
“‘அட ராவணா ’ – ஷாலு இது மட்டும் வேண்டாம் . இது ஆபத்தில் கொண்டு போய் விடும்” என்று அலறினேன்.
‘ஏன் இப்படி நான் கொலை செய்யப் போவது போல் துடிக்கிறீர்கள்?’ என்று அமைதியாகக் கேட்டாள்.
இந்த குருஜினியிடம் போக ஆரம்பித்த பிறகு ஷாலு ரொம்பவே மாறிப் போய் விட்டாள். முன்னை மாதிரி அவள் எதற்கும் அதிகமாக உணர்ச்சி வசப் படுவதில்லை. முன்பெல்லாம் சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் அவள் தான் ‘அட ராவணா ’ என்று அடிக்கடி கத்துவாள்.
பால் பொங்கி வழிந்தால் – ‘அட ராவணா ‘
தோசை கரிஞ்சு போனால் ‘அட ராவணா ’
ஹிந்து பேப்பர் காலையில் வரலை என்றால் ‘அட ராவணா ’ ’
பையன் மூன்றாவது ரேங்க் வாங்கி வந்தால் ‘அட ராவணா ’
நான் பல்தேய்க்காம பெட் காபி கேட்டால் ‘அட ராவணா ’
கரண்ட் கட் ஆனா ‘அட ராவணா ’ அதைவிட, கரண்ட் திரும்ப வந்தாலும் அதே ‘அட ராவணா ’ தான்.
இந்த மாதிரி ராம நவமி அன்றைக்குப் பானகம் பண்ணீயிருந்தாள். கொஞ்சம் பக்கத்து வீட்டு மாமிக்கும் மிச்சம் வையுங்கோ என்று அவள் சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளே நான் வழக்கம் போல் எல்லாத்தையும் காலி பண்ணிட்டேன். ‘அட ராவணா ’ என்று சொல்லிவிட்டு வேலையைக் கவனிக்கப் போய்விட்டாள்.
அதை மறந்து போய் என் நண்பன் வீட்டுக்கு வந்திருந்த சமயம் ‘கொஞ்சம் பானகம் கொண்டுவாயேன் ’. என்று குரல் எழுப்பினேன். அவளுக்கு செம கோபம் . நான் வேண்டுமென்றே கேட்கிறேன் என்று எண்ணி ‘அட ராவணா ’ ‘அட ராவணா ’ ‘அட ராவணா ’ என்று கத்திக் கொண்டு அடுப்படியிலிருந்து ஓடி வந்தாள். என் நண்பன் பதறிப் போய் விட்டான். அவன் பேர் ராவணன். அப்பக் கூட மாறாமல் ‘அட ராவணா ’ ராவணன் சார் வந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டாமோ? நான் காபி எடுத்து வருகிறேன் என்று போய் விட்டாள்.

ஆனா இப்போ ரெண்டு மாசமா அந்த ‘அட ராவணா ’ வார்த்தையைச் சொல்வதேயில்லை. அதைக் கேட்காமல் எனக்கு அவள் கூட பேசினமாதிரியே இல்லை. நான் சிலசமயம் வேண்டுமென்றே அந்த மேஜிக் வார்தையைச் சொல்லிக் காட்டுவேன். டெலிபோன் அடித்து அதை எடுக்கப் போகும் முன் நின்றுவிட்டால் அவளைப் பார்த்துக் கொண்டே ‘அட ராவணா ’ என்று சொல்வேன். அவள் என்னைப் பார்த்து அமைதியா ஒரு புன்னகை பூப்பாள். எனக்கு ’ ஏ! அற்பப் பதரே"’ ன்னு சொல்ற மாதிரி இருக்கும் .
தாங்க முடியாமல் அவளிடமே கேட்டேன் ’ நீ எப்படி ‘அட ராவணா ’ வை விட்டு விட்டாய்?’ என்று.
