தமிழ்ச்செல்வன்

தானறிந்த பழகிய கிராமிய மக்களைப்பற்றிய, அவர்கள்உள்ளுணர்வுகளைத் தெளிவாகப் படம்பிடிக்கும் கதைகளை எழுதி வரும் திரு.தமிழ்ச்செல்வன்

– பூ திரைப்படத்தின் மூலக் கதையான ‘வெயிலோடு போய்’ சிறுகதையைஎழுதியவர்,
– தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்பொதுச்செயலாளர்.
– முன்னாள் இராணுவ வீரர்,
– அறிவொளிஇயக்கத்தில் முன்னணித் தொண்டர்,
– தொழிற்சங்கவாதி,
– தபால்துறை ஊழியர் மற்றும்பண்பாட்டுத்தளத்தில் தொடர்ந்து பணியாற்றும் செயல்வீரர்
என வாழ்வில் பன்முகங்கள்கொண்டவர் தமிழ்ச்செல்வன்.
பதிமூன்றில் ஒன்று…..
“மனிதர்கள் கை கொடுக்காதபோது தெய்வத்தின்துணையை நாடும் நம்ம ஊர் வழக்கப்படி நடராஜன் பிள்ளையார் கோவில் வாசலில் கிடந்த ஒரு பாறையின்மேல் உட்கார்ந்திருந்தான்” என்று ’பதிமூன்றில் ஒன்று’ கதை தொடங்குகிறது
பெரிய நாயக்கர் வீட்டில் வேலைக்கு நிற்கும் ஒருவரின் மகனாக,பள்ளிக்கு சென்றாலும் விடுமுறைகளில் ஆடுமேய்க்க வேண்டிய சிறுவன் நடராஜன். முனைந்து
படித்தாலும் பள்ளியில் கணக்கும் ஆங்கிலமும் மூளையில் ஏற மறுக்கின்றன.

