
சாருமதிக்கு, அவள் மாமியார் சொல்வதின் நியாயம் புரிந்தது. எப்பவுமே அனுசரணையான புகுந்த வீடு சாருமதிக்கு. அவளை என்றைக்குமே அவர்கள் வித்தியாசமாக நடத்தியது இல்லை. அன்பைப் பொழிந்தார்கள்.
“ரொம்பச் சரியா சொல்லியிருக்கேள் மா. யார் சொல்வா இப்பிடி!” என்று சிலாகித்துக் கொண்டாள் சாருமதி. அவள் கணவனும் அதை ஆமோதித்தான். எங்கே தங்கள் அறிவுரையை சாருமதி ஏற்றுக் கொள்ள மாட்டாளோ என்று அவள் கணவனும் மாமியாரும் பயந்திருந்தார்கள். அவள் கணவன் கூட முடிவை சாருமதியிடமே விட்டு விட வேண்டும். நாம் அதில் தலையிடக் கூடாது என்று சொல்லியிருந்தான். ஆனால் எந்தவித ஆட்சேபமும் இல்லாமல் அவர்கள் சொன்னதை சாருமதி ஏற்றுக் கொண்டது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
“சாரு, உங்கப்பா தனியா சமச்சி, சாப்டுண்டுனு தன் காரியத்தை தானே பண்ணிண்டு இருக்காரு. உதவிக்கும் யாருமில்லை. பசு மாட்டை வச்சி வேற பராமரிச்சிண்டு இருக்கார். இந்த கெடுபிடியில வாயும் வயிறுமா இருக்கற உன்னையும் எப்பிடி கவனிச்சிக்க முடியும்? உங்கம்மா இருந்தா கேள்வியே இல்லை. கண்டிப்பா இத்தனை நேரம் உன்னை அழைச்சி சீராட்டி இருப்பா! நாங்களும் சந்தோஷமா அனுப்பி வைச்சிருப்போம்.”
“அதனால சாரு, இங்கேயே இருந்துடு. இங்கேயே வளைகாப்பு, சீமந்தம் பண்ணிப்பிடலாம். பிரசவமும் இங்கேயே வச்சிக்கலாம். நம்ப கிட்ட கார் இருக்கு, டிரைவர் இருக்கார். எப்ப வேணுமின்னாலும் ஆஸ்பத்திரிக்கு போயிக்கலாம். அப்பா ஒண்டியாளு. பொம்மனாட்டி யாராவது இருந்தா அது விஷயம் வேற. தலைப்பிரசவம் வேற . உன்னை வச்சிண்டு சிரமப் பட்டுப் போயிடுவார். நீயே அப்பாகிட்டே பக்குவமா சொல்லிடு”
சாருமதிக்கு அவர்கள் சொல்வதின் நியாயம் நன்றாகவேப் புரிந்தது. தன்னுடைய நலனை உத்தேசித்துதான் சொல்கிறார்கள் என்பதும் தெரிந்தது. கணவரும் மாமியாரும் சொல்வது மனதுக்கு ஹிதமாக இருந்தது. எல்லாம் சரிதான். ஆனால்…..இந்த ஆனால்தான் அவளை விட வில்லை. அப்பாவால் முடியாதுதான். கிராமம் வேற. அப்பா கிட்ட கார் கிடையாது. யார் கிட்டயாவது கெஞ்சணும். இங்கேன்னா ஆளு அம்பு இருக்கு. வாகனம் இருக்கு. இருந்தாலும் ….யோசிக்க ஆரம்பித்தாள் சாருமதி. ஏதோ ஒரு குறை அவள் மனதில் பட்டது.
வெளியே வானம் இருட்டிக் கொண்டு வந்தது. இன்றும் நாளையும் மழை உண்டு என்று சொல்லியிருக்கிறார்கள். கொஞ்சம் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. சாருமதி குழப்பமாக உணர்ந்தாள். மெல்ல நடந்து வாசலுக்கு வந்தாள். அங்கும் இங்குமாக மின்னல் வெட்டியது.
“சாரு கண்ணா. இந்த நேரத்துல வாசல்ல நிக்க வேணாம்டா. உள்ள வந்துடு.” அவள் கணவன்தான்.
