
வீணை ஒன்று கையில் கொண்டு
வாணி அங்கு வந்தாள்
மோனை எதுகை சேர்ந்த பாடல்
பாடச் சொல்லிச் சென்றாள் !
தீபம் ஒன்று கையில் கொண்டு
லக்ஷ்மி அங்கு வந்தாள்
கோப தாபம் போக்கி விட்டு
பொன்னும் பொருளும் தந்தாள் !
வேலை ஒன்று கையில் கொண்டு
சக்தி அங்கு வந்தாள்
காலை முதல் மாலை வரை
வேலை செய்யச் சொன்னாள் !

மாலை ஒன்று கையில் கொண்டு
கோதை அங்கு வந்தாள்
மாலை கொண்டு மாலை வென்ற
பாவை பாடல் தந்தாள் !

ஆலோலம் பாடிக் கொண்டு
வள்ளி அங்கு வந்தாள்
வேலவனைக் கண்டு நின்று
வேண்டும் வரம் தந்தாள் !
