ஷாலு முதலில்  மோடிஜியைப் பார்த்ததைப் பத்திக் கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டு சஸ்பென்சில் என்னை நிறுத்தி வேணுமென்னே என்னை டீஸ் செய்து, பிறகு  கொஞ்சம் கொஞ்சமாக மெகா சீரியல் மாதிரி நடுநடுவே கமர்சியல் பிரேக்குடன் சொன்னாள்.  என்ன இருந்தாலும் நம்ம நாட்டுப் பிரதமரை வெளிநாட்டிலே பார்த்து, அவரோட பேசி, அவர் கொடுத்த டீயைக்  குடித்த அனுபவம்  யாருக்குக் கிடைத்தாலும்  அவர்கள் தலைகால் புரியாமல் ஆடுவதில் கொஞ்சமும் தப்பில்லை. ஷாலு ஆனாலும் ரொம்பவே அடக்கி வாசிக்கிறாள் . ஒருவேளை குருஜினியோட கண்டிப்பான உத்தரவா இருக்கும்.

உங்களுக்கும் இந்த சஸ்பென்ஸ் ரொம்ப ஓவராயிருக்கா?  ஷாலு ஆறு  மணி நேரத்தில சொன்னதை நான் ஆறு  வரிகளில் சொல்லிடறேன்.

குருஜினி செஞ்ச ஆபூஜையின் தத்துவம் பிடித்துப் போய் அதுக்கு ஒரு செயல்வடிவம் கொடுக்க, டெல்லி பஜ்ரங்கித் தலைவர் ஷர்மா, மோடிஜியிடம் கேட்க, அவர் ஓகே என்று சொல்ல, ஷர்மாஜி, மோடி-குருஜினியைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்  பிறந்தது தான்  கோமாதா-காமதேனு முன்னேற்றக்   கழகம்.  (ஜி‌கே‌எம்‌கே) . குருஜினி அதற்குத் தலைவி. ஷாலு, குருஜினிக்கு  கொ ப.செ  மற்றும்  அஸிஸ்டண்ட்.   முழுக்க முழுக்க மகளிரே நடத்தும் ஆன்மீக அமைப்பு. தேசிய நீரோட்டத்தில் கலந்ததனால ஆமாதா  இப்போது  வழக்கமான கோமாதா  ஆகிவிட்டது.  தமிழகத்தில் எல்லா முக்கிய நகரங்களிலும் கோமாதா பூஜையை விநாயகர் சதுர்த்திக்கு சமமாகக் கொண்டாடத் திட்டம்.  

அப்போது வாசலில் கார் வரும் சத்தம் கேட்டது. ஷாலு அவசர அவசரமாக ரெடியானாள்.  ‘நீங்களும் ரெடியாயிடுங்கோன்னு சொன்னேனே கேட்டீங்களா? ‘குருஜினியும் சர்மாவும் வந்தாச்சு’ என்று சொல்வதற்கு அவசரத்தில ‘குருமாவும் சர்ஜனியும் வந்தாச்சு’ன்னு ஷாலு சொல்ல நான் பலமா சிரிக்க ஷாலுவிற்குக் கோபம் மூக்குக்கு  மேல் வந்தது. அதற்குள் வாசலில்  பெல் அடித்தது. பக்கத்து வீட்டு சில்க் ஸ்மிதா, ” இந்தாங்க, கொஞ்சம் குருமா பண்ணினேன்’ என்று குருமாவைக் குடுத்துவிட்டுப் போனாள்.

ஷாலுவிற்கு டென்ஷன் ஏறுவது தெரிந்தது. ‘ரிலாக்ஸ் ஷாலு இன்னும்   உங்க குருஜினி வரலை. இன்னிக்கு என்ன புரோகிராம்னு சொல்லு”.

” ஷர்மாஜி வந்து  இந்த இயக்கத்துக்கான பிளானைக் கொண்டு வர்ரதா சொல்லியிருக்கிறார்.  தமிழ்நாடு எலெக் ஷன்  முடிஞ்சதும் சென்னையில ஒரு பெரிய   விழாவோட இந்த கோமாதா பூஜையை ஆரம்பிக்கணும்னு சொன்னார்.”