சாருவின் அகக் கண்களில் அவள் அப்பா நிலைத்து நின்றார். அம்மா இல்லை என்பதால் அப்பாவை விட்டுக் கொடுத்து விட முடியுமா?! தாயுமானவர் மாதிரி, அன்போடும், அக்கறையோடும், செய்ய வேண்டியது எல்லாம் செய்து அனுப்பி வைத்தவர் ஆயிற்றே. அம்மா இல்லை என்று எதில் குறை வைத்தார்?! என்னைக் கண் கலங்காமல் பார்த்துக் கொண்டாரே! அவர் வாயில் அதிகாரமாக ஒரு சொல் வந்ததில்லையே! எப்பவுமே அவர் வார்த்தைகளில் அன்பும் அக்கறையும் தூக்கலாகவே இருக்குமே! எந்தக் குழப்பமும், தடுமாட்டமும் இல்லாமல்தானே திருமணத்தை நடத்தி வைத்தார்? எப்படி எல்லாம் விசாரிச்சு, அனுசரணையான குடும்பமா இருக்குமா என்று ஒன்றுக்கு நூறு தடவை யோசிச்சிப் பார்த்து, எவ்வளவு தூரம கவனமாக மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்தார்!?
அப்பா என்றாலே சாருமதிக்குக் கண் கலங்கி விடும். சதா பூஜையும் ஜபமுமாக இருப்பவர். வாயில் ஏதாவது ஸ்லோகம் வந்து கொண்டே இருக்கும். அதுவும் வெறுமனே ஸ்லோகமாக இல்லாமல் ராகமாகச் சொல்லுவார். கேட்க மிகவும் இனிமையாக இருக்கும்.
“அப்பா, என் மாமியார் சொல்றது நியாயம்தானே!? நா இங்கேயே இருந்துடட்டுமா. புகுந்த வீட்டுலயே குழந்தையை பெத்துகிடட்டுமா? நீ ஒண்டிக்கட்டை. உன்னால எப்பிடிப்பா என்னைக் கவனிசிக்க முடியும்? நம்ப ஊர்ல நல்ல ஆஸ்பத்திரியும் கிடையாது. கவர்மென்ட் ஆஸ்பத்திரிதான். அங்க எல்லாம் சுத்தம் போறாதேப்பா. நீ என்ன செய்வே? என்னை நினைச்சி நினைச்சி மாஞ்சிப் போயிடுவியே”
மனதிற்குள்ளாக அவரோடு பேசிப் பார்த்தாள். அப்பா ஒத்துக் கொள்வாரா? இல்லைப் பிடிவாதம் பிடிப்பாரா? முதல் பிரசவம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்பா எப்பிடியோ சமைச்சிக்கிறார். ஒருத்தருக்கு என்ன வேண்டி கெடக்கும்பார். சாதமும் பருப்பும் குக்கர்ல வச்சிட்டா தீர்ந்தது பிரச்சனை. பருப்பைப் பிசைஞ்சி சாப்பிட்டுட்டு மோர் ஊத்திக்கலாம்பார் ஆனா எனக்கு? எனக்குன்னு இது வேணும், அது வேணும்னு அப்பா கிட்ட கேட்க முடியுமா? அப்பிடி நான் கேட்டுட்டா என் ஆசையை நிறைவேத்தி வைக்கணும்னு துடிச்சிப் போயிடுவாரே? ஆனா அவரால என்ன செஞ்சித் தர முடியும்?” என்று நினைத்தவள், பிறகு, “ஏன் நான் சமைக்க முடியாதா? அப்பாவுக்கு நாலு நாளைக்காவது வாய்க்கு ருசியா சமைச்சிப் போடலாமே! பிரசவம் ஒரு சாக்குன்னு வச்சிண்டு ஒரு மாசமாவது அப்பாவை கவனிக்கலாமே! அவருக்கு வேண்டியதை நா செஞ்சிப் போடலாமே!” இப்படியும் அப்படியுமாக எண்ணி எண்ணி குழம்பிப் போனாள் சாருமதி.
மழை இலேசாகத் தூறத் தொடங்கி இருந்தது. அந்த நேரம் டிடிங்னு அழைப்பு மணி அடிச்சது. கதவைத் தொறந்துப் பாத்தா சாட்சாத் அப்பாவேதான். தலையில துண்டு. தோள்ல ஒரு வாழைத்தார். கைல கனமான பை.
சாருமதிக்கு கண்கள் துளிர்த்து விட்டன. எல்லோரும் மிகுந்த அன்போடு வரவேற்றார்கள். ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சக் கொத்து, வாழைப்பழம், கடையில் வாங்கிய இனிப்பு என ஆசை ஆசையாக வச்சிக் கொடுத்தார்.