எல்லாம் குருஜினியின் பயிற்சி! "ஏதாவது தப்பு நடந்து விட்டால் ஷாக் அடிச்சா மாதிரி அலறக் கூடாது. – ‘நோ மோர் (க்)நீ ஜெர்க் ரியாக்ஷன்!’ என்று குருஜினி மாதிரியே சொல்லிவிட்டு ‘அந்த மாதிரி சமயத்தில் மனுசுக்குள் ஒரு வித்தியாசமான பூவை நினைத்துக் கொள்ளவேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார். நான் எருக்கம் பூவை நினைத்துக் கொள்கிறேன். பிள்ளையாருக்கு பிடிச்ச பூ இல்லையா?“
எருக்கம் பூவா/ இதுக்கு ‘அட ராவணா ’ வே தேவலாம் என்று நினைத்துக் கொண்டேன் இருந்தாலும் அவளிடம் சொல்லி அவள் சாபத்தை வாங்கிக் கொள்ளும் தைரியம் எனக்கு அப்போது இல்லை.
ஆனால் இந்த மாதம் அவள் செய்யப் போகும் வேலையைச் சொன்னதும் என்னை மீறி உணர்ச்சி வசப்பட்டு ‘அட ராவணா ’ என்று அலறினேன்.
"ஷாலு , இது ஆபத்தில் கொண்டு போய் விடும். போலீஸ் வந்து நம்மை அரெஸ்ட் செய்தாலும் செய்வார்கள்..”
நீங்கள் எப்பவும் இப்படித் தான் எல்லாத்துக்கும் நெகட்டிவ் வைப்ஸ் காட்டுகிறீர்கள்.உங்கள் ‘ஆனால்’ ‘முடியாது’ ,’ஏன்’ , ‘நாளைக்கு’ ‘வேண்டாம் ‘என்ற வார்தைகளை உங்கள் வீட்டு பாத் ரூம் பிளஷ்ஷில் போட்டுத் தண்ணீரைத் திறந்து விடுங்கள் ! (உபயம் குருஜினி)
‘லுக் ஷாலு! இந்த லெக்சர் எல்லாம் ஓகே . கொஞ்சம் பிராக்டிகலா யோசிச்சுப் பாரு. நாம இருக்கிறது நாலாவது மாடி. இங்கே வந்து அந்த பூஜையெல்லாம் பண்ணனும்னா முடியுமா? ’ ஏற்கனவே இந்த செக்ரட்டரி நம்மை விரட்ட பிளான் போட்டுகிட்டிருக்கார். இத மட்டும் பண்ணினோம்னா போலீஸ் கிட்டே போட்டுக் கொடுத்திடுவார் – சந்தேகமேயில்லை.’
செக்ரட்டரி பத்திக் கவலைப் படாதீங்கோ! அவர் வைஃப் கிட்டே அனுமதி வாங்கிட்டேன். செக்ரட்டரி ஏதாவது சொல்வாரோ என்று கேட்டதுக்கு அந்த மாமி என்ன சொன்னா தெரியுமா? ’ அவர் கிடக்கார்! அச்சு பிச்சு! இந்த மாதிரி காரியம் செய்யறது காசி ராமேஸ்வரம் போறது போல நீங்க செய்யுங்கோ! ஏதாவது பிரச்சனைன்னா நான் பாத்துக்கறேன்.’
அந்த மாமிக்கு ஏற்கனவே பார்வை மட்டு. என்னத்தைப் பாத்துக்கப் போறா? ஷாலு! வேணும்னா காசி ராமேஸ்வரம் பத்ரி கேதார்நாத் எல்டிசி போட்டு போயிட்டு வருவோம். இதை விட்டிடலாமே?
‘நீங்க கொஞ்சமும் கவலைப் படாதீங்கோ! குருஜினி எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு தருவாங்க. ஒரே நாள் பூஜை!“
அதென்ன ஆமாதா பூஜை?