அப்போ ஷாலுவோட போன் அடித்தது. குருஜினிதான். ஷாலு பாய்ந்து போய் எடுத்தாள். போனில் குருஜினி சொல்வதைக்கேட்டு ஷாலு ஷாக் ஆகி, ” சாரி குருஜினி,  நீங்க போன இடம்  பழைய பதினாலு. எங்க வீடு புது  பதினாலு. அன்னிக்குப் பூஜைக்குக் கூட வந்தீங்களே?. சரி, சரி, வாங்க, ஷர்மாஜியும் வர்ராரில்ல?  ரொம்ப நல்லது. லன்ச் எல்லாம் ரெடி குருஜினி. ஆமா, வெங்காயம் பூண்டு  இல்லாமதான். காரமும் கம்மிதான். ” என்று பவ்யமாகச் சொன்னாள்.

“என்னது , பழைய பதினாலுக்குப் போயிட்டாங்களா?  கெண்டகி சிக்கன் கடையாச்சே” என்ற என்னை முறைத்துப் பார்த்த ஷாலு அவர்களை வரவேற்கத் தயாரானாள்.

இதே தப்பைத்தான் என் மாமனாரும் கிரகப் பிரவேசத்தின்போது செஞ்சார். வந்த கோபத்தில “வீட்டு நம்பரை மாத்துங்கோ மாப்பிள்ளை”ன்னு பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சார்.    அது முடியாதுன்னு எத்தனை தடவை சொல்லியும் அவர் புரிஞ்சிக்கற மாதிரி இல்லை. கிரகப் பிரவேசத்துக்கு வந்த சாஸ்திரிகள்தான் அன்னிக்கு ஹெல்ப்புக்கு வந்தார். வாஸ்துபடி உங்க பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பதினாலுதான் ராசி.  ” வீட்டு நம்பர்  பதினாலு.  பிளஸ் இரண்டு சேர்த்தா மொத்தம் பதினாறு. இவா பதினாறும்  பெற்று பெருவாழ்வா வாழ்வா! ” என்று ஒரே அடியா அடிச்சார். மாமனார் கொஞ்சம் அசந்து போயிட்டார். சுப்ரீம் கோர்ட்டுக்குமேலே வாஸ்து. அவருக்கு அப்பீலே இல்லை.  அது என்ன  பிளஸ் இரண்டுன்னு அவர் சொல்லலே.

ஆனால் கிராமத்துக்கார மாமனார் கொஞ்ச நேரத்துக்குள் சுதாரித்துக் கொண்டார்.  விடுவாரா? ” அதென்ன பிளஸ் ரெண்டு?”   என்று குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பிச்சார். சாஸ்திரியும் ஏதோ ஒரு ப்ளோவில சொல்லிட்டார். எப்படி சமாளிக்கப் போறார் என்று புரியாமல் தவிச்சேன்.ஆனால் அவர் ” அந்தக் காலத்து இல்லஸ்டிரேடட் வீக்லி எடிட்டர் ராமன் ஒரு ஜோசிய புத்தகம் போட்டார். அதில இந்த ரெண்டை ஏன் கூட்டணும்னு ரெண்டு  பக்கத்துக்கு எழுதியிருக்கார். ரெண்டு வேற யாருமில்லே!  சாட்சாத் மகாவிஷ்ணு -லக்ஷ்மி  தான். இமயமலையில்         கே 2னு ஒரு சிகரம் இருக்காம். அது கைலாசத்தை விட உசரமாம். அதனால   எல்லாத்திலேயும் இந்த ரெண்டைச்  சேத்துக்கணும். ஆதி பகவன் அப்படின்னு  அவாளைத்தான் திருக்குறளும் சொல்றது.”

