தொல்காப்பிய நிலத்திணைகளில் புதிய வரவு ஆறாம்நிலத்திணை
தமிழர் வாழ்ந்த சங்க இலக்கிய நிலங்கள் இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக மட்டும் இருக்கவில்லை, அக்கால மக்களின் வாழ்வியலோடும் இணைந்தவையாகவும் அமைந்திருந்தன. எனவேதான் புலம்பெயர்ந்து வடதுருவப் பகுதியில் வாழும் பெரும்தொகையான இன்றைய தமிழர்களின் வாழ்நிலங்களில் ஒன்றான பனியும் பனி சூழ்ந்த நிலத்தை ‘பனிப்புலம்’ என்று அழைக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. வித்தியாசமான இந்தப் பனிப்புலம்தான் ஆறாம் நிலத்திணையாக இடம் பெறுகின்றது.
சங்க இலக்கியத்தில் இடம்பெறும் ஐந்திணைகளுக்கும் நிலம் சார்ந்த பண்புகளும், உளம் சார்ந்த பண்புகளும் இருந்திருக்கின்றன. சில விசேட பண்புகளையும் தமிழர் வாழ்ந்த நிலங்கள் கொண்டிருந்ததாக சங்க இலக்கியம் எடுத்துக் காட்டுகின்றது. இத்திணைகளுக்குரிய மனிதருள் பொதுவாக எழும் உணர்வுகளையும் அது சார்ந்த வாழ்வியற் கூறுகளையுமே அவர்களின் பொதுப்பண்புகளாகச் சங்கஇலக்கியம் கூறுகின்றது. அந்த வகையில் நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப உரிப்பொருளாகப் பொதுவாகக் குறிஞ்சி நிலத்தில் புணர்தலும், முல்லை நிலத்தில் இருத்தலும், மருதநிலத்தில் ஊடலும், நெய்தல் நிலத்தில் இரங்கலும், பாலை நிலத்தில் பிரிதலும் என அந்தந்த நிலங்களுக்கான பொதுப்பண்புகளை இலக்கியம் எடுத்துக் காட்டுகின்றது. எனவே இதன் அடிப்படையில் ஆறாம் நிலத்திணையான பனிப்புலத்தில் ‘உருகல்’ பொதுப் பண்பாகக் கொள்வதற்கு இடமுண்டு.
ஆதிகாலத் தமிழர்கள் இயற்கையையே வழிபட்டு வந்தனர். அதன் பின் திணை வாழ்வில் தங்களைக் காத்தவர்களையும் கடவுளாக வணங்கினர். தமிழர் மரபில் ஐந்திணை வாழ்வியல், வழிபாடு முறைகள் இதனால்தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன.
‘மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச், சொல்லியமுறையான் சொல்லவும் படுமே’
என ஒவ்வொரு நிலத்திற்கான தெய்வங்களையும் குறிப்பிட்ட தொல்காப்பியர் பாலை நிலத்திற்கான தெய்வத்தைக் குறிப்பிடாததற்குக் காரணம் பாலை என்ற நிலப்பரப்பு அவர்காலத்தில் இருக்கவில்லை. நால்வகை நிலங்களுக்கும் முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன் ஆகிய கடவுள்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. தமிழ் இலக்கியத்தில் பாலைநிலத்துக் கடவுளாக கொற்றவையைப் பின்னாளில் குறிப்பிட்டிருப்பதை அவதானிக்க முடியும். எனவே புதிதாகத் தோன்றிய பாலை என்ற நிலமும் தமிழ் இலக்கியத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
பனி சூழ்ந்த ஆறாந்திணை நிலத்திற்குச் ‘சூரியக்கடவுளை’ குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். உத்தராயண புண்ணிய காலம் தை மாதம் தொடங்குவது மட்டுமல்ல, தை மாதப் பிறப்புத் தமிழரின் ‘பொங்கல்’ திருநாளாகவும், கனடாவில் தமிழர் மரபுத் திங்களாகவும் கொண்டாடப்படுகிறது.
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்று பாகுபாடுகளில், புலம் பெயர்ந்த அதிக தமிழர்கள் வாழும் கனடா போன்ற வடதுருவ பனி உறையும் நாடுகளின் நிலத்தை இந்தப் பொதுப் பண்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது ‘பனியும் பனிசார்ந்த நிலத்தின்’ உரிப்பொருள் பொதுப்பண்பாக ‘உருகல்’ என்பதை எடுத்துக் கொள்ளலாம். பனிக்கட்டி போன்றவை (வெப்பத்தினால்) இளகுதல், மனம் நெகிழ்தல், தாயக உறவுகளை எண்ணி ஏங்குதல், சொந்தங்களைப் பிரிந்த கவலையால் மெலிதல் போன்ற நிலைகளுக்கு இந்தப் பண்பு பொருந்தும் என்றே எடுத்துக் கொள்ளலாம்.
பனிநிலம், பனிக்காலம் முதற்பொருளாக வரலாம். தைமாதமும், சூரியக்கடவுளும் ஆறாந்திணை கருப்பொருளில் இடம் பெறுவது பொருத்தமாக இருக்கலாம். எனவே, ஆறாம் நிலத்திணை பனியும் பனி சூழ்ந்த பகுதியையும் கொண்டிருப்பதால், பனிப்புலம் என்று அழைக்கப்படலாம். ஆறாம் நிலத்திணை உரிப்பொருள் பொதுப்பண்பாக ‘உருகலும் உருகல் நிமித்தமும் என்பதால் ‘உருகல்’ என்பதை எடுத்துக் கொள்ளலாம்.
