குமரித்துறைவி – ஜெயமோகன்

Screenshot

                           இந்தக்  கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதே, ஆச்சரியமாக, அற்புதமாக, எதிர்பாராமலேயே அவற்றோடு தொடர்புள்ள அருமையான ஒரு குறுநாவல் என்னை வந்தடைந்தது. ஒரு அதிசயமான நிகழ்வைக் களனாகக் கொண்டு அநாயாசமாக பிரமிக்கத்தக்க வகையில் புனையப்பட்ட நூல். உண்மையோ, புனைவோ, இரண்டும் கலந்த வடிவோ – இது இறைவனை உருவம், அருவம், அருவுருவம் என்போமே, அது போன்றது எனலாம். ஜெயமோகன் எழுதிய குறுநாவல். அருமையான இந்நூல் இத்தனை நாட்களாக என் கண்ணில் படாமல் எங்கோ ஒளிந்து கொண்டிருந்தது; அருமை நண்பர் ஒருவர் இது பற்றிய ஒரு அழகான மதிப்புரையை (குமரியைக் கண்டடைதல் – முகநூல்) எனக்குச் சுட்டிக் காட்டியபோது சிலிர்த்தேன்: அவர் குறுஞ்செய்தியில் கூறியிருந்தார்: “உனக்கு இது மிகவும் பிடிக்கும் மீனா; இது உன் ‘மீனா’ வைப் பற்றியது.” ஆச்சரியத்துள் ஆச்சரியம் – புத்தகம் என்னை வந்தடைந்த விதம்:

அமெரிக்கா கிளம்ப இரண்டே நாட்கள் இருந்தன. பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டேன். தொலைபேசியில் பேசிய பெண்மணி புத்தகத்தை உடனடியாகக் கூரியரில் அனுப்பினார். (கூரியர் ஆள் அவர்முன்பு நின்றுகொண்டு அன்றைய தபால்களைப் பெற்றுக் கொண்டிருந்தார் என்று சொன்னார்!) பின்புதான் என்னிடமிருந்து அதற்கான தொகையை அலைபேசி மூலம் பெற்றுக் கொண்டார். எப்படிப்பட்ட நம்பிக்கை! அவர்பெயரும் மீனாம்பிகைதான்! என்னவொரு பெயர் ஒற்றுமை – வாங்குபவர் – நூலின் நாயகி – விற்பனைப்பிரிவுப் பெண்மணி – மீனாட்சியின் ஆதிக்கம் எல்லையற்றது, கரைபுரள்வது. பிரவாகமாகப் பெருக்கெடுத்து என்னை ஆட்கொண்ட அந்த பிரமிப்பிலிருந்து நான் இன்னுமே விடுபடவில்லை. இந்தப் புத்தகம் எனக்குப் பொக்கிஷம். ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி போலப் புனிதமானது.

           கதை எழுதிய கதையைச் சொல்லிய ஆசிரியர் கூறும் ஒரு செய்தி உள்ளத்தை அசைத்துப் பார்க்கிறது. அட! இப்படியும் ஒரு பிரேமையா, கடவுளின்மீது என்று! ஆசிரியரின் சொற்களில்: ‘மனிதர்களை வைத்து தெய்வங்கள் விளையாடுகின்றன என்றால் தெய்வங்களை வைத்து மனிதர்கள் விளையாட முடியாதா என்ன?இரு விளையாட்டுகளும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஒன்றையொன்று ஆடிபோல் பிரதிபலித்து பெருக்கிக் கொள்கின்றன. அலகிலா ஆடலுடையது தெய்வம்; தன்னை வைத்து ஆடும்படியும் மானுடனை ஆட்டிவைக்கிறது.’

           எப்பேர்ப்பட்ட சொல்நயம். உள்ளே ஏதோ ஒன்று உருகியோடி அந்த மீனாளை அபிஷேகம் செய்கின்றது.

