
வானத்தில் இருக்கிற சந்திரனும் சூரியனும்- என்
கானத்தைக் கேட்டு இப்போ மந்திரத்தில் வந்திடுமே!
மேகத்தில் இருக்கிற மழைத்துளியும் பனித்துளியும் என்
தாகத்தைத் தீர்க்க இங்கே தனித்தனியா வந்திடுமே!
பூமிக்கு மேலே உள்ள காற்று வெளி மண்டலமும் இந்த
சாமிக்கு மூச்சுவிட விழுந்தடிச்சு வந்திடுமே!
கடலிலே அலையடிக்கும் கருநீலத் தண்ணியெல்லாம்
கடையிலே விக்கிற குடிநீராய் மாறிடுமே
தோட்டத்தில் குலுங்கிவரும் பூச்செடியும் மொட்டுகளும் நம்
வீட்டுக்கு வந்திருந்து பூஜையிலே கலந்திடுமே
வயலிலே இருக்கின்ற நெல்மணியும் கண்மணியும் -என்
வயத்திலே நிறைகின்ற சோறாக மாறிடுமே!
நட்சத்திர கூட்டமெல்லாம் கலந்துபேசி ஓடிவந்து -என்
வீட்டு மேலே கூரையிலே ஒளிஞ்சு நின்னு பார்த்திடுமே!
வீதியிலே திரிகிற ஆடு மாடு எருமை எல்லாம் நல்ல
தேதி வந்து என்வீட்டில் குட்டி போட வந்திடுமே!
மரங்களில் ஒளிஞ்சுகிட்டு பாடுகிற குயில்களெல்லாம்
சமயலறை மேடையிலே கச்சேரி பாடிடுமே!
மழைமேகம் பாத்து பாத்து ஆடுகிற மயில்களெல்லாம்
ஏழை வீ ட்டு முத்தத்திலே தில்லானா ஆடிடுமே!
சாலையிலே ஓடுகின்ற பட்டுசிட்டுக்குட்டியெல்லாம்
மாலையிலே வீடுவந்து கப்புச் சிப்புன்னு அடங்கிடுமே!
சோலையிலே கொப்பளித்து தித்திக்கும் சுனை நீரும்
காலையிலே வீடுவந்து பானையெல்லாம் ரொப்பிடுமே!
கோயிலிலே இருக்கிற அப்பனும் ஆத்தாளும் -நம்ம
வாயிலுக்கு வந்து நம்மை வாழ்த்திவிட்டு சென்றிடுமே!
பட்டியிலே அடைத்து வைத்த பசுக்களெல்லாம் கனிவுடனே
கெட்டிப்பாலைக் கொடுத்து நம்மைக் குடிக்க வைத்துப் பார்த்திடுமே!
செங்கலிலே வளர்த்துவைத்த ஓமகுண்டத் தீயினிலே
பொங்கி வந்த தேவதைகளும் நல் வாழ்த்துக் கூறிடுமே!
