30) தண்டியடிகள் நாயனார்.

ஈசனால் கண் ஒளி பெற்ற தண்டியடிகள் | dandi adigal nayanar

தண்டியடிகள் திருவாரூரில் பிறக்கும் பேறு பெற்றவர்.

ஆட வல்லானின் செம்பொற் கழலை அகக் கண்ணால் கண்டு வணங்கிய இவர், புறக்கண் பார்வை இல்லாதவர்.

திருவாரூர்ப் பெருமானின் திருத்தொண்டில் ஈடுபட்டு, எப்பொழுதும் ஐந்தெழுத்து மந்திரத்தை அன்புடன் ஓதி வந்தார்.

திருக்கோயிலின் மேற்குப் பக்கத்தில கமலாலயம் என்ற திருக்குளம் சமணர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அளவில் சுருங்கியது. இதனால் வருந்திய தண்டியடிகள் குளத்தை அகலமாய்ப் பெருகும்படித் தோண்ட வேண்டும் என்று எண்ணி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

குளத்தில் குழி தோண்டும் இடத்தில் ஒரு கோலை நட்டார். குளத்தின் கரையில் மற்றொரு கோலை நட்டார். இரண்டையும் சேர்த்து, ஒரு கயிற்றைக் கட்டி, அதைப் பிடித்துக் கொண்டு குளத்தில் இறங்கி மண்ணைத் தோண்டலானார். கயிற்றைப் பிடித்தபடியே சென்று, தோண்டிய மண்ணைக் கரையில் கொட்டுவார்.

இதனைப் பொறாத சமணர்கள் தண்டியடிகளைத் தடுத்தனர். “உன் விழியும் குருடு, காதும் செவிடே” என்று ஏசினர்.

மனம் வருந்திய தண்டியடிகள் “நில்லாத நிலையை உடையவர்களே சிவபெருமான் அருளால் யான் பார்வை பெற்று, உங்கள் கண்கள் குருடாக ஆனால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.

“நீ உன் தெய்வத்தின் அருளால் கண்ணைப் பெற்றால் நாங்கள் அதன்பின் இவ்வூரில் இருக்க மாட்டோம்” என்று கூறிய சமணர்கள் தண்டியடிகளின் கைகளில் இருந்த கூடையைப் பிடுங்கிக் கொண்டனர். நட்டிருந்த கோல்களையும்,கட்டியிருந்த கயிறுகளையும் அகற்றினர்.

நிலத்தில் விழுந்து அழுத தண்டியடிகள், “இதற்குத் தீர்வு அருளல் வேண்டும்” என்று இறைவனிடம் முறையிட்டார்.

அவர் கனவில் வந்த இறைவன், “அந்தச் சமணர்களின் கண் பார்வை மறைய, நீ கண் பார்வை பெறுவாய்” என்று கூறி அருளினான்.

மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், அடியவரின் முயற்சிக்குத் துணை நிற்குமாறு ஆணையிட்டான்.

நிகழ்ந்தவற்றை மன்னன், தண்டியடிகளைக் கேட்டறிந்த பின்னர்ச் சமணர்களை வரவழைத்தான்.
தண்டியடிகளைப் பார்த்துப் “ பெருகும் தவம் உடையவரே, திருவருளால் கண் பெறும் நிலையை நீவிர் காட்டுவீராக” என்றான்.

தண்டியடிகள், “நான் சிவனுக்கு உண்மையான அடியவனானால் கண் பெறுவேன், சமணர் கண் இழப்பர்” என்று கூறித் திருவைந்தெழுத்தை ஓதியவாறு குளத்தில் மூழ்கினார்.

நீரிலிருந்த எழுந்த போது இறைவன் அருளால் தண்டியடிகள் கண் பார்வை பெற்றார். வம்பு செய்த சமணர்கள் தம் கண் பார்வையை இழந்து தடுமாறினர்.

அரசனின் வீரர்கள் துரத்தச் சமணர்கள் தடுமாற்றத்துடனும், அச்சத்துடனும் ஊரை விட்டு அகன்றனர்.
மன்னன், சமணர்களின் பாழிகளையும், பள்ளிகளையும் இடித்து அகற்றிக் கமலாலயத்தின் கரையை அகலமாய் அமைத்து அடிகளாரைப் பணிந்து வணங்கினான்.

தண்டியடிகள், திருத்தொண்டினைச் செய்தும், ஐந்தெழுத்தை ஓதியும் சிவ நெறியில் வாழ்ந்து பின்னர்ச் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்

தண்டியடிகள் வெண்பா

கண்ணற்றார் ஆரூரில் கல்லும் குளம்பெருக்கப்
புண்ணுற் றமணர்கள் போய்த்தடுத்தார் – பெண்ணுற்ற
பங்கினான் பேரருளால் பார்வைபெற்றார், வல்லமணர்
அங்ககன்றார் தம்பார்வை அற்று.

(கண்ணற்றார்- கண் பார்வையற்ற தண்டியடிகள்)
(கல்லும் – தோண்டும்)
(குளம் பெருக்க – குளத்தைப் பெரியதாகச் செய்ய)
(பெண்ணுற்ற பங்கினான் – சிவபெருமான்,)

விளக்கம்
கண் பார்வையற்ற தண்டியடிகள், திருவாரூரில் உள்ள குளத்தைத் தோண்டிப் பெரியதாகச் செய்ததைக் கண்ட சமணர்கள் எரிச்சலுற்றனர். அவருக்குப் பல இடையூறுகள் இழைத்து அவர் பணியைத் தடுத்தனர்.
சிவபெருமான் அருளால்,தண்டியடிகளுக்குப் பார்வை கிட்டியது.
தீமை செய்த சமணர்கள் தம் பார்வை இழந்து திருவாரூரை விட்டுச் சென்றனர்.