           சரி; நூலுக்குள் போகலாமா? திருவரங்கன் தங்கையான மதுரை மீனாக்ஷி பற்றிய கதை இது. கிட்டத்தட்ட அரங்கன் பயணம் மேற்கொண்ட அதேசமயம் (திருவரங்கன் உலா) மீனாக்ஷியையும் சுந்தரேஸ்வரரையும் பக்தர்கள் மதுரையிலிருந்து ரகசியமாக எடுத்துக்கொண்டு பயணித்து யாரும் அறியாமல் வேணாடு எனப்படும் (ஆரல்வாய்மொழி என்பது அழகான தற்காலப் பெயர்) மலையாளதேசத்தைச் சென்றடைகின்றனர். அங்கு இறை தம்பதியினர் பரகோடி கண்டன் சாஸ்தாவின் திருக்கோவிலில் இருத்தப் படுகின்றனர். ஐம்பத்தொன்பது ஆண்டுகளின் பின்பு விஜயநகரப் பரம்பரையைச் சேர்ந்த (அப்போது மதுரையை விஜயநகர அரசர்கள் ஆண்டுவந்தனர்) குமார கம்பண நாயக்கர் ‘அன்னை மீனாக்ஷி தன் மனைவி அரசி கங்காதேவியின் கனவில் வந்து தான் தன்வீடு திரும்ப ஆவலாக உள்ளதனைக் கூறினாள்; ஆகவே அவளைத் திரும்ப அழைத்துக் கொள்கிறோம்’ என விண்ணப்பிக்கிறார்.

           கதை இங்குதான் துவங்குகிறது. வேணாட்டரசரின் படைத்தலைவர்களுள் ஒருவரான வீரமார்த்தாண்ட உதயன் செண்பகராமன் என்பவன் வாயிலாகக் கதை சொல்லப்படுகிறது. முதலில் எவ்வாறு வேணாடு நிலைபெற்றது என ரத்தினச் சுருக்கமாக, ஆனால் சுவாரசியமாகச் சொல்கிறார் அவர். ஒரு ஓலையுடன், அது தாங்கியுள்ள விரும்பத்தகாத செய்தியுடன் தான் அரசரைக் காணச் செல்வதனை உணர்த்துகிறார். வேணாட்டு அரசரிடம் தாம் கொண்டு வந்துள்ள செய்தியை, அதாவது மீனாக்ஷியை அவள் கணவனோடு திரும்ப மதுரைக்கே அனுப்பித்தர வேண்டுமெனக் குமார கம்பண அரசரின் ஓலைச்செய்தி வந்து கொண்டிருப்பதனை அரசருக்குத் தெரிவிப்பதுதான்.

           இந்தச் செய்தி அரசர், மற்ற அதிகாரிகள் அனைவரையும் வருத்தத்திலாழ்த்துகின்றது. இத்தனை நாட்கள் தம் நாட்டில் தங்கியிருந்து பலவிதங்களிலும் மங்கலங்களை அருளி, காத்துவரும் அவளை எங்ஙனம் திரும்ப அனுப்புவது எனத் தவிக்கிறார் அரசர். அன்னை -அம்மை வந்துசேர்ந்த கதையைப் பேசி நினைவுகூர்கிறார் அரசர். அவள் வந்து சேர்ந்த நாளிலிருந்து செழிப்பும் மழையும் வளமும் மட்டுமே நாட்டில் கொழித்தன. இப்போது அவளைத் திரும்ப அனுப்பிவிட்டால்?…… மலைப்பாக இருக்கிறது அரசருக்கு.

           “அம்மையை நாம் கொண்டு வரவில்லை. அவளே தேடிவந்தா. அம்மையை அனுப்ப நாம் யார்? அம்மை எழுந்தருளச் சம்மதிச்சா கொண்டு போகட்டும்னு சொல்லிடுவோம்,” என்கிறார் உதயன் செண்பகராமன். கடைசியில் பெருத்த விவாதத்தின்பின் ஒரு பெரியவரிடம் வாக்குக்கேட்டு அவர் கூறும்படி செய்யலாம் என முடிவாகின்றது.

           உதயன் செண்பகராமன் அவரைச் சந்திக்கச் செல்கிறார். அவர் அனைத்தையும் கேட்டுவிட்டு, “அவள் மதுரை மீனாக்ஷிதான். ஆரல்வாய்மொழி மீனாக்ஷி அல்ல. அவளை நாம் நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடியாது. ஆற்றை அள்ளி வைத்துக்கொள்ள பாத்திரம் உண்டோ?” என்கிறார்.

