
கருப்புச் சந்தையில் பணம் புரட்டும் மாந்தரில்
கனல்கக்கி யுனையெதிர்த்த கயவரைத் தெரியலையா ?
நேர்மையே தர்மமென நேர்வழியில் சென்றுவிட்டு
அவதியுறும் நன்மக்கள் கூக்குரல் கேட்கலையா ?
லஞ்சப்பேய் அவனன்றி ஓரணுவும் அசையாது
பஞ்சத்தின் கொடுமைகள் சொல்லிசொல்லி மாளாது
தஞ்சமென்று உன்முன்னே நிற்கின்றோம் இப்போது
அறம்வாழ மறம்வீழ நீ எழுவது எப்போது ?
காசேதான் கடவுளெனும் தாரக மந்திரம் – நாம்
சுயநலக் கூட்டத்தின் சொடுக்கிவிட்ட பம்பரம்
அச்சமோடு ஜடமாக ஆகிவிட்டோம் யந்திரம்
நேர்மையின் வழிபோக எப்போது சுதந்திரம் ?
புன்னகை போதும் பொங்கியெழு முருகா
மேன்மையது போதாது வடிவேல் மருகா
நடத்திக் காட்டிடு இன்னுமொரு ஸம்ஹாரம்
பாடுபடும் எங்களுக்கு அதுவே ஆதாரம் !
