

பாலசந்தர் அவர்களின் அரங்கேற்றம் நீர்க்குமிழியில் தான். ஆனால் அவர் இந்தியத் திரை உலகில் மாபெரும் சாதனையாளராய் தாதா சாகிப் பரிசு பெற்றவராக இருக்கிறார் என்பதை நினைத்தாலேஇனிக்கும். அவரது சரித்திரத்தை மரோசரித்ராவை புன்னகையின்எதிரொலியை வெற்றியின் புதுப்புது அர்த்தங்களை உங்கள் முன் முழுவதுமாக சொல்லத்தான் நினைக்கிறேன்.
சமுதாயச்சீர்திருத்தம் நகைச்சுவை ஆழமான காதல் இவை தான் பாலச்சந்தரால் போடப்பட்ட மூன்று முடிச்சுக்கள்.
தண்ணீர் தண்ணீர் என்று அலையும் சமுதாயத்தின் தப்புத்தாளங்களை நிமிர்த்த அவருக்கு என்றைக்கும் அச்சமில்லை அச்சமில்லை. வறுமையின் நிறம் சிவப்பு என்று சுட்டிக் காட்டி அதைத் தீர்க்க உன்னால் மட்டும் முடியும் தம்பி மனதில் உறுதி வேண்டும் என்றும் சொன்னார். நவக்கிரகத்தை வெறுமனே சுற்றி கண்ணா நலமா என்று கேட்டுக்கொண்டு பத்தாம் பசலியாக தில்லுமுல்லு செய்து பொய்க்கால் குதிரையாக ஓடும் மனிதர்களின் தவறுகளை நெற்றிக்கண் கொண்டு எரித்து நிழலை நிஜமாக்கியவர்.
அவர் ஒரு மணம் வீசும் ஜாதிமல்லி. அவரது பட்டணப் பிரவேசம் நம்க்குக் கிடைத்த அபூர்வ ராகம். அதில் சிந்துபைரவியும் கிடைக்கும். சக்ஸபோனின் டூயட்டும் கிடைக்கும்.
அவரது காவியத் தலைவிகள் நம்ம ஊர் கண்ணகி போல அக்னி சாட்சி சொல்லி தாமரை நெஞ்சங்களுடன் கல்யாண அகதிகளாக நான்கு சுவர்களுக்குள்ளும் இரு கோட்டிற்குள்ளும் நூல்வேலிக்குள்ளும் அடைந்து கிடப்பவர்கள் அல்ல.
அவரது நாயகனோ வெறும் அழகன், புன்னகை மன்னன் மட்டுமல்ல. சர்வர் சுந்தரமாக இருந்தாலும் மேஜர் சந்திரகாந்தாக இருந்தாலும் அவர்கள் வித்தியாசமானவர்கள் என்று நமக்குக் காட்டி சாதாரண இயக்குனர் நான் அவனில்லை என்றவர்.
பாமா விஜயத்திலும் மன்மதலீலையிலும் நகைச்சுவ உணர்வை அனுபவி ராஜா அனுபவி என்று வாரி வழங்கியவர். பழைய யுகத்துக்கும் வரப்போகிற கல்கி புது யுகத்துக்கும் பாலமாக இருப்பவர். நாடகமா திரைப்படமா என்று பூவா தலையா போட்ட மக்களிடம் அவை இரண்டும் ஒரு வீட்டின்இருவாசல் என்று உணர்த்தியவர்.
அவர் படங்கள் 47 நாட்கள் ஓடும். வெள்ளிவிழாவும் காணும். நூற்றுக்கு நூறு மார்க்கும் வாங்கும் தகுதிபடைத்தவர் பாலச்சந்தர் என்று சொன்னால் அது உண்மையே தவிர பொய் கொஞ்சம்கூட இல்லை. திரை உலகில் நாணலைப் போல் வளையாமல் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் பாலச்சந்தர் எப்போதும் அவர் ஒரு தொடர் கதை.
ஒருவர் மற்றொவருக்காகவே என்று ஏக்துஜேகேலியே என்று காதலுக்கு மொழி தடையில்லை என்று நிரூபித்தவ்ர். தமிழகத்திலிருந்து இந்தியா துணைக் கண்டம் முழுவதும் ஏன் அதற்கு மேல் தன் புகழிற்கு வானமே எல்லை என்பதை உலகறியச் செய்த மாமனிதர் பாலச்சந்தர்.
அவர் படங்களைப் பார்த்தால் பரவசம் எப்போதும் நம் நெஞ்சில் நிலவும்.

(பாலச்சந்தர் அவர்கள் முன்னிலையில் படித்துப் பாராட்டைப் பெற்ற வரிகள்)
