image


ஜானகிராமனின் நளபாகம் ஓர் அபூர்வமான கதை அமைப்புக் கொண்ட  நாவல். தி.ஜா. வின் முத்திரைகளை அனாயாசமாகத் தாங்கி வரும் கதை இது. யாத்ரா சர்வீசில் காசி ராமேஸ்வரம் போகும் ரயிலில் சமைப்பதற்காக வந்தவர் தான் காமேச்வரன். சமையல் கலையில் ஒரு ஜீனியஸ். நல்லூரில் ஒரு வீட்டில் சமையற்காரராக ஒதுங்குகிறார். அந்த வீட்டு மாமிக்குக் குழந்தையே இல்லை. அம்பாள் உபாசனையில் இருக்கும் காமேச்வரன் அவளுக்கு அருள் பாலிக்கிறார். அவள் உண்டாகிறாள். அந்த நல்லூர் கிராமத்தில் இருக்கும் பெரிய சிறிய மனிதர்கள் எல்லாரும் அந்தக் குழந்தைக்குக் காரணம் காமேச்வரன் என்று சொல்லாமல் சொன்னார்கள்! எது உண்மை எனபது அம்பாளுக்குத் தான் தெரியும்.


அந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் -பெயர்களே அவருடைய  முத்திரையைப்  பொறிக்கும் !

காமேச்வரன், வத்ஸன் , ரங்கமணி, முத்துசாமி,ஜோசியர், சுலோசனாம்மா, நாயுடு,பாட்டி, பங்கஜம், துரை , பண்டா, விஸ்வேஸ்வரன், ராமாரி குறத்தி, ஐயங்கார், ஓதுவார், ஜகது,இளங்கண்ணன், பொதுவுடமை சீனுவாசன்,குப்புராவ், வெங்காச்சம், மகாதேவ குருக்கள்,வைகுண்டம் பிள்ளை, செட்டியார், மஜீது, கலியபெருமாள், மாலிங்கம், இன்ஸ்பெக்டர் 

அதில் வரும் வசனங்களைப்  படித்தால் அந்த நளபாகத்தையும் உணரலாம்.        

“என் குருநாதன் வத்சனை நினைச்சுண்டு அவருக்கு ஒரு கும்பிடு போட்டுட்டுத்தான் உலைநீர் வைக்கிறேன்.சமையல் சுயபோதினி புத்தகங்களைப் பார்த்து சமைக்கலே! அந்தப் புஸ்தககங்களைப் படிச்சு ரசம் குழம்பு வைச்சா நவத்துவாரமும் எரியும்”  

“பாரதியார் எங்க அண்ணா! அம்பாள் எங்க அண்ணாவிற்கு கவி பாடச் சொல்லிக் கொடுத்தா. என் கையில் கரண்டியைக் கொடுத்திருக்கா!உலகத்தையே மயக்கிறார் எங்க அண்ணா! நளபாகமாய்ப் பண்ணீப் போடறேன்!”

ஸ்வீகாரமா? நல்ல சம்ஸ்கிருதப் பேரு அது. சம்ஸ்கிருதத்திலே சொல்லிட்டா ஈயம் தங்கமாயிடும், பாறாங்கல்லு பத்மராகமாயிடும்.

“ஒத்திக்கு பதிமூணுக்காக இதே வேலை.  ஒத்திக்குஒண்ணுக்காக  இதே வேலை.ஒத்திக்கு வேலையே கிடைக்காமல் போயிடுத்து. ”

image

மரணந்தானி  வைரானி! மரணம் வரையில் தான் பகை. 

“பஞ்சாயத்தில தெருவிளக்கெல்லாம் அணைச்சுப்புட்டானுக! நிலாக் காயுதாம். சிக்கனம் நாய்க்கா தெரியும்?”
 