********************

31) மூர்க்க நாயனார்

சிவத்தொண்டர்கள்-59 (மூர்க்க நாயனார்) – Pg Novels

தொண்டை நாட்டில் வளம் பெருக்கும் பாலி என்ற ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள திருத்தலம் திருவேற்காடு. இவ்வூரில் வழிவழியாய்ச் சிவபெருமானை வணங்கித் தொண்டு புரிந்து வந்த வேளாளர் குலத்தில் அடியார் ஒருவர் தோன்றினார். அவர் சிவபெருமானின் அடியார்களுக்கு உணவு ஆக்கி அளித்து , அவர்கள் உண்ட பின்னரே தாம் உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
தூய்மையான சோறும், நெய், இனிய கறிகள் போன்றவற்றையும் நன்கு சமைத்து, வருகின்ற அடியவர்களுக்கு அன்புடன் திருவமுது செய்வித்து வந்தார் . அடியார்க் கூட்டம் வருவது பெருகியதால் இவருடைய செல்வம் எல்லாம் தீர்ந்து போகத் தமது நிலத்தை விற்று, அமுது செய்விக்கும் அரும்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார்.

பிறகு, வறுமையுற்ற நிலையில் அடியவருக்கு அமுது செய்விக்க, வழி ஒன்றும் தோன்றாமையால், தாம் முன்னாளில் கற்றுக்கொண்ட நன்மை அளிக்கும் சூதாட்டத்தை ஆடி அதன் மூலம் பொருள் ஈட்ட முயன்றார்.

அவ்வூரில் சூதாட யாரும் இல்லாததால் திருக்குடந்தை நகர் சென்று சூதாடிப் பொருளீட்டி, அடியார்க்கு அமுதளித்து வந்தார்.

முதல் ஆட்டத்தில் தாம் தோற்றுப் பின்னர் வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்றுப் பெரும் பொருளை வென்று வந்தார். சூதாட்டத்தில் தோற்றவர்கள் பொருள் தர மறுத்தால், அவர்களைத் தம் உடைவாளால் குத்திப் பொருளைப் பெற்றுக் கொள்வார். இதனால் இவர் மூர்க்கர் என்ற பெயரைப் பெற்றார்.
இப்படிச் சூதாடியாவது அடியவர்களுக்கு அமுது செய்வித்துத் தொண்டு புரியும் தன்மையினால் சிவபெருமானின் திருவருளைப் பெற்றுக் குற்றங்கள் நீங்கப் பெற்றார். இந்த உலக வாழ்வு முடிந்த பிறகு, பூத கணங்கள் சூழ்ந்து கொண்டு இசை பாடச் சிவலோகத்தை அடையும் பேறு பெற்றார்.

குறிப்பு:
“தான் முன்பு கற்ற நற்சூதால் ” என்று சேக்கிழார் கூறுகிறார்.
தம் செல்வம் முழுதும் தீர்ந்து போகும் அளவுக்கு அடியார்க்குத் திருவமுது செய்த பிறகும் திருத்தொண்டினைத் தொடர்ந்து செய்ய வேண்டி வேறு வழியின்றிச் சூதாடியதாலும், அடியார்க்கு அமுதளிக்க அப்பொருள் பயன்பட்டதாலும், “ நற்சூது” என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார் போலும்.

மூர்க்க நாயனார் வெண்பா

தொண்டை வளநாட்டுத் தொல்பதியாம் வேற்காட்டில்
அண்டும் அடியார்க்(கு) அமுதளித்தார்- மண்டுசெல்வம்
தீர்ந்தழியச் சூதாடிச் செய்துவந்தார் தொண்டு,பின்னர்ச்
சேர்ந்தார் சிவனைச் சிறந்து.

************************

32) சோமாசி மாற நாயனார்

சோமாசி மாற நாயனார் - Tamil Wiki

திருவம்பர் என்ற ஊரைச் சேர்ந்தவர் மாறர். இவர் சிவ யாகங்களை முறைப்படிச் செய்து வந்ததால் சோமாசி என்ற பட்டப் பெயரைப் பெற்றவர். மறையவர் குலத்தைச் சேர்ந்த இவர், அடியவர்களுக்கு அமுது செய்விக்கும் நற்பண்பு மிக்கவர்.

இவர் சிவ யாகத்தை விதிமுறை தவறாது, ஏழு உலகங்களும் மகிழ்ந்து இன்பம் அடையும்படிச் செய்யும் பான்மையர். சிவபெருமானின் திருவைந்தெழுத்தை விதிப்படி ஓதியும், அடியவர்களைப் பணிந்து வணங்கித் தொண்டு புரிந்தும் வாழ்கின்ற ஒழுக்கத்தில் தலைசிறந்து நின்றார்.

சோமாசி மாறர், வன்றொண்டரான சுந்தரரின் அன்புக்கு ஆளாகி, அவரது நெருங்கிய நண்பர் ஆனார்.
சுந்தரரின் திருவடிகளைத் துதித்து அதனால் சிறப்படைந்து, சிவலோகத்தை அடைந்து வாழும் பேரின்ப நிலையைப் பெற்றார்.

சோமாசி மாற நாயனார் வெண்பா

என்றும் அடியவர்க்(கு) இன்னமுது செய்விப்பார்
நன்றுமறை வேள்வி நடத்துவார்- வன்றொண்டர்
நண்பர், அவரடியை நண்ணிச் சிவனுலகைப்
பண்புடன் சேர்ந்தார் பணிந்து.

( தொடரும்)