மழைத் துளியில் உதித்து மறுநாளே மாண்டு விடும்
காளான் அல்ல நான்!
மழைநீரை உறிஞ்சி தினந்தோறும் குடிக்கும்
ஆலமர வேர் நான் !
பூங்காற்றில் பொதிந்து பனித்துளியில் கரைந்து விடும்
துகள் அல்ல நான்!
புயற்கூற்றை எதிர்த்து கடலலையைத் தடுத்து நிமிர்ந்து
நிற்கும் காட்டரண் நான்!
மோகத்தில் தவழ்ந்து பெண் மொழியில் திளைத்து
செவ்வாயை சுவைக்கும் கவிஞனல்ல நான்!
மேகத்தைத் துளைத்து விண்வெளியில் பறந்து செவ்வாயைத்
தொட்டுவிடும் ஏவுகணை நான்!
பள்ளியில் உழன்றுமூளையை விற்று சொன்னதைச்
சொல்லும் கிளியல்ல நான்!
வேள்வியில் விளைந்து வெந்தழலில் வெந்து மண்ணையே
பொன்னாக்கும் ரசவாதி நான்!
ஆண்டவனே வந்தாலும் நெற்றிக்கண்ணால் சுட்டாலும்
மடிந்துவிடும் மானிடன் அல்ல நான்!
தாண்டவம் புரிந்தாலும் தரணியே சுழன்றாலும் தொடர்ந்து
வரும் பகலவன் நான்!
குன்றே பொடிந்தாலும் குவலயம் எதிர்த்தாலும் விளக்கிலே
மடியும் வீட்டிலல்ல நான்!
நன்றென தெரிந்தபின் நண்பனே எதிர்த்தாலும் நீதிக்குப்
போராடும் நேர்மையாளன் நான்!