இந்த வாத்தியார் கல்யாணத்தில மைக்கிலே பேசிப் பழகினவர். மாப்பிள்ளைப்  பையன் – உடுக்கை இழந்தவன்.  கையிலே தாலியை எடுத்துக்கிட்டு எப்படா தாலியைக்  கட்டிட்டு இடுப்பு வேஷ்டியை சரி பண்ணிக்கலாம்னு துடியாத்  துடிப்பான். அவனோட அந்த அவசரத்தை எல்லாம் புரிஞ்சுக்காத வாத்தியார் ‘பாணிக்கிரகணம்னா.. சக்கர பாணி , சாரங்க பாணி, தண்ட பாணி,  பாணி பூரி என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசிக்கிட்டிருப்பார். பெண்ணோட  அப்பாவுக்கு   ஏற்கனவே வயறு கலங்கும். போறாததக்கு மடியில கனம்  வேற.  “பொண்ணுக்கு ஏண்டா எப்பவும் பன்னீர் பட்டர் மசாலா வாங்கிக் கொடுத்தோம்” என்று வெயிட் தாங்காமல் தவிப்பார்.

அதெல்லாம் கண்டு கொள்ளாத சாஸ்திரி  ‘தாலி கட்டினப்பரம் பொண்ணோட கையை மாப்பிள்ளையைத் தவிர ஏன் மத்தவங்க பிடிக்கக் கூடாது’ன்னு வியாக்யானம் கொடுத்துக் கொண்டிருப்பார்.  “பெண்ணுக்குக் கை கொடுத்தீங்கன்னா நீங்க மாப்பிள்ளை ஆயிடுவேள். சரி,  நான் பாய் பிரண்ட் இல்லே . கேர்ள் பிரண்ட்தானே, பொண்ணுக்குக் கை கொடுத்தால் என்ன தப்புன்னு கேட்கலாம். அதுக்கு மந்த்ரத்திலேயே தெளிவா சொல்லியிருக்கா ! ” மாங்கல்யம் தந்துனானேனா” என்று சொல்லும் போது பெரியவாள் அழகா சொல்லியிருக்கார். என்று சொல்லி சமஸ்கிருதத்தில நாலு வரி சொல்வார். இப்போ புரிஞ்சிருக்கும் உங்களுக்கு ஏன் யாரும் யாருக்கும் சப்தபதி முடியறவரைக்கும் கையைக்  குடுக்கப்பிடாதுன்னு”.

அதுக்கு மேலே அவரிடம் வியாக்யானம் கேட்க யாருக்கும் திராணியிருக்காது.  ஏற்கனவே இலை போட்டுட்டா, பாதி பரிமாறி            விட்டார்கள். ‘மாங்கல்யம் தந்துநானே .. கெட்டிமேளம் ‘. இதுதான் கேட்டரிங்காராளுக்குக் கோட் வேர்ட்.  சீக்கிரம் தாலியைக் கட்டினா  சாப்பிட்டுட்டு ஆபீஸ் ஓடிடலாம்னு முக்காவாசி ஜனங்கள் பசியில துடிச்சுட்டிருப்பாங்க. அவனவன் பசியிலே அட்சதையையும்  அரளிப்பூவையும் திங்க வேற ஆரம்பிச்சிடுவாங்க .  காலையில கல்யாணத்துக்கு வர்ரதுக்குள்ளே டிபன் கடையை மூடிட்டாங்களேன்னு அவனவனக்கு எரிச்சல்.

சாஸ்திரியார் தன்னோட அதிகப் பிரசங்கத்தை முடிக்கறதுக்கு முன்னாடியே அவர் தொந்தரவு தாங்க முடியாத மாப்பிளைத் தோழன்       ” கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” என்று கத்திவிடுவான். அதுதான் சாக்குன்னு மாப்பிளையும்  ஒருமுடிச்சுப் போட்டுட்டு அவனோட அக்காகிட்டே மத்த முடிச்செல்லாம் போடுன்னு கொடுத்துவிட்டுத் தன் வேஷ்டியோட முடிச்சைச் சரி பண்ணிக்குவான்.

கைகொடுத்துட்டு சாப்பிடலாம் என்றிருந்த பசங்களும் பொண்ணுகளும் சாஸ்திரி சொன்னதும் நேரா கைநனைக்கப் போயிடுவார்கள். சாப்பிட்டு விட்டு  அவசரத்தில கையைச் சரியாக  அலம்பாமல் ஓடி வந்து மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் கையைக் கொடுத்துவிட்டு மொய்க்கவரைக் கொடுக்காமல் கூட்டத்தில் தப்பித்துப் போனவர்கள் பாதிப்பேர்.

