
‘ஓ கடவுளே.. எக்ஸெலன்ட்.. டேய் கிரி.. இங்கே சீக்கிரமா
வாடா.. இங்கே பார்.. ‘ — ஹாலில் உட்கார்ந்து தினசரியைப்
புரட்டிக் கொண்டிருந்த பாலு சந்தோஷ மிகுதியில் கூவினான்.
சமயலறையில் காபி போட்டுக் கொண்டிருந்த கிரி என்னமோ ஏதோ என்று ஓடி வந்து, ‘என்னடா.. ஏன் இப்படிக்
கத்தறே..? என்ன ஆச்சு?’ என்றான்.
தான் படித்துக் கொண்டிருந்த தினசரியின் ‘ராசி பலன்’
பகுதியைச் சுட்டிக் காட்டினான் பாலு.
‘இந்த ராசிதாரரின் பெயர் பத்திரிகையில் வரும்’ என்று
உரக்கப் படித்தான் கிரி.
‘எக்ஸாக்ட்லி.. ஐ ஆம் வெயிட்டிங் ·பார் திஸ்.. என்னு-
டைய கனவுகள் நிறைவேறப் போகின்றன. நான் ‘முல்லை’
பத்திரிகைக்குக் கதை அனுப்பி இருந்தேன் அல்லவா..?
ஐ ஆம் ஷ¤வர்.. அது பிரசுரமாகப் போகிறது. முல்லை
இஷ்யூ நாளைக்கு வரும் இல்லையா..! நாளை விடியல்
எனக்கு பேரின்பமான விடியல்.. ஓ.. அட் லாஸ்ட் இட் ஈஸ்
கோயிங் டு ஹாப்பன்… டேய் எனக்கு என்ன செய்யறதுன்னே
தெரியலே… ஒரு நிமிஷம் மகிழ்ச்சியாலே உரக்கக் கத்திச்
சிரிக்கலாம் போலிருக்கு… இன்னொரு நிமிஷம் கத்தி
அழலாம் போல – ஆனந்தக் கண்ணீர் வடிக்கலாம் போல –
இருக்கு’ என்று கிரியைக் கட்டி அணைத்துக் கொண்டு
கனவுலகில் சஞ்சரித்தான் பாலு.
ஒரு பக்கம் மகிழ்ச்சியாய் இருந்தாலும், ‘ஒரு வேளை
பாலுவின் கதை முல்லையில் வராமல் இருந்தால் அவனுக்கு
அது எத்தனை ஏமாற்றத்தைக் கொடுக்கும்… அதை அவன்
எப்படித் தாங்குவான்’ என்று குழப்பத்தின் உச்சியில்
இருந்தான் கிரி.
‘டேய்.. பாலு.. இந்த தினசரியில் வரும் ‘ராசி பலன்’
எல்லாம் அதே மாதிரி வரும் என்று சொல்ல முடியாது..
இந்த பலன் மிக ஜெனரலாக எழுதப்படுவது.. ஒரு
மனுஷனுக்கு அவனுடைய ஜாதக கிரக நிலைப்படிதான்
எல்லாம் நடக்கும்’ என்று சிரித்தபடியே அவனுடைய
உணர்ச்சிகளை-எதிர்பார்ப்பை- ஒரு சமநிலைக்குக்
கொண்டுவரத் தலைப்பட்டான் கிரி.
‘போடா ·பூல்… நான் இந்த தினசரிப் பத்திரிகையில்
வரும் ராசி பலன் பகுதியை வாராவாரம் படிக்கிறேன்னு
உனக்குத் தெரியும். அவர் போட்ட மாதிரியே எனக்கு
எல்லாம் நடந்துவருவதும் உனக்குத் தெரியும். ஸோ..
இதுவும் நடக்கும். ஜோதிடர் ஆதவன் நடக்கும் என்கிறார்..
நடக்கும்’ என்றான் பாலு உறுதியாக.
‘டேய் நான் என்ன சொல்ல வரேன்னா…’
‘நோ.. நீ ஒண்ணும் சொல்லவேண்டாம். இன்னிக்கு
நமக்கு ஹாலிடே.. இந்த சந்தோஷத்தை மஜாவா
கொண்டாடறோம்.. ஓட்டலுக்கு.. சினிமாவுக்கு எல்லாம்
போய் தூள் கிளப்பப்போறோம். கமான் கெட் ரெடி’
என்று முதுகில் அழுத்தமாக ஒரு ஷொட்டு கொடுத்தான்
பாலு.
