டிவி சீரியல் பார்ப்பது தவறா? ஒரு வித்தியாசமான கோணம்

பொதுவாக நம் வீடுகளில் ஒரு பேச்சு உண்டு…
- சாயங்காலம் வீட்டுக்கு வந்தா, சீரியல் ப்ரேக்லே தான் காபி கிடைக்கும் எங்க வீட்டுலே
- அமெரிக்காவில் இருந்து பேசினாலும், எங்க அம்மா சீரியலுக்கு நடுவுல பேச மாட்டாங்க
- எப்போ பார்த்தாலும் அபி, கோபி, வாணி,ராணி பத்தி தான் கவலைப் பட்டுட்டு இருப்பாங்க, ஏதோ அவுங்களும் நம்ம குடும்பம் போல
- ஞாயிறு ஆனால் ஒரே சோகமா இருப்பாங்க. அன்னிக்கி சீரியல் இருக்காதே
- இந்த சீரியல் எப்பவுமே ஒரே அழுகை தான், அவங்க பேச்சும், ஒரே மோசமா தான் இருக்கும்.
- எதிலே பார்த்தாலும் ஒரே சதித்திட்டம், மாமியார்-மருமகள் கொடுமை, குழந்தை மாற்று, எல்லாம் மோசமான சிந்தனைகள், இதை பார்த்து தான் நம்ம வீட்டு பெண்களும் அப்படி யோசிக்கிறாங்க
- வீட்டில் தாத்தா பாட்டி சீரியல் பார்ப்பதால், குழந்தைகள் படிப்பு கெட்டுப் போகுது
- இந்த டிவி முன்னாடி வேஸ்ட் பண்ற டைம்லே ஏதாவது உருப்படியா செய்யலாம்
எந்த விஷயமும் அளவுக்கு மீறினால் அது நல்லது இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக சீரியல் பார்ப்பதே தவறு என்று சொல்வது சரியில்லை.
முக்கியமான குற்றச்சாட்டுகளை எடுத்து சற்று ஆராய்வோம் (நீயா நானா கோபிநாத் பாணியில்)
டிவி யில் வரும் எல்லா பெண்களும் அழுதுகொண்டே இருக்கிறார்கள். நிறைய பெண்களைக் கொடூரவாதிகளாய்க் காட்டுகிறார்கள்.
உங்கள் மனதில் இன்னும், மெட்டி ஒலி சரோவும், சாந்தி வில்லியம்ஸ் மாமியாரும் தான் இருக்கிறார்கள். இல்லையென்றால் நளினி – அபி காம்பினேஷன்.
சற்று இந்தக் காலத்துக்கு வாங்க.! அதே சாந்தி வில்லியம்ஸை வாணி ராணி அறிவாலும் அன்பாலும் சமாளிப்பதைப் பாருங்கள்.
அழுகை இருந்தாலும், சீரியலில் தான் பெண்களைத் தொழில் அதிபர்கள், சமுதாயத்தில் முன்னேறுபவர்களாகக் காட்டுகிறார்கள்.
- அதே அபி கடைசியில் வெற்றி பெற்றது ஞாபகம் இல்லையா?
- சித்தி ராதிகா துணி ஃபேக்டரி உரிமையாளர்
- என் கணவன், என் தோழன் – சந்தியா ஐபிஎஸ்
- வாணி – வக்கீல்
பெண்கள் அழுது கொண்டு இருக்கும் காலம் போய் , சாதிக்கும் காலம் சீரியலில் வந்தாச்சு, உங்களால் ஏன் ஒப்புக்கொள்ள முடியவில்லை?
சில கதாபாத்திரங்கள் கொடூரமாகத் தான் இருக்கிறார்கள். ராவணன் கொடூரமாக இல்லாவிட்டால் ராமன் புகழ் எப்படி மேலோங்கும்?
குடும்பத் தலைவிகள் அதிகமாக சீரியல் பார்க்கிறார்கள். இதனால் கணவன்மார்கள், அவர்களைக் குற்றம் சொல்கிறார்கள் – ‘நாங்கள் களைத்து வரும் போது எங்களைக் கண்டு கொள்வதே இல்லை. டிவி ஸ்கிரீன் பார்த்தபடியே ஒரு தலை அசைப்பு தான் கிடைக்கிறது’
கணவனுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த காலம் இப்போ இல்லைதான். ஆனால் அதற்கு டிவி மட்டும் காரணம் இல்லை.
முன்பெல்லாம் கணவன் அவசரமாக வேலையை முடித்து விட்டு மனைவியைப் பார்க்க ஓடி வருவான். ஆனால் இன்றோ, அவன் வருவதே வாணி-ராணி வரும்போது தான். அதுவும் ஹெட்செட் போட்ட ஃபோன் பேசிக்கொண்டே, வந்த பத்தாவது நிமிஷம் லேப்டாப் வேலை.
அவள் சாப்பாடு கொடுக்க ஐந்து நிமிஷம் லேட் ஆனா, இந்த குற்றச்சாற்று.. அவள் சாப்பாடு சூடு செய்யும் வேளையிலே, சேனல் ஸ்போர்ட்ஸுக்கு மாறியிருக்கும். இதே டெண்டுல்கர் ஆடும்போது சேனல் மாத்தினா சும்மா இருப்பார்களா? இது கணவன்மார்களுக்கு மட்டும் அல்ல, குழந்தைகளுக்கும் பொருந்தும்.
