குழந்தைகள் கெட்டதைப் பேசுவதில்லை
அவர்கள் கேட்டதைத்தான் பேசுகிறார்கள்


என்று கூறுவேன் நான். வீட்டில் மற்றும் வெளி இடங்களில் மற்றவர்கள் பேசும் வார்த்தைகள், அவர்களின் பழக்க வழக்கங்கள் இவை, குழந்தைகள் மனதில் அவர்கள் அறியாமலேயே பதிந்து விடுகின்றன.
எந்த ஒரு தாயும் தந்தையும் தமது குழந்தைகள் தீய வழியில் செல்லவேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். தங்களைத் தந்து, குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார்கள்.
இது ஒருபுறம் என்றால், வீட்டுச் சூழலை விட வெளிச் சூழ்நிலை – அரசியல், சாதி, மதம், நேர்மையற்ற செயல்கள், வன்முறை, மதமாற்றம், ஒழுக்கமின்மை, எப்படியாவது பணம் அல்லது பதவியை அடைவது, பத்திரிகைகள், மீடியாக்கள் இவை தவிர, இருக்கவே இருக்கிறது செல் போனும், தொலைக்காட்சியும். எல்லாவற்றையும் மீறி இந்தத் தலைமுறை வளரவேண்டும் – வாழ வேண்டும்.
விழுமியங்கள (values) என்ற ஒன்றை மறந்த சூழ்நிலை – இப்படி இருக்கிறது. பள்ளிகளில கூட, நமது கலாச்சாரம், பண்பாடு முறையாகக் கூறப்படுவதில்லை. மொழி உணர்வு, கூட்டுக்குடும்பம், தேசியம், தெய்வீகம் , நட்பு, பெரியவர்களுக்கு மரியாதை, இறை பயம், மனசாட்சி பயம் என இவை ஒரு காலத்தில் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புக்கள் (moral instructions class) வழியாகக் கற்றுத்தரப்பட்டன.
பள்ளி மாணவர்கள் கைகளில் எப்படி அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் இருக்கின்றன? போதைப் பொருட்கள், மதுவகைகள் எப்படி வருகின்றன. அப்போதெல்லாம் ஆசிரியர்கள் எதிரே வந்தால், சைக்கிளை விட்டு உடன் இறங்குவோம். அது அவர்களுக்குக் காட்டும் மரியாதை. எழுத்தறிவித்தவன் இறைவன் என்றே படித்தோம். இன்றோ இரண்டையும் இழித்துப் பேசுபவர்களே போராளிகள் தலைவர்கள் என்று ஆகிக்கொண்டு வருவது காலத்தின் கோலம் அல்லவா.
சுமார் 40 அல்லது 50 வருடங்கள் முன்னர்வரை திரைப்படங்களின் கதைகள், பாடல்கள், வரிகள் கூட கேட்கும்படியாகவும், வாழ்க்கைக்கு உதவியாகவும் இருந்தன. இப்போது கேட்கவே வேண்டாம். சிறு உதாரணம் – அப்போதைய படங்களின் பெயர்கள் – பாசமலர், பாவ மன்னிப்பு, உயர்ந்த மனிதன், கௌரவம், ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, விடிவெள்ளி, தியாகம், படித்தால் மட்டும் போதுமா – இப்படி இருந்தது. இப்போது பாருங்கள் – பொறுக்கி, பிச்சைக்காரன், கொலைகாரன், கொலை, இடியட், பல்லு படாமல் பாத்துக்க , நாய் சேகர், சரக்கு, ஓ மை கோஸ்ட் – இவைதான் இப்போதைய பெரும்பான்மையான படங்களின் பெயர்கள். அப்புறம் எங்கிருந்து நேர்மறை எண்ணங்கள் ஏற்படும் ?