கோமாதா பூஜை தான். கோ என்றால் மாடு. அதை இங்கிலீஷிலே ‘போ” என்று சொல்ற மாதிரி நெகடிவா இருக்கும். அதனாலே அதைத் தமிழ்ப் படுத்தி ‘ஆமாதா’ அப்படின்னு குருஜினி சொன்னாங்க! தமிழில் ‘ஆ’ என்றால் பசு. மணிமேகலையில ஆபுத்திரன் கேள்விப் பட்டதில்லே?
அதெல்லாம் சரி! இந்த கோமாதா பூஜை வீட்டுக்குள்ளே தான் வைச்சுக்கணுமா? நம்ம காம்பவுண்ட் கிட்டே ஒரு ஷெட் இருக்கே அதிலே வைச்சுக்கிட்டா என்ன?
வீட்டில வைச்சிக்கிட்டா தான் முழுப் பலனும் கிடைக்குமாம். பின்னே எதுக்காக கிரகப் பிரவேசத்தில பசு மாட்டை அழைச்சிக்கிட்டு வர்ராங்களாம்?
அது சரி. பசுக்கு எங்கே போறது? அது எப்படி லிப்டிலே ஏறி நம்ம நாலாவது மாடிக்கு வரும்? பசுக்கு ஏதாவது ஆச்சுன்னா நம்மளை மிருகவதை தடைச் சட்டதில போட்டு சல்மானுக்குப் பக்கத்தில கூண்டில ஏத்திடுவாங்க!
“மறுபடியும் எதிர்மறை எண்ணங்கள்! நல்லா கேளுங்க! குருஜினியின் சொந்தக்காரர் ஒரு பசுவை இந்த பூஜைக்கென்றே வளர்க்கிறாராம். போன வாரம் மைலாப்பூரில பூஜை நடந்ததாம். ஒரு அதிசயம் தெரியுமா? அன்னிக்கு ஒரு பெரிய கட்சி ஊர்வலம் . எப்படி கோமாதாவை பூஜைக்கு அழைத்துச் செல்வது என்று பயந்த போது கட்சித் தலைவரே வந்து கோமாதா போன வண்டிக்கு வழி விடச் சொல்லி உத்தரவு போட்டாராம்."
"இவளை மாற்ற முடியாது! ஆபீஸ் வக்கீல் கிட்டே கலந்து ஏதாவது ‘ஆன்டிசிபேடரி பெயில்’ கிடைக்குமான்னு பாக்கச் சொல்லணும்.

வழக்கம் போல் எங்கள் ஆபீஸ் காலிக் கும்பல் ( ஷாலு என் ஆபீஸ் நண்பர்களுக்கு வைத்த செல்லப் பெயர்) கூட கலந்து ஆலோசித்தேன்.. அன்றைக்கு ஆபீஸில் இன்ஸ்பெக்ஷன் இருக்கிறது என்று சொல்லி தப்பித்துக் கொள்ளவேண்டியது-நண்பர்களும் அதற்கு ஒத்துப் பாடுவது என்று தீர்மானம் போட்டோம். அப்போது மேனேஜர் கூப்பிடுவதாக இண்டர்காம் ஒலித்தது.
"வர்ற வெள்ளீக்கிழமை உங்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.” ‘யெஸ் சார்’ என்று ரொம்ப சந்தோஷத்துடன் சொன்னேன். என் குரலில் தனி உற்சாகம் தெரிந்தது. அன்னிக்குத் தான் கோமாதா -சாரி – ஆமாதா பூஜை.
‘யெஸ் சார் சொல்லுங்க முடிச்சிடலாம்’ என்றேன்.
