இருக்கீங்க. அவளும் வருவாள்தானே.
கனவன்: பைத்தியமே, அவள் வந்தா என்ன? பார்த்து பேசிக்கப் போறோம். ஐம்பது வயதில் நீ இப்படி நினைக்கலாமா?
மனைவி: முதல் காதல், வயசெல்லாம் பார்க்காதுங்க. போன வாரம் பேப்பர்ல பார்க்கலயா. எர்ணாகுளத்தில் இப்படித்தான் பள்ளி ரீயூனியன் நடந்துச்சாம். எல்லோருக்கும் ஜம்பது வயது. கலந்துக்கிட்டவங்கள்ல ஒரு ஆணையும் பெண்னையும் காண வில்லையாம். ஜல்லடை போட்டு சளிச்சு தேடிட்டு இரண்டு வீட்லயும் போலீஸ்ல புகார் கொடுத்தாங்க. சில நாள் கழிச்சு அவங்க இரண்டுபேரும் வந்து அசடு வழிய பள்ளியில இரண்டு பேரும் காதலிச்சோம், மீண்டும் சந்தித்த பின் எங்களை மறந்து விட்டோம் என்றார்களாம். அப்புறம் என்ன ஆச்சோ தெரியல. அந்த பயம்தாங்க.
கனவன்: பைத்தியமே. கவலைப்படாதே. இப்ப வந்த மெஸ்ஸேஜில் ஆஷா அமெரிக்காவில் இருக்காளாம். வர இயலாது என கூறி உள்ளாள்.
மனைவி : அப்ப சரி. நீங்க போயிட்டு வாங்க.
கனவன்: ஆனா,அவள் போட்டோவை என் பெர்சனல் நம்பருக்கு அனுப்பச்சொல்லி கேட்டிருக்கேனே.
மனைவி: ???
உண்மைதான். சமீப நாட்களில் பள்ளி, கல்லூரி நண்பர்களின் ரீயூனியன் விழாக்கள் நம் கண்களில் அதிகம் தென்படுகிறது. 40-50 வயதுகளை தொட்ட நிலையில் இன்றைய சூழலில் மன அழுத்தத்திற்கு ஒரு வடிகால்தான் இது போன்ற ரீயூனியன் விழாக்கள்.
கலந்து கொள்பவர்களின் இளமை திரும்பி விடுகிறது.
விழா நடக்க சில நாட்கள் இருக்கும் பொழுதே சந்திக்க இருக்கும் தொடர்பற்றுப் போன நண்பர்களைப் பற்றிய கற்பனைகள்.
பள்ளி நாட்களைப் பற்றிய நினைவுகள் வந்து வந்து செல்லும்.
அன்று அடித்த கொட்டம் இன்று நினைத்தால் சிரிப்பு வரும்.
அன்று நம் கஷ்டத்திற்கு ஆறுதலாய் இருந்த நண்பன் மனதில் வந்து போவான்.
சண்டை போட்டு பிரிந்த நண்பனிடம் ஆத்மார்தமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென தோன்றும்.
‘பசுமை நிறைந்த நினைவுகளே’ ‘முஸ்தபா, முஸ்தபா’ போன்ற பாடல் வரிகளை பாடத்தெரியாத வாய்களும் முனு முனுக்கும்.
அனைத்திற்கும் மேலாக பள்ளியில் தோன்றி அங்கேயே மறைந்த முதல் கிரஷ் பற்றி மனதின் ஒரு மூலையில் உறங்கிக் கிடந்த நினைவுகள் விஷ்வ ரூபம் எடுத்து நம்மை அறியாமல் சிரிக்க வைக்கும்.
Bulb எரிந்து அணையும் .
யாரும் பார்க்காத பொழுது புன்னகை உதட்டில் வந்து போகும்.
அறியாத பருவத்தில் மனதில் விதைக்கப் பட்ட காதலுக்கு அழிவில்லை. மனதின் ஒரு மூலையில் புதைக்கப் பட்டிருக்கும்.
‘அழகி’ ‘ஆட்டோகிராப்’ ’96 ‘போன்ற திரைப்படங்கள் விதை கருகாமல் உயிர்ப்பூட்டிக் கொண்டிருக்கும்.
நண்பியையோ, நண்பனையோ பார்த்தவுடன் பழைய நினைவுகள் பட்டாம் பூச்சியாய் சிறகடித்துப் பறக்கும்.
காதலிப்பதை விட காதலை உரியவரிடம் சேர்ப்பது கடினமான காரியம். அறியாத வயதில் தைரியம் குறைவு, இன்றோ தைரியம் வரும், ஆனால் அது காலம் கடந்த காதலாகி விடும்.
ஆண்கள் தொந்தியும் தொப்பையுமாய் போய் நிற்பதைப் பற்றியெலாம் கவலைப்
படுவதில்லையாம்.
ஆனால் பெண்கள் தங்களை இளமையாய் காட்டிக் கொள்ள முயல்வார்களாம்.
அறியாத வயதில் தோன்றிய முதல் காதலை இரண்டாவது வாய்ப்பாக மாற்றும் தருணம் கோடியில் ஒருவருக்குதான் கிடைக்கும்.
எனவே ரீயூனியன் செல்லும் நண்பர்கள் முதல் காதலை மனதிலேயே பூட்டி வைத்து மனதை மட்டும் இளமையாக்கிக் கொண்டு திரும்புவது நாட்டிற்கு, வீட்டுக்கு நல்லது.