“மாமி எனக்குச் சம்பிரதாயம் எல்லாம் தெரியாது. நான் கிராமத்தான். இது எத்தனையாவது மாசம்னு கூட சரியாத் தெரியலை. தயவு பண்ணி சாருவை எங்காத்துக்கு அனுப்பி வைங்கோ. ஒரு வாரம் இருந்துட்டு வரட்டும். சீமந்தம் வளைகாப்பு எப்போன்னு இப்பவே முடிவு பண்ணிடலாம். சீமந்தம் ஆனப்பறம் நான் சாருவை கூட்டிண்டு போயிடறேன்”
திகைத்துப் போய் நின்றனர் அனைவரும். சாருவின் கண்களில் கண்ணீர். அப்பா என்று விக்கித்துப் போனாள். அவள் கணவனும், மாமியாரும் கூட அப்பாவின் கலப்படமில்லாத அன்பில் குழைந்து போனார்கள். தங்கள் தரப்பு நியாயத்தை அப்பாவிடம் பேசிப் பார்த்தனர். ஆனால் அவர் விடுவதாயில்லை. “மாமி மன்னிச்சிக்கணும். இது என்னோட கடமை. ஆத்துக்காரி இல்லைங்கறதனால இதை விட்டுட முடியுமா? எல்லாம் நான் பாத்துக்கறேன். இப்பத்தைக்கு நான் கூட்டிண்டு போய் ஒரு வாரம் வச்சிண்டு அனுப்பறேன். பாக்கியை அப்பறமா பேசிக்கலாம்.”
******
யார் சொல்லியும் கேட்காமல், எதைப் பற்றியும் பயப்படாமல் பிடிவாதமாக அப்பா அழைத்துக் கொண்டே வந்து விட்டார். “ஏம்மா நம்ம கிராமத்துல யாருக்கும் குழந்தை பொறக்கறதே இல்லையா!? இதென்ன உலகத்துல இல்லாத புதுசான விஷயமா? மருத்துவச்சி அடுத்தத் தெருவுலதான் இருக்கா. கவர்மென்ட் ஆஸ்பத்திரி இருக்கு. அங்க இருக்கற எல்லா டாக்டரையும் எனக்கு நன்னாத் தெரியும். அடுத்தத் தெரு மளிகைக் கடை செட்டியார் கிட்ட வில் வண்டி இருக்கு. எதுக்கு இவ்வளவு யோசிக்கற. இது ரொம்ப சாதாரண விஷயம். பயப்படறதுக்கு இதுல எதுவுமே இல்லை”
சாருவுக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் அப்பாவை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. நெஞ்சு நெகிழ்ந்து போய், தன் வாய்க்குள்ளாகவே, அப்பா, அப்பா என்று உருகிப் போனாள். அதே சமயம் அவளுக்குக் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. தலைப்பிரசவம் ஆச்சே! அப்பாவுக்கு என்ன புரியும்? ஆனால் அவர் விட்டுக் கொடுக்கவில்லையே. அம்மா இல்லை என்று காரணம் சொல்லி விலகிக் கொண்டிருக்கலாம். கணவனும் மாமியாரும் கூட அதைத்தானே சொன்னார்கள். அப்படி அவர் விலகிக் கொண்டிருந்தால் யாரும் அவரை எதுவும் சொல்லிவிடப் போவதில்லை. எல்லோருமே பாராட்டத்தான் செய்வார்கள்.
அப்பா கவலைப் பட்டதாகவேத் தெரியவில்லை. என்றும் போலவே இருந்தார். அடுத்த நாள் காலை அவளுக்காக அவர் தயாரித்து வைத்திருந்தவைகளைப் பார்த்த சாருமதி திகைப்பின் உச்சிக்கேப் போனாள். புளிப்பும், உறைப்புமாகப் புளிக்காய்ச்சல், இலந்தை வடை, மாங்காய் தொக்கு என ஜமாய்த்திருந்தார். சாருமதி கதறி விட்டாள். அவளால் தாங்க முடியவில்லை. “எப்பிடிப்பா?” என்று திக்கித் திணறினாள். “எப்பிடியா? நீங்க எல்லாம் சொல்வேளே அதுவேதான். யு டியுப் பாத்து செய்யக் கத்துண்டேன். இருபது நாளா இது நடக்கறது. முத பத்து நாள் சரியா வரலை. அப்பறம் மெதுவா வசப் பட்டது. பண்ணிப் பாத்து சரியா வராம கொட்டிட்டு, மறுபடியும் பண்ணிப் பாத்து, மறுபடியும் கொட்டிட்டு, மறுபடியும் செஞ்சி….. உனக்குப் பிடிச்சிருக்கா பாருடா சாரு”
வெடித்து அழுதே விட்டாள் சாரு. அம்மாவின் அன்புக்கு ஈடான இப்பிடி ஒரு அப்பா கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் பகவானே என்று உருகிப் போனாள். கண்களைக் கண்ணீர் திரையிட்டு மறைக்க வீடே தெரியவில்லை அவளுக்கு. அப்பாவின் பாசம் அவளைப் புரட்டிப் போட்டது. இப்படிக் கூட ஒரு ஆண் இருக்க முடியுமா?