அன்னிக்கு நானும் என் வைஃபும் உங்க வீட்டுக்கு கோமாதா பூஜைக்கு வருகிறோம். உனக்குத் தான் தெரியுமே! எனக்கு இரண்டு பசங்க! அடுத்தது பொண்ணு பிறக்கணும்னு வேண்டிக் கிட்டிருக்கோம்.ஆமாதா பூஜையில தம்பதி சமேதரா கலந்துகிட்டா அது நிச்சயம் நடக்குமாம். உன் வைஃப் இப்பத்தான் போன் பண்ணி சொன்னா.’
ஷாலு எந்தக் கல்லையும் எறியத் தயங்க மாட்டாள் என்பது புரிந்தது. எனக்கு சாய்ஸே இல்லாமல் பண்ணிவிட்டாள்.
‘யெஸ் சார்’என்று சொல்லி விட்டு மனதுக்குள் அழுதுகொண்டே வெளியே வந்தேன். என் காலிக் கும்பலும் கட்சி மாறி விட்டது. அத்தனை பேரும் குடும்பத்தோட வரத் தயாராகி விட்டார்கள். மச்சினி கல்யாணம், குழந்தைக்கு பேச்சு வரலை, குழந்தை இல்லை, தாத்தாவுக்கு காது கேட்கலை , மாமியாருக்கு மூட்டு வலி -இது அததனைக்கும் சகல ரோக நிவாரணி ஆமாதா பூஜையாம். பசு மாட்டைக் கூட சமாளிச்சடலாம் இந்த எருமை மாடுகளை எப்படி சமாளிப்பது? அன்னிக்கு எங்க ஆபீசுக்குப் பொது விடுமுறையே விட்டுட்டாங்கன்னா பாத்துக்கங்க!
அப்புறம் என்ன? நானும் பஞ்சகச்சம் கட்டிக்கிட்டு வாசலில் நின்னேன்.எல்லாரும் கோமாதா கோமாதா .. என்று சொல்ல அவசர அவசரமாக ஓடி வந்தோம். ஸ்வாமினி என்று சொல்கிற குருஜினி தான் வந்தார்கள். நல்ல உயரம் . நல்ல கலர். காவி கலர் புடவை தலையை முடிந்து நெற்றியை முழுதும் அடைத்து மாபெரும் குங்குமப் பொட்டு. கொஞ்சப் அசப்பில் பார்த்தால் கே பி சுந்தராம்பாள் மாதிரி இருந்தார்கள். விடு விடுவென்று நடக்கும் போது காஞ்சனா சரத் மாதிரி . கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
அவரது சிஷ்ய கோடிகள் ஐந்தாறு பேர் கூடவே வந்தார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு ஷாலு வீட்டிற்குச் செல்வாள் என்று எதிர்பார்த்தால் அவர்கள் அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்று கொண்டு யாருடைய வருகைக்காகவோ காத்துக் கொண்டிருந்தனர்.

ஒருவேளை குருஜினியின் பாசினி (BOSS இன் பெண்பால்) வருகிறார்களோ என்று எட்டிப் பார்த்தேன். ஒரு பெரிய வேன்! அமெரிக்காவின் ரிக்ரியேஷன் வெகிகில் என்று சொல்வார்களே அந்த மாதிரி பெரிய வண்டி அத்துடன் ஒரு டிரைலர். அதில் ஒரு கன்டைனர். அந்த வேன் அபார்ட்மெண்ட் வாசலில் நின்றது.
வண்டியை ஒட்டி வந்தவர் வினோதமாக இருந்தார். நார்த் இந்தியர் மாதிரி பஞ்சகச்சம் ஜிப்பா .தோளில் காவி கலர் துண்டு தலையில் சிகப்பு கலர் துணித் தொப்பி புருவ மத்தியில் ஆரம்பித்து தலையின் பாதி வரை நீண்ட ஒரு இன்ச் அகலமான குங்குமப் பொட்டு. கீழே இறங்கியதும் “தாயே ” என்று அழைத்துக் கொண்டு இன்னும் குப்பை வாராமல் இருந்த எங்கள் அபார்ட்மெண்ட் வாசலில் குருஜினி காலில் . தடாலென்று 90 டிகிரி கீழே விழுந்து நமஸ்காரம் பண்ணினார் – அவர் வெள்ளை ஜிப்பா கருப்புக் கலர் ஆவதைப் பற்றிக் கூட கவலைப்படாமல்.