           மிகவும் பொருத்தமான ஒரு அனுமானம், அழகான ஒரு விளக்கம் – “தாயோ, மகளோ, மருமகளோ, தாசியோ ஸ்த்ரீ யாரா இருந்தாலும் மங்களவதி. அவள் கிளம்பிப்போனா அது அமங்களமேதான். ஆனால் ஒரு ஸ்த்ரீ கிளம்பிப் போறதுமட்டும் மகாமங்களம். குடும்பத்துக்கு கியாதியும் க்ஷேமமும் கொண்டுவறது அது.” ஆசிரியரின் கூற்று நம்பூதிரிப்பாடின் கூற்றாக வெளிப்படுகிறது. அவள் மதுரைக்கு அரசி. ஆனால் இது அவளுடைய சொந்த ஊர். இங்கு பிறந்து வளர்ந்த முக்குத்தி, மீனம்மை அவள். இந்நாட்டு அரசர் அவளைப் பெற்றெடுத்து வளர்த்த தந்தைக்கு ஒப்பானவர்.

           “பிறந்த இல்லம் விட்டு மகள் மங்கல்யவதியாய் புருஷனோடு ஒப்பம் கிளம்பிப்போறது தந்தைக்கு ஹ்ருதயமதுரமான சந்தர்ப்பம். அந்த இல்லத்துக்கு அஷ்டலக்ஷ்மிகளும் வந்து நிறையற முகூர்த்தம் அது.”

           “மகாராஜா பெண்ணைப் பெற்ற தந்தையா மணையிலே உட்கார்ந்து தேவியை தன் வலத்தொடை மேலே உக்கார வைச்சு சுந்தரேசனுக்கு கைத்தலம் பற்றிக் குடுக்கட்டும்,” என்கிறார்.

           பின் என்ன? அற்புதமான ஒரு திருமணம் நடைபெறுகிறது. உதயன் செண்பகராமன் அரசர் கட்டளைப்படி அத்தனை பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு ஓடியாடுகிறார். இவற்றை, அந்தத் தெய்வீகத் திருமணத்தைப் பற்றிய அருமையான விவரிப்புகளே இனியுள்ள கதை முழுதும். ஆனால்….

           செண்பகராமன் வாய்மொழியாகத் தொடரும் இந்தக் கதை அருமையாக, கோர்வையாக, நிகழ்வுகளை ஆசிரியருக்கே உரிய வாக்கு சாதுர்யத்துடனும், இழைந்தோடும் சிறு நகைச்சுவையுடனும், உணர்ச்சிமயமான உரையாடல்களுடனும், எதிர்பாராமல் எழும் சிறு சிக்கல்களுடனும், அற்புதமான ஒரு எழுத்தோவியமாகப் படைக்கப்பட்டுள்ளது. உண்மையில் மீனாக்ஷி திரும்பிச் சென்றபோது இவ்வாறு ஒரு திருமணம் நிகழ்ந்ததா என நாமறியோம். நடந்திருக்கலாம் என எண்ணவைக்கும் படைப்பும் பாத்திரங்களும் நிகழ்வுகளும் பிரமிப்பை உண்டுபண்ணுகின்றன. அக்காலத்தில் நாம் பார்க்கக் கொடுத்து வைக்காத ஒரு தெய்வீகத் திருமணத்தை ஆசிரியர்  நமக்காக அருமையாக நடத்தித் தந்துள்ளார். தன் அருமைப் பெண்ணின் திருமணமாகவே தானும் அதனுள் ஆழ்ந்துவிட்டார் எனலாம்.

           சீர் வரிசைகள் சேர்ப்பதாகட்டும், ஒரு நாட்டு மக்கள் அனைவரும் உண்டு மகிழும்வண்ணம் சமையல் கட்டுகள், சமையல்காரர்கள் எனப் பந்தல் அமைப்பிலிருந்து ஒவ்வொரு நிகழ்ச்சியாக நுணுக்கமாக விளக்கியிருப்பது நமக்கு வியப்பையும் பிரமிப்பையும் ஒருங்கே உண்டாக்குகிறது,  திருமண நிகழ்வுகளை விஸ்தாரமாகத் தொடர்ச்சியாக அது ஒரு தெய்வத்திருமணம் எனும் தொனியில் விவரித்திருப்பது இன்னொரு தெய்வீகம். புத்தகத்தைப் படித்துத்தான் அதனை அனுபவிக்க முடியும்.

