
தேசிய தண்ணீர் விநியோக அமைப்பு (National Water Grid)
மின்சாரத்தை இந்தியா முழுவதும் விநியோகிக்க ஒரு மின்சார விநியோக அமைப்பு இருக்கிறது. அதைப் போல இந்திய நதிகளில் ஓடும் தண்ணீரை நதிகள் இணைப்பின் மூலம் ஒரு தண்ணீர் கட்டத்தை ஏற்படுத்த முடியும். அப்படி ஏற்படுத்தினால் உபரியாகக் கடலில் கலக்கும் தண்ணீர் தேவையான மக்களுக்குப் பயன்படச் செய்ய முடியும்.
இதைப்பற்றி விவரம் அறிந்துகொள்வதற்காக குவிகம் ஆசிரியரும் அவர் நண்பர் ஜே ராமன் அவர்களும் பிரபல நீர்வள ஆராய்ச்சியாளர் டாக்டர் கல்யாணராமன் அவர்களைச் சந்தித்தனர்.
டாக்டர் கல்யாணராமனின் ஆணித்தரமான இரு மாபெரும் கருத்துக்கள்:
கங்கா , யமுனா சரஸ்வதி என்ற வரிசையில் வரும் சரஸ்வதி ஆறு கற்பனை ஆறு அல்ல. சரஸ்வதி சமவெளி நாகரீகம் என்று சொல்லத்தக்க அளவில் இருந்த ஒரு உண்மையான ஆறு தான். செயற்கைக் கோள் படங்கள் மூலமாக இந்தத் தண்ணீர்த் தடம் ராஜஸ்தானில் இருக்கிறது என்று நிரூபித்ததுடன், ஆழ் துளை சோதனை மூலம் அந்தத் தடத்தில் இப்பொழுதும் தண்ணீர் இருக்கிறது என்றும் நிரூபித்துள்ளனர். (இதைப் பற்றிய விவரங்களை அடுத்த குவிகம் இதழில் பார்ப்போம். )
இரண்டாவது, தேசியத் தண்ணீர் விநியோக அமைப்பு என்ற நதி நீர் இணைப்புத் திட்டம். இதைப் பற்றி டாக்டர் கல்யாணராமன் கூறிய கருத்துக்களை விவரமாகப் பார்ப்போம்.
தேசியத் தண்ணீர் விநியோக அமைப்பு
தேசிய தண்ணீர் விநியோக அமைப்பு 100 சதவீத சாத்தியமே.
பிரும்மபுத்திராவில் பிப்ரவரி -மார்ச் மாதம் உபரியாக – வெள்ளமாக ஓடிக் கடலில் கலக்கும் தண்ணீரை மட்டும் தென்னிந்தியாவிற்குக் கொண்டுவந்தால் இங்கிருக்கும் கோதாவரி,கிருஷ்ணா ,காவேரி போன்ற நதிகளில் வருடம் முழுவதும் வரும் தண்ணீரைப் போல இன்னொரு மடங்கு தண்ணீர் அதிகமாகக் கிடைக்கும். இதனால் பிரும்மபுத்ரா நதிநீர் கன்யாகுமரிக்குக் கொண்டுவருவது மிகவும் முக்கியம். இது அனைவரும் கூறிவரும் நதிநீர் இணைப்பின் மூலம் தான் சாத்தியமாகும்
இதைவிட, டாக்டர் கல்யாணராமனின் மகத்தான கருத்து என்னவென்றால் நமது இந்தியாவிற்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குத் தேவையான தண்ணீர் நமது வசம் இருக்கும் இமயமலையில் 1500 பனிப்பாறை ஏரிகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இந்தியாவில் எல்லா நிலங்களிலும் மூன்று போகம் உணவு தானியங்கள் விளைவிக்கலாம். மேலும் தரிசாக இருக்கும் 9 கோடி ஏக்கர் நிலங்கள் விளைச்சலுக்கு உபயோகமாக்கலாம். இதன் மூலம் நாம் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறுவது உறுதி.
டாக்டர் கல்யாணமானின் வலைப்பூவில் (bharatkalyan97.blogspot.in) இந்தத் தேசிய தண்ணீர் விநியோக அமைப்பைப் பற்றி விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
இதைப் பற்றி அவர் கூறியதின் சாரம்:
இந்த நதிநீர்த் திட்டம் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் சி பி ராமஸ்வாமி அய்யர், விஸ்வேஸ்வரய்யா, டாக்டர் கே எல் ராவ் , தஸ்தூர் போன்றவர்களும் இதில் ஆர்வம் காட்டினார். அப்போது இத் திட்டம் தேசிய தண்ணீர் வளர்ச்சி செயலாண்மை ( National Water Development Agency) என்று அழைக்கப்பட்டது. அது தான் கங்கா-காவிரி திட்டம் மாலைக் கால்வாய்த்திட்டம் (Garland Canal) என்றும் பிரபலமாயின .
