
சென்னையையே குலுக்கும் அளவிற்கு 11 மாடிக் கட்டடம் இடிந்து 61 பேர் பலி. கூலிக்கு வேலைசெய்யம் அந்த நைந்த உள்ளங்களின் நைந்த உடல்களைக் கூட நம்மால் எடுக்க முடியவில்லை! மாட மாளிகை கூட கோபுரம் கட்டி என்ன பயன்?
ஜூன் மாதம் முதல் மின் வெட்டு இருக்காது.. என்று சொல்லும் போதே பவர் கட்.! தமிழக மக்களுக்கு எதையும் தாங்கும் உள்ளமும் உதையும் தாங்கும் உடம்பும் எப்போதும் உண்டு!
மோடியின் முதல் பட்ஜெட்! பா.ப.ப. ( பார்ப்பதற்கு பட்ஜெட் பரவாயில்லை! ) நிதியமைச்சர் முதுகெலும்பு தேய 45 நாட்கள் நன்றாக ஹோம் வொர்க் செய்திருக்கிறார்! (அதனால் உரை படிக்கும் போது 5 நிமிஷம் ரெஸ்ட் இடையே எடுத்துக் கொண்டார்!) பீடி சிகரெட்டிலிருந்து ராக்கெட் வரை எல்லாவற்றையும் தொட்டிருக்கிறார்! தீட்டவில்லை! ஐஐடி ஐஐஎம் எல்லாம் வரப் போகுது! நல்ல காலம் தான்!அம்மா பாராட்டியிருக்கிறார். நல்ல சகுனம் தான்! நமோநாமிக்ஸ் இதுதானா? இனிமேல் தான் வருமா?
இன்ஜினியரிங் சேர்க்கையில் ஐடிக்கும் கம்ப்யூட்டருக்கும் மவுசு சற்று குறைந்து போயிருக்கிறது!
தமிழக மீனவர்கள்( இவர்கள் இந்தியர்கள் இல்லையா?) இலங்கையால் படும் துயரம் தொடர்கதையாகவே இருக்கிறது! அம்மாவுக்கு லெட்டர் எழுதினால் வேலை முடிந்துவிடுகிறது! இவர்களுக்கு?
காவேரியில் தண்ணீர் வரவில்லை! நமது கண்களில் தான் வருகிறது! பருவமழைப் பொய்த்துவிட்டது என்று ரமணன்கள் சொல்வதைக் கேட்டு நம் காது புளித்துவிட்டது.
காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருநை நதி என
மேவிய ஆறுகள் பலவோட திரு
மேனி செழித்தது தமிழ்நாடு!
பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் தான் ஞாபகம் வருகிறது!
ஐபிஎல் வெறி முடிந்து விம்பிள்டன் பைட்டும் முடிந்து ஃபுட்பால் கொலைவெறியும் முடிந்துவிட்டது! ஹோஸ்ட் பிரசீலுக்கு செமை நெத்தியடி! 7 கோல் போட்டு அதம் செய்துவிட்டது ஜெர்மனி!
வெற்றிக் கோப்பையும் ஜெர்மனிக்கே! சூப்பர்!

===================================================
Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
ஆலோசர்கள் : அனுராதா & அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
=====================================================