சீரியல் பார்த்து விட்டு, அந்த மாதிரி டிரஸ் பண்ணவேண்டும் என்று அனாவசியமாக முயற்சி செய்கிறார்கள். அது மட்டும் இல்லை, இந்த ஹிந்தி டப்பிங் சீரியல் பார்த்து அந்த ஹீரோவை எப்போதும் ஸ்மார்ட்,ஹேண்ட்ஸம்னு வர்ணித்து எங்களை வெறுப்பேத்துகிறார்கள்.
.ஏங்க கஜினி சூர்யா , ஐ விக்ரம் பாத்து நீங்க ஜிம் மெம்பர்ஷிப் எடுக்கலே?
சிவாஜி,எந்திரன் படத்தைபார்த்து தலைவரையும் தாண்டி ஸ்ரேயா, ஐஸ் மேலே ஜொள்ளு விடலே ?
ஹிந்தி டிவி சீரியல் க்ரியேட்டர் ஏக்தா கபூர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தாங்க..
“Movies – you idolize men and fantasize women…Hindi Serials – you idolize women and fantasize men”
இந்த சீரியல்ல எப்போதுமே பெண்களுக்கு தான் முக்கியத்துவம் குடுக்கறாங்க! எப்போதும் பெண்கள் கூடிக் கூடி வம்பு பேசிக்கொண்டே இருக்காங்க! ஹஸ்பண்ட்ஸ் எல்லாரையும் டம்மி பீஸ் ஆக்கிட்டாங்க.
ஏங்க சினிமாவில் ஹீரோயின் வெறும் பாட்டுக்கும், கிளாமருக்கும் மட்டுமே வருகிறார்கள். பசங்க தான் எப்போதும் பாரில் உட்கார்ந்து “ஃப்ரெண்ட் ஃபீல் ஆய்டாலே, ஹாஃப் அடிச்சு கூல் ஆய்டாலே” னு சொல்லிக் குடிச்சுட்டு இருப்பாங்க.
பெண்களை மையப் படுத்தி படம் எடுத்தது பாலசந்தர் காலத்தோட போயேபோச்சு. சீரியலிலாவது அவுங்களுக்கு முக்கியத்துவம் குடுத்தா உங்களுக்கு ஏன் நோவுதாம்.
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எப்போதுமே சீரியல் கதாபாத்திரங்களைப் பத்தியே தான் கவலைப்பட்டுட்டு இருக்காங்க.
உங்கள் விஷயத்திலோ, பிள்ளைகளைப் பத்தியோ அவுங்க கருத்துகள் சொன்னா ,
“ நாங்கல்லாம் இன்னும் சின்ன பசங்களா என்ன? ”
“எங்களுக்கும் குழந்தை வளர்க்கத் தெரியும். ”
“இது எல்லாம் ஒங்க காலம் போலே இல்லை.”
“நீங்க ஏன் டென்ஷன் எடுத்துகிறீங்க? எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.”
“சும்மா என்னைப் பத்திக் கவலைப்படாதே பாட்டி/தாத்தா . எனக்கு தெரியும்”
“பெருசுக்கு எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கணும்”
எதற்க்கு வம்பு என்று அவுங்களும் ஜோதா,அக்பர் ,துளசி,சரவணன் , மீனாட்சி பத்திக் கவலைப் பட ஆரம்பிச்சுட்டாங்க.
வீட்டில் உள்ளவர்கள் டிவி சீரியல் பார்ப்பதால் குழந்தைகள் படிப்பு கெட்டுப் போகிறது.
ஏங்க, சீரியலை விடுங்க டிவி யில் என்ன பார்த்தால் பசங்க படிப்பு வளரும். யுஜிசி ப்ரோக்ராம் பார்த்து அறிவு வளரும் என்று சொல்கிறீங்களா? வீட்டில் டிவி இருப்பதே படிப்புக்கு எதிரி தான்.
இந்த டிவி முன்னாடி வேஸ்ட் பன்ற டைம்லே ஏதாவது உருப்படியா செய்யலாமே
டிவி சீரியல் பார்ப்பது ஒரு பொழுதுபோக்கு. எப்படி பாட்டு கேட்பது, இன்டெர்நெட் பிரவுசிங், கிரிக்கெட் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, போட்டோக்ராபி, ஃபிரண்ட்ஸ் கூட பீச்,சினிமா என்று சுத்துவது, காலேஜ் கேண்டீன்லே அரட்டை அடிப்பது, ஆஃபிஸ் வாட்டர் கூலர் காஸிப் பண்ணுவது, வாட்ஸாப் மெசேஜ் அனுப்புவது, பேஸ்புக்லே ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை லைக் போடறது, டெய்லி ஸ்டேடஸ்லே மெசேஜ் சொல்வது போல இதுவும் ஒண்ணு, வேலைக்கு ஆல்டெர்னெட்
அதுனாலே ரொம்ப ஆராயாம சீரியலைப் பாருங்க சார்! லைஃப் நல்லா இருக்கும். (லைஃப் சந்தோஷமா இருக்கோ இல்லையோ வொய்ஃப் சந்தோஷமா இருப்பாங்க )
கீழே தெரிகிற older entries லிங்கைக் கிளிக் செய்யவும். குவிகத்தின் 16 முதல் 25 வரை உள்ள பக்கங்களை ப் படிக்க முடியும்!