ஷாலுவும் மற்ற பிளாட் பெண்களும் அவர் விழுந்த தோரணையைப் பார்த்து பயத்தில் துள்ளிக் குதித்தனர். ’ உனக்கு மங்களம் உண்டாகட்டும் ஆனந்தா ’ என்று சொல்லியும் அவர் எழுந்திருப்பதாக் காணோம். அவருடைய உதவியாளர்கள் வந்து தூக்கி நிறுத்தியதும் தான் தெரிந்தது – அவரால் தனியே எழு ந்திருக்க முடியவல்லை என்று.
“தாயே என்ன இது! மற்றவர்கள் என்னை ஆனந்தா என்று அழைக்கலாம்! நீங்கள் என்னை அப்படி அழைக்கலாமா ? பழைய பெயரைச் சொல்லி அழைத்தால் தான் என் ஜென்மம் சாபல்யம் அடையும் ”
என்னடா சேட்டு இவ்வளவு அழகா மகாபாரதம் சீரியல் மாதிரி தமிழ் டப்பிங் பேசராறேன்னு ஆச்சரியப் பட்டுக்கொண்டிருந்தேன்.
குருஜினியும் ‘ஆயுஷ்மான் பவ’ ஸ்டைலில் “வா ஆனந்தக் கோனாரே! உன் வரவு நல் வரவாகுக! நம் அன்னையை அழைத்து வந்திருக்கிறாய் அல்லவா? ’ என்று கேட்டார்.
அட நம்ம மாதவரம் கோனார். அதானே எங்கேயோ பார்த்தது மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன். என்ன ஸ்டைல்! என்ன பந்தா!
பின்னாலிருந்த ஷாலுவின் அண்ணா ’ இவர் தான் கோனார் நோட்ஸ் போட்டவரா? நான் கேள்விப்பட்டிருக்கேன்!; என்று என் காதில் ஓதினார். இவர் மாட்டுக்குப் புல் போடற கோனார் நோட்ஸ் போடற கோனார் இல்லை என்று மெதுவாகச் சொன்னேன்.
கோனாரோட உதவியாளர் ஒரு தாமிரப் பாத்திரத்தையும் வெள்ளிப் பேலாவையும் கொண்டு வந்ததை கோனார் வாங்கி குருஜினிக்குக் கொடுத்தார். கங்கா ஜலமும் சந்தனமும் என்று நினைத்துக் கொண்டேன். குருஜி அவற்றை வாங்கி அனைவருக்கும் வழங்கினார். எல்லோரும் அவற்றை வாங்கிக் குடித்து நெற்றியில் இட்டுக்கொண்டனர். அப்போது தான் தெரிந்தது அவை கோமீயமும், பசுஞ்சாணியும் என்று.
"அன்னையை அழைத்து வா கோனார் ” என்று குருஜினி உத்தரவிட்டதும் பின்னால் உள்ள கன்டைனர் கதவைத் திறந்தார். ஏர் கண்டிஷன் செய்த அறை போல் இருந்தது. முதலில் அதிலிருந்து ஒருவர் இறங்கி ஒரு சிவப்புக் கம்பளத்தை விரித்துக் கொண்டே அபார்ட்மெண்ட் உள்வரை சென்றார். அதற்குப்பின் ஐந்தாறு பேர் இறங்கினார்கள். அவர்கள் கையில் நாதஸ்வரம் தவில் கஞ்சீரா பேண்ட் , கிளாரினட் .இவர்கள் இறங்கி ரத்னக் கம்பளத்துக்கு இரு பக்கமும் நின்று வாசிக்க ஆரம்பித்தார்கள். டெல்லி கல்யாண ‘பராத்’ பாணியில் இருந்தது. கோனார் கஞ்சீராவை வாங்கி அவரே உடுக்கு மாதிரி அடிக்க ஆரம்பித்தார். நடுநடுவில் ‘அம்மா.. தாயே.. ’ என்று வசனம் வேற. பிறகு கோனார் உள்ளே சென்று ஜல் ஜல் என்ற சத்தத்துடன் கோமாதாவை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினார். ‘கெட்டி மேளம்’ கெட்டி மேளம்’ என்று ஒருவர் சொல்ல வாத்யக் கோஷ்டி உச்ச நிலைக்குப் போயிற்று. குருஜினி மட்டும் அதன் அருகில் போய் அதை மூன்று முறை வலம் வந்தார்.