பெயிலாகிப் பெயிலாகித்தான் அடுத்த வகுப்புக்குப் போவான்.
பெயிலானதும் நல்லதுக்குத்தான் என்று அப்பா நாயக்கர் வீட்டு வேலைகளுக்குக் கூட்டிப்போவார்.
பட்டாளத்தில் இருக்கும் தாய் மாமன், லீவில் வந்தபோது கூப்பாடு போட்டு திரும்பவும்
பள்ளியில் சேர்ப்பார். நடராஜன் படித்தே ஆகவேண்டும் என்று தீர்மானத்துடன்
இருந்தார். இவன் மட்டுமல்ல, தெருப்பிள்ளைகள் யாரேனும்கூட பள்ளிக்குப்போகவில்லை
என்றால் அவர்கள் வீட்டிற்குச் சென்று சண்டைபோடுவாராம். ஒழுங்காக ஆடு மேய்க்கவிடாமல் மச்சினர் அழும்பு
செய்வதாக அப்பாவின் எண்ணம். அம்மா தன் அண்ணனின் கட்சி.
கதாசிரியரின் வார்த்தைகளில்:- “மகனின் படிப்பை
முன்னிட்டு ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். அதெல்லாம் நடராஜனை ஒருபோதும்
பாதிப்பதில்லை. அவன் பிரச்னை எல்லாம் அதமப் பொது மடங்கு, பின்னப் பெருக்கல், பிளஸ்
மைனஸ்கள், ஸ்டோரிகள், பாரகிராபுகள், ஆக்டிவ் வாய்ஸ், பேசிவ் வாய்ஸ்கள், கணக்கு
வாத்தியார் கந்தசாமி மற்றும் ஆங்கில ஆசிரியர் அழகேசன் சார் இவ்வளவுதான்”
நடராஜன் கணக்கு, ஆங்கிலம் தவிர எல்லாப் பாடங்களிலும் 70-80
வாங்கினாலும் கணக்கிலும் ஆங்கிலத்திலும் 20-30 க்கு கீழேதான்.
பரீட்சை பேப்பர்கள் கொடுக்கும்போது எந்தப்பாடத்திலும் இருபது மார்க் வாங்கும்
பயல்களை ஒன்றும் சொல்லாமல், இவனைத்தான் கந்தசாமி சார் புளியம்விளாறால் விளாசுவார்.
–(“ஏம் பாடம்னா இளக்காரமா?)
"வேண்டுமென்று நான் கணக்கில் பெயிலாகவில்லை. தன்
குற்றம் எதுவுமில்லை. வச்சிக்கிட்டு நான் வஞ்சகம் செய்யவில்லை” என்று
மனமுருகி கணக்குப் பேப்பரில் ஒருமுறை
எழுதியும் அவர் ஆவேசம் குறையவில்லை. மாறாக அதிகரித்தது.
ராவும் பகலும் புஸ்தகமும் நோட்டும் கண்ணீருமாய் கிடக்கும்
மகனைக்கண்டு பொறுக்காமல், இரண்டு வருசமாய் கொடை கொடுக்காததுதான் குத்தமோ என்று
இந்தவருடம் கிடா வெட்டிப் பொங்கலிடுவதாய் வேண்டிக்கொள்கிறாள் அம்மா.
மீசை, அருவா, நீட்டிய நாக்கு, சுற்றிலும் கறிக்குழம்பு
வாசனையுடன் ஆவேசமாக நிற்கும் மாடனுக்கும் கல்விக்கும் என்ன தொடர்பு இருக்கும்
என்கிற யோசனை இவனுக்கு. ஆனால் பானையில் கிழக்கு திசையில் பொங்கல் வழிந்ததாலும் ஒரே
வெட்டில் கிடாவின் தலை வேறானதாலும் அவன் அம்மாவுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
நடராஜனுக்கு தர்க்க ரீதியாக ஞானம் விரிந்துகொண்டு போனது. ‘நம்ம
சாமிகள் எல்லாம் கிடாவும் கறியுமாக
படிப்பு வாசனை இல்லாமல் இருக்க மேலத்தெரு
சாமியெல்லாம் சர்க்கரைப்பொங்கல், நாமக்கட்டி என்று இருக்கிறதே. நம்ப ஆளுங்க ஏன்
இப்படி சாமிக கிட்ட மாட்டிக்கிட்டாங்க?’
மறுநாள் காலையிலிருந்து
ஆளே மாறிவிட்டான். மூன்று தெரு தாண்டி பிள்ளையார் கோவிலுக்குப்போய் தினம்
108 தோப்புக்கரணம் போட ஆரம்பிக்கிறான். கோரிக்கை இரண்டு (1) ஆங்கிலத்திலும்,
கணக்கிலும் பாஸாக வேண்டும் (ஜஸ்ட் பாஸ்) (2) கந்தசாமி சாரை வேறு ஊருக்கு
மாற்றிவிடவேண்டும்.
கந்தசாமி சாரை மாற்றுவதாகத்
தெரியவில்லை. ஆனால் மாதம் ரூ 40ல் (அவரிடமே ட்யூஷன்) பிரச்சினை தீர்கிறது.
கணக்கிற்கு பிள்ளையார் சரியாக இருந்தாலும், ஆங்கிலத்திற்காக
சர்ச்சில் மண்டியிடத் தொடங்குகிறான். (அதிலும் ஒரு குழப்பம் – ஏசுவிற்கு
தாய்மொழி ஹீப்ருவாமே ஆங்கிலம் அல்லவே?)
மாமா லீவிற்கு
வீட்டிற்கு வந்திருந்த சமயம் ஒன்பதாம் வகுப்பு முடிவுகள் வருகிறது.
நிச்சயம் பெயில்தான். ஆங்கிலமும் கணக்கும் கவிழ்த்தே தீரும் என்று இருந்தவனுக்கு
பாஸான அதிர்ச்சி தாங்கமுடியவில்லை.
ஆனாலும், புதிதாக வந்த ஹெட் மாஸ்டர், கிரேஸ் மார்க் போட்டு
பாஸ் ஆன பதிமூன்று பேரை பத்தாவதில் சேர்க்கமுடியாது என்று வெளியில் நிறுத்தி
விடுகிறார். அதில் இவனும் உண்டு.
வேறு பள்ளியில் முயற்சித்தும் அந்தப்பள்ளி பிடிக்காமல் இவன்
மட்டும் மாமாவுடன் திரும்பவும் ஹெட் மாஸ்டரைப் பார்க்கக் காத்திருக்கையில், எந்தச்
சாமியை வேண்டிக்கொள்ள வேண்டும் எனத்
தெரியவில்லை.
‘ஹெட் மாஸ்டர் உள்ளே வரச் சொன்னதாகக் ப்யூன் வந்து
அழைத்தார்’ என்றுகதை முடிகிறது.
ஒரு நீதிபோதனையாகவோ, இதனால் அப்படியாகி இப்படி முடிந்தது
என்னும் சம்பவக்கோர்வையாகவோ இல்லாமல் கதைகளை யதார்த்த இலக்கியப் படைப்புகளாக மிளிர
வைப்பவை அவற்றின் நடையும், உரையாடல்களும்.
இவரது ‘சிவராணி’, ’…மற்றும்
மைனாக்கள்" மனதை ஈர்க்கின்றன. இணையத்தில் படிக்கக் கிடைக்கும் மற்றுமிரு
கதைகள்
தமிழ்ச்செல்வனின் இரண்டு அருமையான கதைகளைப் படிக்க விரும்பினால் இந்த லிங்கை கிளிக் செய்யவும். ———–>