ஹோட்டலிலும் சரி.. சினிமா தியேட்டரிலும் சரி..
ஏன் அன்று இரவு படுத்தபோதும் சரி.. கதை முல்லையில்
பிரசுரமாவது பற்றியே பேசிக் கொண்டிருந்தான் பாலு.
‘டேய்.. என்னுடைய கதையை முதல்லே போட்டி-
ருப்பாங்களா.. இல்லை கடைசியில் போட்டிருப்பாங்களா..
யாருடா ஓவியம் போட்டிருப்பாங்க.. டேய் இந்த கதை
ஹீரோயினை லதா வரையணும். அப்படியே கோயில்
சிற்பம் போல அழகா இருக்கும்.. ஆனா அவங்க
இப்பவெல்லாம் வரையறது இல்லே. இந்தக் கதைக்கு
நிறைய விமரிசனங்கள் வரும் பாரேன். ஏன்னா..
என்னுடைய கதையின் ஸப்ஜெக்ட் அப்படி.. ரியலி..
விமரிசனங்களைப் படிக்க ரொம்ப இன்டரஸ்டிங்கா
இருக்கும் இல்லே.. அதையெல்லாம் ·பைல் பண்ண
ஒரு தனி ·பைல் போடணும். இட் ஷ¤ட் பி எ
பெர்மனென்ட் ரிகார்டு.. இதை எல்லா பத்திரிகைக்-
காரர்களும் படிப்பாங்க. நீ பாரேன்.. படிச்சுட்டு
இப்படி ஒரு எழுத்தாளனை இத்தனை நாளா ரெகக்-
னைஸ் பண்ணாம விட்டுட்டோமேன்னு வருத்தப்படப்
போறாங்க.. இம்மீடியட்டா ஆறு ஏழு கதைகளை
ரெடி பண்ணி வெச்சுக்கணும். ஏன்னா.. தீபாவளி
மலருக்காக எல்லா பத்திரிகைகளிலிருந்தும் கதை எழுத
ரிக்வெஸ்ட வந்தா இம்மீடியட்டா அனுப்பணும் பார்..
இட் ஈஸ் ஸோ கிரேட்.. ஐ ஆம் ஸோ ஹாப்பி..’ என்று
அரற்றிக் கொண்டிருந்தான் பாலு.
‘கடவுளே.. இவனுடைய ஏக்கத்துக்கும், ஆசைக்கும்
இந்த ஒரு கதையையாவது முல்லை பத்திரிகையிலே
பிரசுரம் பண்ணிக் கொடுத்து விடேன். நான் உன்
கோயிலுக்கு வந்து ஐம்பத்தோரு முறை வலம்
வருகிறேன்.. ‘ என்று கடவுளை மனமுருக வேண்டிக்
கொண்டான் கிரி. பாலுவின் அரற்றலைக் கேட்டுக்
கொண்டிருந்த கிரி தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு
புரண்டு படுத்தான்.
அரற்றிக் கொண்டிருந்த பாலு எப்போது தூங்கினான்..
படுக்கையில் புரண்டு கொண்டிருந்த கிரி எப்போது
தூங்கினான் என்று தெரியவில்லை.
அடுத்த நாள் காலை 6 மணி. வெளியிலே ஓடுகின்ற
வாகனங்களின் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தான் கிரி.
முந்தைய நாள் இரவு அரற்றிக் கொண்டிருந்த பாலுவின்
நினைவு வந்து அவனது கட்டிலைப் பார்த்தான். ஆளைக்
காணோம்.
அவசர அவசரமாக எழுந்து முகத்தைக் கழுவி,
சட்டை போட்டுக் கொண்டு வெளியே வந்து பாலுவைத்
தேடினான். எங்கே போயிருப்பான் என்ற பதட்டம்
அதிகரித்தது கிரியின் மனதில்.