சும்மா சொல்லக்கூடாது ! கோமாதா மிகவும் அழகாக இருந்தார். நல்ல பட்டு போன்ற வெள்ளை உடம்பு. கொம்புக்கு வர்ணம். கழுத்தில் தங்கச் சங்கிலி. காதில் வைரத் தோடு ! உடம்பைச் சுற்றி ஒரு வெல்வெட் கோட்டு! கால்களுக்கு கொலுசுடன் சலங்கை. கழுத்தில் மணி. வால் பகுதிக்கு மஞ்சள் பட்டுத் துணி.
நெற்றியில் சந்தனம் மற்றும் குங்குமம்.குளம்புக்கு வர்ணம்.
“அன்னையை மேலே அழைத்து வா கோனார்” என்று சொல்லிவிட்டு குருஜினியும் சீடர்களும் மெல்ல நடக்க வாத்யங்கள் தொடர்ந்து முழங்க கோமாதா மெல்லத் தலையாட்டிக்கொண்டே நடந்து வர ஆரம்பித்தார். பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.
நீங்களும் ஆனந்தாவும் கோமாதாவை பத்திரமாக நான்காம் மாடிக்கு அழைத்து வாருங்கள் -நாங்கள் பூஜைக்கு தயார் செய்கிறோம் என்று சொல்லி விட்டு ஷாலுவும் குருஜினியும் படியில் ஏறிச் சென்றுவிட்டனர்.
நானும் கோனாரும் கோமாதாவும் லிப்டில் தனியாகவா என்று எனக்கு உள்ளூர நடுக்கம் தான். லிப்டில் ஏதாவது கோமாதாவுக்கு ஆகிவிட்டால் என்ன செய்வது! மகாராஷ்ட்ராவிலிருந்து பசு காப்போர் சங்கம் வந்து நம்மை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார்கள் என்று பயத்துடன் மூவரும் லிப்டில் எறினோம். கோனார் கொம்புப் பக்கம் இருந்தார். நான் வாலருகே இருந்தேன். லிப்ட் புறப்படும் பொது ஒரு ஜெர்க். கோமாதா ‘அம்மா’ என்ற உரத்த குரலிட்டார். எனக்கு உடம்பெல்லாம் மயிர்க் கூச்செரிய ஆரம்பித்தது. எனது இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டேன். இரண்டாவது மாடி அடையுமமுன்னே சட்டென்று பவர்கட். லிப்ட் நின்றது. முதல் முறையாக கோனார் குரலில் நடுக்கம் தெரிந்தது. ஜெனரேட்டர் இருக்கிறது ஐந்து நிமிடத்தில் வந்துவிடும் என்று நான் சொன்னதும் தான் அவருக்கு உயிர் வந்தது. அதற்குள் கோமாதா ஏழு முறை “அம்மா” என்று அழைத்தார்.
