10/25

தாமரை மலரின்மேல் உறைபவளே போற்றி !
கமலத்தைக் கையிலேந்தி அருள்பவளே போற்றி !
கமகமக்கும் பட்டாடை மினுமினுக்கும் பொன்னகைகள்
தரித்துநல் தரிசனம் தருபவளே போற்றி !
எம்பெருமான் மாலனவன் நாயகியே போற்றி !
குறையாத செல்வங்கள் கொடுப்பவளே போற்றி !
எம்மீது உன் கருணைக் கண்பார்வை படட்டும் !
நலமாக வாழ்ந்திடவே அருள்மாரி பொழியட்டும் !
மன்பதையை இயக்குகின்ற வைகுண்ட நாயகியே !
மக்கள்தம் உணர்வுகளை அணுவணுவாய் உணர்ந்தவளே
அனுதினமும் உன்நாமம் பாடுகின்ற அடியார்க்கு
இன்பங்கள் செல்வங்கள் அள்ளியள்ளிக் கொடுப்பவளே
என்மனது நினைவுகளும் சொல்களும் செயல்களும்
எப்போதும் எஞ்ஞன்றும் உன் நாமம் போற்றிடவே
என்னையே நன்னெறியில் இயக்கிவிடு என்றுநான்
அன்னையே உன்னையே அடிபணிந்து வேண்டுகின்றேன் !
பொன்வேய்ந்த குடங்களிலே புனிதகங்கை நீரூற்றி
அபிஷேகம் ஆராதனை உளங்குளிர செய்வித்த
மின்னுகின்ற மேனியதில் ஆபரணம் அணிசெய்த
மிடுக்கோடு நிற்கின்ற திருமகளே போற்றி!
அன்போடு நெறியோடு துதிபாடும் அடியாரை
அரவணைத்து அருள்புரியும் நாயகியே போற்றி !
பொன்மகளே குலமகளே மாலனவன் தேவியென
வைகரையில் நான் தொழும் அன்னையே போற்றி!
