தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமியும் (1931-2005)  ஒருவர். மூன்று நாவல்களும் 60 சிறுகதைகளும் எழுதியவர். கனடாவில் இலக்கிய சாதனைக்காக ‘இயல்’ விருதைப் பெற்றவர். காலச்சுவடு என்ற இதழை நிறுவியவர்.  இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவரின் ஒரு கதையை அறிமுகப்படுத்துகிறேன்!

                     கோவில் காளையும் உழவு மாடும்

image

ஒரு கோவில்  பண்டாரம். அன்னக் காவடி எடுத்துக் கொண்டு மக்களிடம் காசு பொருள் வாங்கி ஒரு இடிந்த மாடன் கோவில் அருகே தங்கி  சமைத்துச் சாப்பிடும் யதார்த்த மனிதன். தரையில் கால் வைத்தால் நெருஞ்சி முள் அப்பிவிடும் கோவில் தான் பண்டாரத்தின் புகலிடம்.அவனுக்குத் துணை ஒரு கிழ நாய்.   கோவில் சன்னிதானத்திற்கு அருகில் இருக்கும் ஒரு மரப்பெட்டி  தான் அவனது சொத்து சம்பத்து. 

image

ஒரு நாள் ராத்திரி அந்தக் கோவிலில் தலை சாய்க்கப் .போக்கிடமில்லாத ஒரு கிழவர் வருகிறார். கருவாடு மாதிரி உடம்பு. லாபத் தேவதைக்கு சத்தைக் காணிக்கை கொடுத்து மிஞ்சிய சக்கை.காது கொஞ்சம் மந்தம் தான். அந்தக் ‘களை ’ முகத்தில் தெரிந்தது. பண்டாரம் பரிதாபப்பட்டு நாய்க்கு வைத்திருந்த  சோற்றை அவருக்குப் போடுகிறான் .

நாய்க்கு ஏமாற்றம் தான்.

காலையில் எழுந்ததும் பண்டாரம் காவடியை எடுத்துக் கொண்டு போய்விட்டான். கிழவர் தூங்கிக் கொண்டிருந்தார். மாலையில் பண்டாரம் வந்தபோது கோவிலைச் சுற்றி புல் பூண்டு  இல்லை. துப்புரவாக இருந்தது. கிழவனாரின் கைவண்ணம் தான் என்று தெரிந்தது. 

கிழவனுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக்! ஒரு பையன்  பன மரத்திலிருந்து கீழே விழுந்து செத்துப் போனான். வீட்டை விட்டு ஓடிப் போன இரண்டாம் பையன் அம்மாக்காரி செத்ததும் காதிலிருந்த பாம்படத்தைக்  காதை வெட்டியாவது எடுக்கணும்னு வந்தான். “லேய்! அவ காதெத் தொட்டியோ என் அய்யாவாணே, துண்டு  துண்டாக்  கொத்திப் போட்டிடுவேன்” என்று கிழவர் கத்தினதும் ஓடிப் போனவன் தான்.. 

கிழவர் பண்டாரத்து கூடவே தங்கிவிட்டார். கிழவர் தனக்குத் தானே ஒரு வேலையைத் தேடிக்கிட்டார். பக்கத்து கிராமத்தில மக்கள் எல்லாம் தண்ணியில்லாம கஷ்டப் படுவதைப் பார்த்து ஒரு கிணறு தோண்ட முடிவு செய்கிறார். 

‘ஒன்னாலே கிணறு தோண்டக்  களியுமா? அட பயித்தியாராக் கிளவா!’ என்று பண்டாரம் சொல்லியும் கிழவர் கேட்கவில்லை. தினமும் போய் கிணறு வெட்டிக்கிட்டே இருந்தார். அந்த ஊர் மக்கள் கூட கிண்டல் செய்வார்கள். . 

“ஒனக்கு வயசு காலத்திலே சிவனேன்னு இருக்கப்படாதா?”

“நான் நாப்பது வருஷம் சளைக்காம வேலை செஞ்சவன்.  ஒரு நா குந்தியிருந்து தின்னவனில்லை.எனக்கு அது பழக்கமில்லை”

ஒரு நாள் கிழவர்  துணி மூட்டையில் மண்ணை எடுத்து வருகிறார். 

‘ஈரமா இருக்கில்லே ! ஊத்து கண்டுடுத்து.’

பண்டாரம் கிழவர் தோண்டிய கிணத்தைப் பார்த்து ஸ்தம்பித்துப் போகிறான்.

அட பாவி மனுசா! இந்த தள்ளாத வயதிலே ராட்சஷ வேலையில்ல  செய்திருக்கே! மனுஷ காரியமா அம்மாடி?

image

இன்னா பாரு என்று கிழவர் ஒரு கல்லைத் தூக்கி கிணத்தில் போடுகிறார். ’ களுக்’  சத்தம்.  நிறைய தண்ணி கிடக்கு!

அடுத்த நாள் கிழவனுக்குக் காய்ச்சல்! பண்டாரம் பரிதவித்தான். மருந்து எதுவும் வேண்டாம் அந்தக் கிணத்திலிருந்து ஒரு குடம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். தானும்  குடித்துவிட்டு பண்டாரத்துக்கும் கொடுத்தார். அமிர்தமா இருந்தது பண்டாரத்துக்கும்.. 

ஒரு கல்யாண கோஷ்டி வந்து அந்தக் கிணத்தையும் அதன் தண்ணீரின் சுவையையும் பற்றி ரொம்ப ஆச்சரியப் பட்டுப் போனார்களாம். ஒரு கிளவன் தன்னந்தனியா தோண்டிபூட்டான்னு ஆச்சரியம். வேற. தங்கள் செலவிலே கல்லும் சுவரும் கட்டி கயிறும் பாட்டையும் போட்டு தர்ரேன்னு சொன்னாராம். 

அதை சந்தோஷமாக் கேட்டுட்டு கிழவன் ஒரேயடியா கண்ணை மூடினார் . 

மறுநாள் இரவு பண்டாரம் வழக்கம் போல் சோறு பொங்கிக் கொண்டிருந்தான் . ஆனால் அவனால் சாப்பிட முடியவில்லை ஏதோ ஒரு மகத்தான சம்பத்தை இழந்தது போன்ற நினைவுகள் மனத்தைப் பிழிந்தெடுத்தன. திடீரென்று அவனுக்கு உணர்ச்சி பொங்கிற்று. கல்தூணில்  தலையை சாய்த்துக் கொண்டு அழுதான். 

நாய்க்கு மட்டும்  அன்று ஏமாற்றமில்லை. 

————————————————————–

ஷேக்ஸ்பியரின் வரிகள் கண்களில் தெரிகிறது!

If you have tears shed them now!