‘ஒரு வேளை.. முல்லை பத்திரிகை வாங்க கடைக்குப்
போயிருப்பானோ..? ஓ.. கடவுளே…’ என்று தனக்குள்
முணுமுணுத்தபடியே கதவைப் பூட்டிக் கொண்டு இரு
தெருக்கள் தள்ளியிருந்த புத்தகக் கடைக்கு ஓடினான்.
‘கடையில் பாலுவைப் பார்த்ததும்தான் அவனுக்கு
நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அவன் கையில் ‘முல்லை’
இதழ். அவன் முகத்தைப் பார்த்தவன் திடுக்கிட்டான்.
நிலமையைப் புரிந்து கொண்டான். அவன் கதை அந்த
இதழில் இடம் பெறவில்லை. பித்துப் பிடித்தவன் போல்
இருந்தான் பாலு. மெதுவாகக் கடையிலிருந்து இறங்கி
ரோட்டைக் கிராஸ் பண்ண முற்பட்டான்.
அந்த ரோட்டின் மறுபக்கத்தில் இருந்த கிரி, ‘டேய்
பாலு.. இருடா.. அங்கேயே நில்.. நான் வரேன்..’ என்று
கத்தினான்.

வாகனங்கள் இரைச்சலில் பாலுவிற்குக் காது
கேட்கவில்லையோ.. அல்லது ஏமாற்றத்தின் உச்சத்தில்
இருந்த பாலுவிற்குச் சுற்றுப் புறச் சூழலும் மறந்து
விட்டதோ… ஒரு பக்கத்திலிருந்து வேகமாக வந்து
கொண்டிருந்த ஆட்டோவைக் கவனிக்காமல் ரோட்டை
நோக்கி நடந்து விட்டான்.
கண்மூடிக் கண்திறப்பதற்குள் எல்லாம் நடந்து
முடிந்து விட்டது. அந்த ஆட்டோ டிரைவர் எவ்வளவோ
முயற்சி பண்ணி பிரேக் போட்டும் விபத்தைத் தவிர்க்க
முடியவில்லை. ‘ஐயோ.. அம்மா..’ என்று ஆட்டோவின்
சக்கரங்களின் அடியில் சிக்கிக் கத்திக் கொண்டிருந்தான்
பாலு. ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்ற கிரி, ஓடிப் போய்
பாலுவை சக்கரங்களிலிருந்து விடுவித்து அந்த ஆட்டோ-
விலேயே பக்கத்திலிருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.
ஊஞ்சல் போல் காலை துணியால் கட்டி தொங்க
விட்டிருந்தார்கள். ஆஸ்பத்திரியின் மருந்து நெடியின்
நடுவில் படுத்தபடியே அன்று வந்த தினசரியைப்
புரட்டிக் கொண்டிருந்தான் பாலு.
‘இடியட்.. இடியட்.. நீ என்னடா படிச்சவன்தானே..?
இப்படியா பண்ணுவே.. ஏதோ ராசி பலனைப் பார்த்து விட்டு
அதீத கற்பனையை வளர்த்துட்டு இர்ரெஸ்பான்ஸிபிளா…
சே…’ என்று திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான் கிரி.
‘எஸ்.. அதுதானே பார்த்தேன்.. டேய் இந்த நியூஸ்
ஐட்டம் படி’ என்று அந்த தினசரியை கிரியிடம் நீட்டினான்
பாலு.
‘ரேஸ் கோர்ஸ் ரோடில் ஏதோ நினைவில் ரோடைக்
கிராஸ் பண்ணப்போன பாலு என்ற வாலிபரை ஒரு
ஆட்டோ மோதியது. பாலு உடனே ஆஸ்பத்திரியில்
சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். முழுத்
தவறும் தன்னுடையதுதான் என்று பாலு எழுத்து மூலம்
கொடுத்ததன் பேரில் போலீஸார் ஆட்டோ டிரைவரை
கைது செய்யவில்லை’ என்று உரக்கப் படித்தான் கிரி.
‘பார்த்தியா.. என் பெயர் பத்திரிகையில் வந்து
விட்டது. ஆதவன் சொன்னால் அது நடக்கும். என்ன
என் கதை பிரசுரமாகி என் பெயர் வரும்னு நினைச்சேன்..
அது நடக்கலே.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ என்று
கட கடவென்று சிரித்தான் பாலு.
கிரியின் கண்களில் நீர் திரண்டது.