அந்தக் காலத்தில் பல திரைப்படங்களில் நல்ல விஷயங்கள் கூறப்பட்டிருக்கிறது. குழந்தைகள், சிறுவர்கள், மாணவ மாணவியருக்கு என்று தமிழ்த் திரைப் படங்கள் தந்த பாடல்கள் தான் எத்தனை !எத்தனை
அப்போது வெளிவந்த கப்பல் ஒட்டிய தமிழன் படத்தில் கூட பாரதியின் குழந்தைகளுக்கான பாடல் இடம் பெற்றது
ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி
அன்பு நிறைய உடையவர் மேலோரே
ஜாதி வேண்டாம் – நீதி வேண்டும் – அன்பு வேண்டும் என்கிறான் மீசைக் கவிஞன்.
இதேபோல, அப்போதெல்லாம் பல தமிழ்ப் படங்களில் நீதி போதனைகள், வாழும் முறைகள் பற்றிய பாடல்கள் இடம் பெற்றன.
நான் பெற்ற செல்வம் என்ற படத்தில், கவி கா மு ஷெரீஃப் என்ற இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அற்புதமான தமிழ்க் கவிஞர் ஒரு பாடல் எழுதுகிறார் –
மாதா பிதா குரு தெய்வம் அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
ஓதாதிருப்பது செய்யோம் –நாம் ஒழுங்குடனே பள்ளிக்கு செல்வோம்
ஓதி உணர்ந்தது போலே என்றும் உண்மையாய் நடந்து உயர்வோம்
தெய்வம் தொழுதிட வேண்டும்
நம் தேசத்தின் மீது அன்பு செலுத்திட வேண்டும்
கைத்தொழில் பழகிட வேண்டும்
காந்தியின் சொற்படி நடந்திட வேண்டும்
என்னைப்போல் ஒருவன் என்ற படத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க, டி எம் எஸ் பாடும் பாடல். கண்ணதாசன் பாடலுக்கு இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.
தங்கங்களே நாளைத் தலைவர்களே
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்
அறம் செய்ய விரும்பு என்றாள் ஔவை தருமம் செய்யுங்கள்
அன்பே தெய்வம் என்றார் பெரியோர் அன்புடன் வாழுங்கள்
நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே
கூடும் உறவு கூட்டுறவென்று ஒன்றாய் வாழுங்கள்
கூடிய பிறகு குற்றம் காணும் கொள்கையை தள்ளுங்கள்
என்றும் ஒன்றே செய்யுங்கள் ஒன்றும் நன்றே செய்யுங்கள்
நன்றும் இன்றே செய்யுங்கள் நீங்கள் எதிலும் வெல்லுங்கள்.
வீரனின் வாழ்விலே தோல்வியே இல்லையே…
நடிகர் திலகம் நடித்த எங்க மாமா படத்தில வரும் பாடல் –
செல்லக் கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா அம்மா
எம்ஜிஆர் அவர்கள் நடித்த, அரசிளங்குமரி படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின பாடல் –
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
நான் சொல்லப்போகும் வார்த்தையைக் கொஞ்சம் எண்ணிப் பாரடா
ஆளும் வளரனும் அறிவும் வளரனும்
அதுதான்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு
அதுவே நீ தரும் மகிழ்ச்சி
புலமைப்பித்தன் அவர்கள் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
நம்நாடு படத்தில் ஒரு பாடல்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும தந்தை நேர் வழிகாட்டும் தலைவன்
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்
மாணவ, மாணவியர்கள் எப்படி வளரவேண்டும், அறநெறி, தேசம், தர்மம், நேர்மை, உண்மை, நட்பு, இவற்றை அவர்கள் உணரவேண்டும் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு வந்த பாடல்கள் இவை போல பல உள்ளன.
இந்தத் தலைமுறைக் குழந்தைகள் இவற்றைத் தெரிந்துகொள்ள நாமும் கொஞ்சம் முயற்சி எடுப்போம். நல்ல தலைமுறையை உருவாக்குவோம.