********
அன்று இரவும் மழைதான். அடித்துப் பெய்யவில்லையே தவிர விட்டு விட்டுப் பெய்துக் கொண்டுதான் இருந்தது. அப்பாவின் வீடு இரண்டு கிரவுண்ட் இருக்கும். பின்னால் பெரிய தொழுவம். எனவே கோமய வாசனை, பசுஞ்சாண வாசனை என்று வீடே நிறைந்திருந்தது.
இரவில் மஹா கத்திக் கொண்டே இருந்தது. அப்பாவும் அடிக்கடி சென்று மஹாவைக் கவனித்துக் கொண்டே இருந்தார். தொழுவம் முழுவதையுமே சுத்தமாக வைத்திருந்தார். பச்சைப் புல்லால் மெத்தை மாதிரி செய்திருந்தார். இனிமையான இசை,ஷஷாங்கின் புல்லாங்குழல், நாள் முழுவதும் கேட்கும்படி அமைத்து வைத்திருந்தார். மஹா வெறும் பசு அல்ல அது சாருவின் சகோதரி என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
இரவு மணி பனிரெண்டு இருக்கும். மஹாவின் கத்தல் சற்று வித்தியாசமாகவும் அதிகமாகவும் இருந்தது. திடீரென்று விளக்கைப் போட்டு விட்டு சாருமதியை எழுப்பினார் அப்பா.
“கண்ணம்மா பின் பக்கம் வாடா. மஹா குட்டிப் போடப் போறா. கன்று வெளிய வரும் போது இரண்டு பக்கமும் தலை இருக்கற கோமாதாவைப் பார்க்கறது ரொம்ப புண்யம்.”
மெதுவாக எழுந்து பின் பக்கம் வந்தாள் சாரு. தரையெல்லாம் சொத சொதவென்று இருந்தது. இலேசான தூறல் இருந்து கொண்டே இருந்தது. மாட்டுத் தொழுவத்தில் பளீரென்று வெளிச்சம் தெரியும்படி விளக்குகளை அமைத்திருந்தார் அப்பா. இசை மெலிதாகக் கேட்டுக் கொண்டே இருந்தது. மஹா படுத்திருந்தாள். அவள் வாயருகே பச்சை புல்கட்டு, புண்ணாக்கு கலந்த நீர் என்று, படுத்தபடியே குடிக்கும் படி சிறிய சிறிய அகலமானப் பாத்திரங்களில் வைத்திருந்தார்.
தண்ணீரும் புல்லும் போடப் போட,
ஷட்ர ஸாதீனி மாஹேய்யை
காமதேன்யை நமோஸ்துதே!
திவ்யான்னம் நிவேதயாமி”
என்று சொல்லிக் கொண்டே மஹாவுக்கு உணவு கொடுத்தார்.
காமதேனு சமுத்பூதே சர்வாபீஷ்ட பலப்ரதே
ஹரயே நம: மஹாலக்ஷ்மையை நம:
என்றும் அவர் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.
குட்டி கீழே தொப்பென்று விழுந்து அடிபட்டுக் கொண்டு விடாமல் இருக்க அந்த இடத்திலும் பச்சை புல் படுக்கை. ஆச்சரியமாக இருந்தது சாருவுக்கு. எப்பிடி அப்பா பாத்து பாத்து செஞ்சிருக்கார்? அம்மா இருந்த வரைக்கும் அப்பா இதுக்கெல்லாம் வந்ததே இல்லை. மாடு கிட்டயே வர மாட்டார். எல்லாமே அம்மாதான். அம்மா போன இந்த ரெண்டு வருஷங்களுக்குள்ள இவ்வளவு மாறிட்டாரா? சாருமதியால் நம்பவே முடியவில்லை.