ஆனால் கங்கையில் தேவையான அளவு தண்ணீர் இல்லாததால் இத் திட்டம் செயல் படுவது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியது. மேலும் விந்திய மலைகளைத் தாண்டித் தண்ணீரைக் கொண்டுவருவது நடைமுறையில் முடியாத செயலாக இருந்தது. அதைப்போலவே 300 மீட்டர் அகல மாலை போன்ற கால்வாயில் இருவழியாகத் தண்ணீர் போக வழியும் (Head) இல்லாமல் இருந்தது.
அதற்கு மாற்றாக ஒரு திட்டத்தை நமது நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.
அதன்படி, பிரும்மபுத்ராவிலிருக்கும் தண்ணீரை சங்கோஷ், டிஸ்டா, மேச்சி , கோசி, கக்கர் ,சாரதா போன்ற நதிகள் மூலமாக கங்கையில் கலக்கச் செய்ய வேண்டும் .
பிறகு கங்காவை பரக்கா பாரேஜ் வழியாக சுபர்ணரேகாவில் இணைக்க வேண்டும்.
சுபர்ணரேகாவை மகாநதி-கோதாவரி- கிருஷ்ணா – பெண்ணார்-பாலார்-காவேரி -வைப்பார்-குண்டார் -வைகை – தாமிரபரணி- கன்யாகுமரி என்று இணைத்து பிரும்மபுத்ரா தண்ணீரை இந்தியாவின் கீழ்க்கோடிக்குக் கொண்டுவரலாம்.
விந்திய மலைகளில் தண்ணீரை நீரேற்றுவதற்குப் பதிலாக தண்ணீர் மலைகளைச் சுற்றி ஒரு பிரதக்ஷிணமாக வந்தால் சுலபமாகக் கொண்டுவரலாம்.
பங்களாதேஷின் உதவி நமக்குத் தேவை தான். அந்த நாடு வெள்ளத்தில் வருடாவருடம் அவதிப் படுவதைத் தடுக்க அவர்கள் கட்டாயம் இத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்வர். இரு நாட்டினருக்கும் win-win திட்டம்தான். அவர்களுக்குத் தண்ணீர் இழப்பு ஏதுமில்லாமல் ஒப்பந்தம் செய்யலாம்.

மேலும் நேபாலில் சாரதா நீர்மின் திட்டதை இந்தியா செயல் படுத்தினால், இந்தியாவிற்குத் தண்ணீரும் நேபாளுக்கு அதிக அளவு மின்சாரமும் கிடைக்கும்.
இந்த நதிநீர் இணைப்பின் திட்டத்தை 3D ரேடார் டோபாகிராபி மூலம் ஆறு ஆண்டுகளில் தயாரிக்கலாம்.
தேசிய நீர் விநியோக அமைப்பை அமைக்க உச்சநீதி மன்றம் 2014ல் உத்தவரவு பிறப்பித்துள்ளது..
இது நமது பொருளாதாரத்தை உலக வல்லரசுகளுக்கு மேலாக உயர்த்தும்.
இதில் வேறு எந்தவித வெளிநாட்டுத் தொழில்நுட்பமும் தேவையில்லை. அணைகளும் கால்வாய்களும் கட்டும் தொழில் நமக்கு ஆயிர வருடங்களாகப் பழகிய ஒன்று.
முக்கியமாக , இதற்குத் தேவையான மூலதனம் – பணம் எப்படித் திரட்டுவது? 9 கோடி ஏக்கர் தரிசு நிலங்களை விலை நிலமாக மாற்றுவதால் முதலீட்டுக்குத் தக்க வருமானம் கிடைக்கும் என்பது உறுதி. இதனால் உலக வங்கியும் மற்ற நிறுவனங்களும் இந்திய மக்களும் (பத்திரங்கள் மூலமாக ) இதில் பங்கேற்று இதற்குத் தேவையான முதலீட்டைத் திரட்ட முடியும்.
இவற்றால் காடு வளம் அதிகரிக்கும்.
சுற்றுபுரச்சூழல் பாதுகாக்கப்படும்.
நதிநீர்ப் போக்குவரத்தும் அதிகரிக்கும்.
அணைகள், கால்வாய்கள் கட்டுவதால் புலம்பெயரும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இது அடிகோலும்.
இத் திட்டம் இமய மலையிலிருந்து கன்யாகுமரி வரை இருக்கும் அனைத்துத் தர மக்களையும் கலாசாரம் – பாரம்பரியம் என்ற இணை கோட்டில் இணைக்கும்.
நமது உச்ச நீதி மன்றமும் இத் திட்டத்தை மேலும் கால தாமதப் படுத்தாமல் உடனே நிறைவேற்றத் தொடங்கும்படி 2012ல் உத்தரவிட்டுள்ளது.
இதைத்தான் பாரதியார் அன்றே சொன்னார்: ‘வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்… மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்’ என்று. தீர்க்கதரிசி அவர்.
இது கனவல்ல. 100 சதவீதம் சாத்தியமானதே.
நமக்குத் தேவை – நம்மால் முடியும் என்ற ஒருமித்த எண்ணம் மட்டும்தான்.
செயலாற்றுவோம்.
