
நான்மறை வேதங்கள் வடிவையும் பொருளையும்
அருளிய தேவிநின் திருநாமம் போற்றி !
அன்பர்கள் செய்துவரும் நல்வினைப் பயன்களையே
அள்ளியள்ளி அருளுகின்ற அன்னையே போற்றி !
மென்மையுடை குணத்தோடு எழில்கொஞ்சும் ரதிதேவி
திருவுருவாய் வந்துநின்ற அஞ்சுகமே போற்றி !
மன்பதையைக் காப்பவளே மாலனவன் மனையாளே
கமலத்தி லிருப்பவளே தேவிநின்தாள் போற்றி !
அன்றலர்ந்த மென்மையுடை இதழ்கொண்ட தாமரைபோல்
வசீகர வதனத்தாள் திருமகளே போற்றி !
அன்பார்ந்த தேவர்கள் கரமோங்க அறம்வாழ
பாற்கடலில் அமுதமொடு உதித்தவளே போற்றி !
மன்பதை மாந்தர்கள் தேவர்கள் ஒருமுகமாய்
அடிபணிந்து துதிபாடும் அன்னையே போற்றி !
என்னீசன் மாலனவன் பள்ளிகொண்ட பெருமாளின்
இதயத்தில் குடிகொண்ட நாயகியே போற்றி !
மின்னுகின்ற தங்கத் தாமரை மலரின்மேல்
உறைகின்ற தேவியாம் திருமகளே போற்றி !
மன்பதை மாந்தர்கள் ஜீவன்க ளனைத்திற்கும்
முழுமுதல் தலைவியாம் திருமகளே போற்றி !
வானவர் மாந்தர்கள் துதிபாடி அடிபணியும்
முழுமுதல் கடவுளாம் திருமகளே போற்றி!
அன்பனவன் திருமாலின் துணைவியாய் என்றென்றும்
உடனிருக்கும் நாயகியே திருமகளே போற்றி !
(தொடர்ந்து வரும்)
