‘சர்’ரென்று  அந்த வங்கியின் வாசலில் வந்து நின்றது ஒரு ஹீரோ ஹோண்டா. ஸ்டைலாய் இறங்கினார் ராகவன். சப்தமேயில்லாமல் பின்னால் வந்து ஸ்கூட்டியை வளைத்து நிறுத்தின மோகன் அவரைப் பார்த்துக் கையுயர்த்தியபடியே, “ என்ன ராகவன் சார்! சம்பளம் போட்டாச்சா?” என்றார்.  ”  ஒ! ஹலோ மோகன்! சம்பளமா? போட்டாச்சுன்னு சொன்னாங்க, அதான் வந்தேன்” – ராகவன்.   பேசியபடியே உள்ளே நுழைந்த அவர்களை முரளி வரவேற்றார், “வாங்க, வாங்க, காணமேன்னு பார்த்தேன்.” “ஆமா, முரளி சம்பளம் போட்டாச்சா?” என்று கேட்டார் மோகன்.

“மணி ஒம்பதே முக்கால் தானே ஆகுது. சீட்ல ஆளைக்காணோம். வந்தாத்தான் தெரியும்.” – முரளி.

“இதோ, ரகு வந்துட்டாரே. என்ன ரகு, சம்பளம் என்னாச்சு?” – ராகவன்.

“ சார், பில் பாசாயி,ட்ரெஷரியிலிருந்து ஆபீசுக்கும் வந்தாச்சு. இன்னிக்கு எடுத்துக்கலாம்னு சொன்னாங்க.” – இது ரகு.

“ஏம்பா, சம்பள ரிஜிஸ்தரில் கையெழுத்தேபோடலியே, எப்படிச் சம்பளம் எடுக்குறது?” இது இந்தக் கும்பலில் புதிதாகச் சேர்ந்து கொண்ட ராஜப்பாவின் ஐயம்.

அதற்குள் தனது இடத்துக்கு வந்த குமாஸ்தா விஜயனைப் பார்த்து இவர்கள் அனைவரும்’ஹலோ என்றும் கையைத்தூக்கியும் வரவேற்க, விஜயன் இவர்களை ஒரு குறுஞ்சிரிப்புடன் பார்த்து –“என்னங்க சார், சம்பளமா? போட்டாச்சு!” என்றார்.

ஒருவர் வெளிப்படையாக முகம் மலர்ந்தார். நாசூக்காக உள்மூச்சு வாங்கியும், இதைப்பற்றிக் கவலையே படாதமாதிரி ‘பாவ்லா’ செய்தனர் மற்றவர்கள். தத்தம் காசோலையைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தனர். பணமும் வந்தது.

“என்ன ரகு உங்க கையிலே?” – ராஜப்பா

“அதுவா? ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் ஃபார்ம்.”

“எங்களுக்குக் கிடைக்கலியே?” – பதறினார்கள் ராஜப்பவும், ராகவனும்.

“தெரியாதா? வெள்ளிக்கிழமைக்குள்ளே குடுக்கணும்.”- ரகு.

“ இதோ மத்தியானத்துக்குள்ளே போய் வாங்கிடறோம்” என்று விழுந்தடித்துக்கொண்டு ஓடிய அவர்களைப் பார்த்துப் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த குமார், விஜயனிடம்,” ஏன் சார் இவர்களெல்லாம் ஒரே ஆஃபீஸில் வேலை பார்க்கிறார்களா?” என்று கேட்டார்.

“இவங்களா?“ என்று சின்ன கிண்டலான சிரிப்புடன், “இல்லை. இவங்க அத்தனை பேர் மனைவிகளும் ஒரே இடத்தில் வேலை பாக்கிறாங்க. பேச்செல்லாம் அவங்க சம்பளத்தைப்பற்றிதான் “என்று தெளிவுபடுத்தினார் விஜயன்.