ஜெனரேட்டர் ஆன் செய்வதற்கு முன் கரண்டே வந்து லிப்ட் நான்காம் மாடிக்குச் சென்றது. ஒரு வழியாக கோமாதாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததும் பயத்தில் எனக்கு பாத் ரூம் போகவேண்டும் போலிருந்தது. கோமாதாவும் வீட்டுக்குள் நுழைந்ததும் ஹாலில் கோமீயத்தையும் பசுஞ்சாணியையும் இறக்கினார். “ஆஹா! அருமையான சகுனம்! யாருக்கும் கிடைக்காத பாக்கியம்! இந்த வீட்டுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கப் போகிறது ” என்று குருஜினி மனமுருகிக் கூறினார். எல்லோரும் கோமீயத்தைப் பிடித்துத் தலையில் தெளித்துக் கொண்டார்கள்.
அதற்குப் பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்து “ஆமாதா பூஜை” கொண்டாடினார்கள்.குருஜினி கோமாதாவுக்கு ஒன்பது கஜத்தில் காஞ்சிபுரம் பட்டுப் புடவையைக் கட்டி விட்டார். குருஜினி வேத மந்திரங்கள் சொல்ல கிட்டத்தட்ட அரை மணி நேரம் பூஜை நடைபெற்றது. நல்ல பழக்கப்பட்ட கோமாதா! அமைதியாக அனைத்தையும் ரசித்தது. வெள்ளிப் பாத்திரத்தில் சக்கரைப் பொங்கலும் வாழைப்பழங்களும் பெண்மணிகள் தந்தவண்ணமே இருந்தனர்.
பூஜை முடிந்ததும் அனைவருக்கும் பேட்ஜ் பேட்ஜாக இலைபோட்டு சாப்பாடு போடப்பட்டது. முதல் பந்தியிலே கோமாதாவுக்கும் கோனாருக்கும் இலை போட்டு சாப்பாடு போட்டார்கள். இலையோடு எதையும் விடாமல் கோமாதா அழகாகச் சாப்பிட்டது கண் கொள்ளக் காட்சி! பிறகு கோனாரும் சாப்பிட்டுவிட்டு தக்ஷிணை ( பத்தாயிரம் ரூபாய்) வாங்கிக் கொண்டு குருஜினிக்கு மூணு முறை நமஸ்காரம் செய்துவிட்டு கோமாதாவை அழைத்துக் கொண்டு லிப்டில் போனார். ‘அவர் தான் எக்ஸ்பர்ட் அவரே கூடப் போகட்டும்’ என்று குருஜினி சொல்ல நான் பழையபடி கோமாதாவுக்குத் துணையாகச் சென்றேன்.லிப்டில் போகும் போது தான் கோனார் சொன்னார். இந்த கோமாதா நாலைந்து தமிழ் தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறாராம். சினிமா உலகில் இவருக்குப் பெயர் ஜோதிலட்சுமியாம். அதைத் தவிர ரஜினிகாந்த், கமலஹாசன், அஜீத் , ஜோதிகா இவர்களுக்கெல்லாம் பூஜைக்கு பசும் பால் சப்ளை செய்கிறாராம். அதைக் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது.

அபார்ட்மெண்ட் வாசலில் கோமாதாவைப் பார்க்க பெரிய கூட்டம். சினிமா ஷூட்டிங் என்று நினைத்துவிட்டார்கள். கூட்டத்தை ஒழுங்கு படுத்த போலீஸ் கூட வந்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பூஜை முடித்து குருஜினியும் மற்றவர்களும் கிளம்பிப் போனார்கள்.
ஃபென்டாஸ்டிக் ஷாலு! கோமாதா பூஜையைக் கலக்கிட்டே" என்றேன்.
அவள் அதற்குப் பதில் சொல்லாமல் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள். கோமாதா பூஜை செய்ததற்கு உடனே பலன் வந்துவிட்டது என்றாள்.
‘என்ன என்ன’ என்று ஆவலோடு கேட்டேன்.
மெல்லச் சிரித்துக் கொண்டே காதில் சொன்னாள்.
அதைக் கேட்டதும் எனக்குத் தலை சுற்றியது!
.