           உதயன் செண்பகராமனுக்கு ஆரம்பத்திலிருந்தே ஏதோ உள்ளுறுத்தல் – அசம்பாவிதம் ஏதோ நடந்துவிடும் என்று; வெகு எச்சரிக்கையாக இருக்கிறார் அவர். அரசர் மீனாட்சியை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு பித்துப்பிடித்தவர் போல இருக்கிறார், உடல்நிலை வெகு மோசமாக ஆகிவிடுகிறது. இத்தனை குழப்பங்களுடனும் கதை விறுவிறுப்பாக நகருகிறது. இப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டத் தெய்வத் திருமணத்தைப் பற்றி, அது நடந்த விதத்தை விறுவிறுப்புக் குன்றாமல் எழுதி ஒரு சிறு பிரச்சினையையும் உள்ளடக்கி நம்மைக் கவலைப்பட வைக்கிறார் ஆசிரியர். பின் மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் மதுரை சென்று சேர்ந்தார்களா? என்ன நடந்தது என்பதனை நான் சொல்லி முடித்துவிடலாம். ஆனால், நீங்கள் படித்து ரசிக்க வேண்டாமா?

           ஆசிரியரின் சில சொல்லாடல்கள் உள்ளத்தை வருடுகின்றன;

           அரசர் சொல்கிறார்: “ஒண்ணும் குறையக் கூடாது. கூடட்டும்; குறைஞ்சிரப்பிடாது; இதில்லாம ஒருத்தி எப்பிடி குடும்பம் நடத்துவான்னு ஒருசொல் வந்திரப்பிடாது,” என மகாராஜா பலமுறை சொன்னார்.

           ‘உள்ளத்தின் எடையால் கால்கள் தளருமென அப்போதுதான் உணர்ந்தேன்’ என ஓரிடத்தில் உதயன் செண்பகராமன் சொல்கிறார்.

           ‘சேரன் மடியில் இருந்துட்டுப் பண்டியன் தலையில் கால்வைச்சு ஆடுற மகள்னாக்கும் பாட்டு’- என பேசிக் கொள்கின்றனர்.’

           ‘மகாராஜா விம்மலை அடக்கமுடியாமல் தலைகுனிந்தார். மீனாக்ஷி அம்மை சப்பரத்திலிருந்து இறக்கப்பட்டு மகாராஜாவின் கால்தொட்டு வணங்குவதற்காகக் குனிந்தாள். மகாராஜா பதறி இருகைகளாலும் அவள் தலையைத் தொட்டு, “தீர்க்க சுமங்கலியா இரு. மகாமங்கலையா இரு,” என்றார். பின்னர் உரத்த கேவல்களுடன் அழத் தொடங்கினார்.’

           ஆகா! இது தெய்வத்தை நம்மிடை வாழும் ஒரு மனுஷியாகக் கொண்டு, நம் வீட்டுக் குழந்தை, மகளாகக் கண்டு மகிழும் பேறல்லவோ? மீனாக்ஷி நமக்கு மிகவும் அந்நியோன்னியமாகிப் போகிறாள். என் மகள், என் தாய், என்வீட்டுப் பெண்குழந்தை கல்யாணமாகிப் புருஷன் வீடு செல்கிறாள். கண்ணீர் ஆறாகப் பெருகுகிறது.

           “சரியான குறும்புச் சிறுக்கி; யார்னு காட்டிட்டுப் போய்ட்டா,” அன்னையைப் பற்றி இவ்வாறு பேசி மகிழுமொரு சமுதாயம் அவளைத் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே கொண்டாடியுள்ளது.

           கடைசி இரு பக்கங்களில் ஒரு பெரும் சிக்கலை எழுப்பி, அந்த முடிச்சையும் அவிழ்த்து மங்கலமாக முடித்து வைத்துள்ளார் ஆசிரியர்.

           கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

           விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் கிடைக்கிறது.

                                                                          (விரைவில் மீண்டும் சந்திப்போம்)