ஆறாம் நிலத்திணை தெய்வமாக சூரியக்கடவுளையும் ஆறாம் நிலத்திணை மாதமாக தைமாதத்தையும் எடுத்துக் கொள்ளலாம். தமிழ் நாட்காட்டியில் தமிழர்களின் முதல் மாதமாக இருப்பதாலும், மற்றும் இயற்கையை, உழவர்களை, விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளை மதித்து இந்த மாதத்தில் தமிழர்கள் பொங்கல் விழா எடுப்பதாலும், தை மாதத்தை கனடா அரசாங்கம் மரபுத்திங்கள் மாதமாக அங்கீகரித்திருப்பதாலும் தை மாதத்தை ஆறாம் நிலத்திணை மாதமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆறாம் நிலத்திணைக்கான பறவைகளாக வாத்து, சீஹள் (Seagull) என்று அழைக்கப்படுகின்ற வெண்ணிறமான கடற்புறா போன்றவற்றைக் குறிப்பிடலாம். சங்ககாலத்து இலக்கியத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் குருகு பறவையில் இருந்து இது சற்று மாறுபட்டது. இதன் அலகுகளும், கால்களும் சிறியனவாகும். இந்தப் பறவைகள் பனிக்காலத்தில் வேறு இடங்களுக்கு வலசை போய், பனிக்காலம் முடிந்ததும் திரும்பி வருகின்றன.
ஆறாம் நிலத்திணை மிருகங்களாக ‘கருங்கரடி, வெண்கரடி’ போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இதில் வெண்கரடி பனிப்பிரதேசமான துருவப் பகுதிகளில் வாழ்கின்றது. கருங்கரடி காட்டுப் பகுதிகளில் வாழ்கின்றது. இவை ஏனைய கரடிகளைவிட வித்தியாசமாய், உறைபனிக்காலத்தில் உணவைச் சேமிப்பதற்காக உறங்குநிலைக்குச் (Hibernation) செல்கின்றன.
பனிப்புலத்து மரங்களாக மேப்பில் மரங்களையும், ஊசியிலை மரங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
பூக்களாக ஊதாநிறமுடைய சிக்கோரி (Chicory) மற்றும் பெயர்ரி ஸ்லிப்பர் (Fairy Slipper) பூக்களைக் குறிப்பிடலாம்.
இங்கு பனிக்காலம் பெரும்பொழுதாகவும், முன்னிரவு சிறுபொழுதாகவும் இருக்கிறது. பனிக்காலத்தில் பகல் பொழுது குறைவானது என்பதால், முன்னதாகவே ஊரடங்கிவிடுகின்றது. மனித உணர்வுகளைத் தூண்டுவதற்கு இதமான குளிரும், வீட்டுக்குள் அருகாமையும் இதற்குச் சாதகமாகவே இருக்கின்றன.
பனிப்புலத்துத் தொழில் என்று பார்க்கும்போது, ஐந்து நிலத்திணைகளிலும் இருந்து புலம் பெயர்ந்த தமிழ் மக்கள்தான் ஏனைய பல்கலாச்சார இனத்தவர்களுடன் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். கல்வியறிவு உள்ளவர்கள் என்பதால் வர்த்தகம், வீடுவிற்பனை போன்ற பல தொழில் துறைகளிலும், குளிராடைகள் தயாரித்தல், பனிக்கால அணிகலன்கள், பனிக்கால விளையாட்டுப் பொருட்கள் போன்றவை தயாரித்தல், பனியகற்றுதல் போன்ற தொழில் துறைகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
இந்த நில மக்களின் விளையாட்டுகளை எடுத்துப்பார்த்தால், பனிக்காலத்தில் சிறுவர்கள் பனிப்பந்து செய்து ஒருவருக் கொருவர் எறிந்து விளையாடுவதும், பனிமனிதன் செய்து அலங்கரிப்பதும், குடும்பமாகப் பனிச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபடுவதையும், ஐஸ்கொக்கி என்று சொல்லப்படுகின்ற விளையாட்டில் பெரும் போட்டிகள் நடத்துவதையும் அவதானிக்க முடியும்.
தொல்காப்பிய நிலத்திணைகளோடு ஒப்பிடும் போது, ஆறாம் நிலத்திணை கனடா போன்ற, வடதுருவத்தைச் சூழ உள்ள பனி உறையும் நாடுகளில் புலம் பெயர்ந்து நிரந்தரமாக வசிக்கும் தமிழர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்றே சொல்லத் தோன்றுகின்றது. தமிழ் இலக்கியம் சார்ந்த சர்வதேசத்தின் பார்வை கனடாவின் பக்கம் திரும்பி இருக்கும் இச் சந்தர்ப்பத்தில், தமிழ் இலக்கியம் ‘ஆறாம் நிலத்திணை’ யையும் உள்வாங்கிக் கொண்டால், தமிழ் மொழியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கனடா போன்ற பனிப்புல நாட்டுத் தமிழர்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘ஆறாம் நிலத்திணை’ மக்களாகக் காலமெல்லாம் இடம் பிடித்துக் கொள்வார்கள். அடுத்த தலைமுறையினருக்கும் ‘ஆறாம் நிலத்திணைத் தமிழர்கள்’ பற்றி அறிந்து கொள்ள சிறந்ததொரு ஆவணமாகவும், அவர்களின் நிரந்தர முகவரியாகவும் இது அமையும் என்பதில் ஐயமில்லை.

