நாங்கள் புதியதாக ஆரம்பித்திருக்கும் அகில இந்திய கட்சி இது தான் ‘நோட்டா’ .

உடன்பிறப்பே! ரத்தத்தின் ரத்தமே ! மக்கழே ! உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் நோட்டாக் கட்சிக்குப் போட்டு ஆதரியுங்கள்!

எங்கள் கட்சிக் கொடி என்ன தெரியுமா? கருப்புக் கொடியில் 49 ஓட்டை. சிம்பாலிக் ஆக செக்ஷன் 49 -ஓ வை நினைவுப் படுத்த.

எங்களை எலெக்ஷன் கமிஷன் அங்கீகரித்து எங்களுக்காகத் தனி  சின்னம் ஒதுக்கியிருக்கிறது.  அது தான் இது!

மறந்து விடாதீர்கள்! எங்கள் சின்னம் கடைசியில் இருக்கும்.

 

அதற்கு எவ்வளவு நோட்டுக் கொடுக்கப்போகிறோம் என்று கேட்கிறீர்களா?நோட்டாவுக்கே நோட்டா? வேண்டியது தான்.

எங்கள் நோட்டாவை ஆட்சி பீடத்தில் அமர்த்தினால்  நாங்கள் என்னென்ன இலவசங்கள் தருவோம் தெரியுமா?

நோட்டாவின் தேர்தல் அறிக்கை 

  • சன் டிவி, கலைஞர் டிவி,  ஜெயா டிவி, மக்கள் டிவி,கேப்டன் டிவி போன்ற கட்சி டிவிக்களை ஒழிப்போம். அதற்குப் பதிலாக சினிமா சேனல், சீரியல் சேனல், விளையாட்டு சேனல் என்று ஒவ்வொரு துறைக்கும் தனி சேனல் அமைப்போம்.
  • எல்லோருக்கும் பஸ், ரயில் , ஆகாய விமானம் பயணம் இலவசம்.
  • கார் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மற்ற பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டும். இல்லாவிட்டால் கார் லைசன்ஸ் ரத்து. சைக்கிள்.ஸ்கூட்டர்,பைக்காரர்களுக்கும் அது பொருந்தும். அதன் சீட்டு எண்ணிக்கையை விடக் குறைந்த பேர்களுடன் ஓட்டினால் அபராதம்.
  • ரேஷன் கடையில் எல்லாம் இலவசம். சமையல் கேஸ் இலவசம்.  சினிமாவும் இலவசம்.
  • இந்தியா முழுதும் எல்லா பொருட்களுக்கும்  – உப்பு, குடிநீர், மருந்து, எல்லாம் நோட்டா பிராண்ட்தான். எந்தப்  படமும் இருக்காது –  அம்மா படம் உள்பட.
  • மாதாமாதம்  மேலும் என்னென்ன பொருட்கள் இலவசமாகக் கொடுக்கலாம் என்று யோசித்து செயல் படுத்துவோம்.
  • வேலையில்லாமல் இருக்கும் அனைவரும் அரசாங்க ஊரக வளர்ச்சித் திட்டத்தில் வேலை செய்யவேண்டும். இலவசமாகச் சாப்பாடு போடப்படும். சம்பளம் கிடையாது.
  • எல்லா பள்ளிகளும் , கல்லூரிகளும் பீஸ் வாங்காமல் செயல்படும். அரசாங்கமே எல்லாவற்றையும் நடத்தும்.
  • ஆறு கடல் குளம் ஏரி எல்லாம் தேசியமயமாக்கப்படும். எல்லா நதிகளும் இணைக்கப்படும். எந்த மாநிலமும் அதற்குச் சொந்தம் கொண்டாடமுடியாது. 
  • மீனவர்கள் மீன் பிடிக்கப் போகும்போது அவர்களை மற்ற நாடுகள் கைது செய்யாமலிருக்க நமது கடற்படையும் கூடப் போகும். 
  • விரைவில் நமது சந்திராயானம் சந்திரனில் ஆட்களைக் குடியேற்றும். 
  • வீடு இல்லாதவர்களுக்கு அரசே வீட்டைக் கட்டிக் கொடுக்கும். 
  • இப்போது தமிழ் நாட்டில் முக்கியமான கட்சி நாங்கள் தான். நாங்கள் யாரோடும் கூட்டு வைக்கமாட்டோம்.

 

போருமய்யா! நீர் நோட்டாவை வைச்சிக்கிட்டு பீலா விடுறது என்று குமுறுவது கேட்குது.

சரி, உண்மையில் நோட்டாவிற்கு ஓட்டுப் போட்டால் என்னவாகும்?

இது உங்கள் எதிர்மறை எண்ணத்தைத் தெரிவிக்கும் முறை தானே தவிர எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை அல்ல.

நோட்டா ஓட்டுக்களை எண்ணி அவற்றைச் செல்லாத ஒட்டாக அறிவிப்பார்கள். நோட்டாவிற்குப் போடும் ஓட்டு தேர்தல் வெற்றி-தோல்வியை மாற்றவே மாற்றாது. உதாரணமாக மொத்தம் 100 பேர் மட்டுமே ஒரு தொகுதியில் வாக்காளர்கள் இருந்து அதில் 99 பேர் நோட்டாவிற்குப் போட்டாலும் , மீதமுள்ள ஒரு ஓட்டை வாங்கியவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இப்படித் தான் தேர்தல் சட்டம் கூறுகிறது.

முதலில் இருந்த செக்சன் 49 ஓ வை மாற்றிச் சென்ற ஆண்டு இந்த நோட்டாவைக் கொண்டுவந்தார்கள். சென்ற ஆண்டு 1.5 சதவீத மக்கள் நோட்டாவிற்கு ஓட்டுப் போட்டனர்.

செக் 49 ஓ படி, உங்களுக்கு எந்த வேட்பாளரும் பிடிக்காவிட்டால் அதற்கென்ற ஒரு பாரம் (17 A ) வாங்கி அதில் உங்கள் எதிர்ப்பை ஓட்டைக் காரணத்துடன்   பதிவு செய்து கையெழுத்திட்டு  தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கவேண்டும். இது உங்கள் ஓட்டை யாரும் கள்ள ஒட்டாகப் போடுவதைத் தடுக்கும். ஆனால் இதனால் ஓட்டின் ரகசியம் பாதுகாக்கப்படாததால் இதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

நோட்டா  இருப்பதால் இப்போது கட்டாய ஓட்டுரிமையைக் கொண்டு வரவேண்டும் என்கிறார்கள்.

வரட்டும். அதுதான் நல்லது.