பாட்டி (பசு மாட்டிடம்): ஏண்டி கொம்பேறி மூக்கான்! என்ன வந்துடுத்து உனக்கு ரெண்டு நாளா ?நேத்திக்கு ரெண்டு சேர் பாலைக் கொடுத்துட்டு காலைக் காலைத் தூக்கினே.இன்னிக்கு ஒண்ணரை சேர் கொடுத்துட்டு மடியை மடியை எக்கிக்கறே! புல்லு வாங்கிப் போடறேன். கோவிச்சுக்காதேம்மா! படவாச் செருக்கி!
“புல்லுக்கட்டுன்னா அத்தனை ஆசையாடியாம்மா!, புல்லுன்ன   உடனே மடியை இளக்கிப்பிட்டியே !நிச்சயமா ரெண்டு கட்டு இன்னிக்கு ராத்திரி வாங்கிப் போடத்தான் போறேன். இல்லாட்டா ஏண்டீ  வேம்புன்னு கேட்கமாட்டியோ? 

அவ கூடை முடையரவ ! கொறத்தி !  வெட வெடன்னு பாக்குக் கண்ணு மாதிரி இருப்பா ! கடசல் கொடுத்து பண்ணினாப்பல இருக்கும் உடம்பு. அரச மரம் கொழுந்துவிட்டு அந்தக் கொழுந்துமேலே வெயில் பட்டாப்பல  உடம்பெல்லாம் மினுமினுங்கும்.  

திண்ணையில் சீட்டாட்டமும் மூக்கைத் தொடாமலே மூக்குச் சிந்திய ஆச்சரியமும் தான்… 

ஏண்டா ஆராமுது! ஏன் இப்படி சல்யன் தேரோட்டினாப்பல என் கட்சியில உட்கார்ந்துண்டு கழுத்தறுக்கறே !  

இந்தப் பிரபஞ்சத்தில ஸௌந்தர்யத்தில் பராகாஷ்டை- பரம உச்சம் லலிதை தான். அவள் சாயல் தான் எல்லாம் !  

பண்றதையும் பண்ணிட்டு சீமந்தத்தை யார் தலையிலோ கட்டினானே உன் சகபாடி..

இது தடிப்பய ஊருங்க.. பேரு தான் நல்லூரு 


இதில் வரும் மசக்கைப் பாட்டு கிராம மணம் கமழும்! 

image

"கரிவாயில் ஜலம் ஊற்றி தூக்கங்கள் வந்து
கண்ட இடத்தில் பள்ளி கொள்வார் பைங்கிளிமாரும்
ஏட்டோட தயிர் வேணும் உப்பரட்டி வேணும் 
கேட்டதெல்லாம் கொடுக்கத் தாயாரும் வேணும் 
ஏலம் களிப்பாக்கு ஜாதிக்காய் வேணும் 
வெட்டு வெட்டாய்ப் பாக்கு வேணும் வெத்திலை வேணும் 
முதல்தரமான முத்து சுண்ணாம்பு வேணும் 
நாலாம் மாசம் பிறந்தவுடனே மசக்கை தெளிந்து 
வளர்பிறையில் ஐந்தாம் மாதம் வளைகாப்பும் இட்டார் 
சீருடைய ஆறாம் மாதம் சீமந்தம் பண்ணி 
சிறப்புடனே நாத்தனாரும் பூவும் சூட்டினார் 
அழகான ஏழாம் மாதம் அப்பமும் கட்டி 
எட்டாம் மாதம் பிறந்ததும் தொட்டிலும் செய்தார் 
ஒன்பதாம் மாதம் பிறந்ததும் சங்கிலி பண்ணி 
ஒன்பதாம் மாதம் ஆன உடனே ஊனும் ஒழித்தாள் 
எட்டும் இரண்டும் பத்து மாதம் பூர்ணமாய் சுமந்தாள்
முத்து முத்தாய் நெற்றி வேர்க்க முகங்கள் சிவக்க 
பெத்தாளே  பாலகரை முத்து முத்தாக ”

தி.ஜா. ஒரு மண்ணின் மைந்தர்.. சந்தேகமேயில்லை!