தலை வெளியேத் தெரிய ஆரம்பித்தவுடன் மஹாவை பிரதிஷணம் செய்தார் அப்பா. சாருவையும் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு பிரதிஷணம் செய்வித்தார். ஈரத்தைப் பொருட்படுத்தாமல் கீழே விழுந்து மஹாவை நமஸ்கரித்தார். சாரு இருந்த இடத்திலேயே பாவனையாக நமஸ்கரித்துக் கொண்டாள். அப்பா ஏற்கனவே தயார் செய்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்திருந்த ஹாரத்தியை எடுத்து மஹாவுக்கு சுற்றினார். மெல்லிய குரலில்
ஜயதி ஜய ஜய சகல சதமை சதா
மங்களா ஹாரிணி,
சதா மங்கள ஹாரிணி,
சதா மங்கள ஹாரிணி
என்று ஹாரத்திக்குப் பாடினார். சந்தோஷத்தின் உச்சிக்கே போனாள் சாருமதி. எப்படி, எப்படி என்று அவள் திணறினாள்.
அப்பா அவளை வீட்டு வாசலில் இருந்து பார்க்க சொல்லி விட்டு மஹாவை நெருங்கினார். கன்றுக் குட்டியைப் பிடித்து லாவகமாக மெதுவாக இழுத்தார். மஹாவும் முக்கியது. மெல்ல மெல்ல தலை முழுவதுமாக வெளியே வர தலையைச் சுற்றி இருந்த மெல்லிய பிளாஸ்டிக் துணி போன்ற படலத்தை கைகளால் விலக்கி குட்டியை நன்றாக மூச்சு விடச் செய்தார். விடாமல் வாயில் ஸ்லோகம் சொல்லிக் கொண்டே குட்டியை இழுத்தார்.
இழுக்க இழுக்க சில நிமிடங்களுக்குள் குட்டி முழுவதுமாக வெளியில் வந்து விழுந்தது. மெத்தென்ற பச்சை புற்கட்டுகள் மேல் குட்டி விழுந்தது. அப்பா அதன் வாயில் ஸ்வாதீனமாக கை விரலை விட்டு சவ்வு போன்றிருந்த திரவங்களை வெளியேற்றினார். காது மடல்களில் படிந்து கிடந்த அழுக்குகளை விரல்களால் நீவி நீவி வெளியேற்றினார். உடல் முழுவதையும் வெந்நீரில் நனைத்த துண்டால் துடைத்து விட்டார். அதே போல மஹாவின் தொடை பகுதிகளையும் வெந்நீர் விட்டு சுத்தப் படுத்தினார்.
மஹாவும் தன் பங்குக்கு குட்டியை விடாமல் நக்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தது. அரை மணியில் அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு, தலையில் ஜலம் விட்டுக் கொண்டு உள்ளே வந்தார் அப்பா. சாருமதி பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டே இருந்தாள். “நாளைக்குக் கோனாருக்கு கால் பவுன் மோதிரம் தானம் கொடுத்துடணும்” என்று சொல்லிக் கொண்டே படுக்கையைத் தட்டிப் போட ஆரம்பித்தார்.
“அப்பா” என்று அவள் அழைக்கக் குரலே எழும்ப வில்லை சாருவுக்கு. விக்கித்துப் போனது அவளுக்கு. கண்கள் கரகரவென்று கண்ணீரைச் சொறிந்தன. என்ன செய்வது என்றே புரியாமல் அப்பாவை கட்டிக் கொண்டாள்.
அந்த கணமே அவள் மனதில் முடிவு செய்து கொண்டாள். பிரசவம் இங்கேயே, அப்பாவின் மேற்பார்வையில்தான் என்று. இது வெறும் அப்பா மட்டுமாக இல்லை. இதுவும் தாய்தான் என்று அந்த கணத்தில் புரிந்துக் கொண்டாள் சாருமதி. இன்னொரு அம்மா!
*****************************************************************
(இது கலைமகள் பத்திரிக்கை நடத்திய அமரர் கி.வா.ஜ நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை. ஏப்ரல் 2021ல் கலைமகள் பத்திரிக்கையில் பிரசுரமாயிற்று.)
எழுதியது : அனந்த் ரவி
அலைபேசி எண் : 9444018042 :
