image

இந்தப்பெண் எழுதுவது பெண்ணுரிமை
பற்றிய புதுக் கவிதையா ?

அடிமைக்கு எதற்கு உரிமை என்று
       திமிர் பேசியது முந்தா நாள்!
நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வை என்று 
      ஒப்புக் கொண்டது நேற்று!
உன்னால் மட்டுமல்ல என்னாலும் முடியும் என்று
     செயலிலும் காட்டுவது இன்று!
அதனால் தான் முப்பத்து மூன்றைத் 
     தரத் தயங்குகிறான் அவன்!

யார் சொன்னார் பெண்ணுக்கு உரிமை இல்லை என்று?

தந்தை தாயுடன் இருக்கும் வரை அவர்
    சொன்னபடி கேட்கும்  உரிமை உண்டு!
கணவனுடன் இருக்கும் போது தற்காத்து 
    சொற்காத்து இருக்கும் உரிமை உண்டு!
மகன் தயவில் வாழும் நிலையிலும் 
   தன்னிலை எண்ணிக் கலங்கும் உரிமை உண்டு!

வீதிவரை நிறுத்திவிட்ட மனிதனிடம் 
      அவள் கேட்பது ஒரே ஒரு உரிமை! 
என்னை மனுஷியாக உன் துணைவியாக 
     என்று நீ ஏற்றுக் கொள்வாய்?

(ஆனந்த் ஸ்த்ரீ சக்தியின் புத்தாண்டு விழாவில் படிக்கப் பெற்ற கவிதை!)