மறுபடியும் வாசலில் ஒரு வண்டி வந்து நிக்கும் சத்தம் கேட்டது. நாங்க ரெண்டு பேரும் கீழே ஓடினோம். ஒரு பெரிய வேன் . அதிலிருந்து பதினாலு பேர் கீழே இறங்கினார்கள். எங்கள்  இரண்டு பேரையும்  சேர்த்தால் பதினாறு பேர். ஷாலு ரெண்டு ரெண்டு நாலு பேருக்குத் தான் சமைச்சிருக்கா. பதினாறையும்  பெற்று எப்படிப் பெருவாழ்வு வாழப் போகிறோம்னு நினைச்சு நானும் கதி கலங்கிப் போயிட்டேன்.

“இவர்கள் எல்லாம் பக்கத்தில இருக்கிற மண்டபத்துக்குப் போறாங்க. நாம உங்க வீட்டிலே சிரம பலகாரம் முடிச்சுட்டு  அப்பறம் நாமளும்  அந்த மண்டபத்துக்குப் போவோம்.” என்று குருஜினி சொன்ன பிறகுதான் ஷாலுக்குப் போன உயிர் திரும்ப வந்தது. ஷர்மாஜியின் முகமே தெரியவில்லை. முக்கா வாசி முகத்துக்குக் குங்குமம் தடவியிருக்கார். வாயில வேற பான் பராக் சாரி பான் சிவப்பு. கிட்டத்தட்ட சிவப்பு இந்தியர் மாதிரி இருந்தார்.  ஒருவழியாக வேனை அனுப்பிவிட்டு ஷர்மாஜியும் குருஜினியும் எங்கள் வீட்டுக்கு எழுந்தருளினார்கள்.

சர்மா வீட்டுக்குள் நுழைந்ததும்  என்கிட்டே ஹிந்தியில் கங்காஜலமும் பிளேடும்  கிடைக்குமா என்று கேட்டார். கங்கா ஜலத்திலதான் ஷேவ் பண்ணிப்பாரோன்னு திகிலா இருந்தது.

எங்க கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாளிலே என்  மாமனார் காசிக்கு போயிட்டுத்  திரும்ப வரும்போது எங்க வீட்டுக்குத்தான் நேரா வந்தார். மாப்பிள்ளை   உங்க காசி யாத்திரையின் போதுதான் நானும் காசி யாத்திரை போகணும்னு நினைச்சேன். ‘பிடியுங்கோ கங்கா ஜலம்’ என்று ஒரு சிறிய சொம்பைக் கொடுத்தார். ‘காசியில என்னத்தை விட்டுட்டேன் தெரியுமா? முள் கத்தரிக்காயும் மாம்பழமும்.’ அவருக்குப் பிடிக்குமேன்னு அன்னிக்கு மாம்பழ சாம்பாரும் முள்கத்தரிக்காய்க் கறியும் பண்ணியிருந்தாள் ஷாலு. “அது நான் ராமேஸ்வரம் போய் காசி மண்ணைக் கொட்டினதிலேருந்துதான் கணக்கு” என்று சொல்லி அன்றைக்கு மாம்பழத்தையும் கத்தரிக்காயையும் ஒரு பிடி பிடித்தார் என் மாமனார் .

மாமனார் கொடுத்த அந்த கங்கா ஜலத்தையும் ஷிவானி புத்தகத்திற்கு அட்டைபோட உபயோகிக்கும் பிளேடையும் கொண்டு வந்து கொடுத்தேன். குருஜினி விளக்கினார்.

பழைய பதினாலில் அவர்கள் அவதி அவதியென்று நுழைந்த போது அன்றைக்கு எல்லாருக்கும் இலவசமாக ஒரு சிக்கன் பீஸைக் கொடுத்துக் கொண்டிருந்தார்களாம். பிரசாதமோ என்று எண்ணி தெரியாமல் அதைக் கையில் வாங்கிவிட்டாராம் ஷர்மாஜி.  அதனால் கையைக் கங்கா ஜலத்தில் கழுவினார் ஷர்மாஜி. பிறகு பிளேடால் தன் வலது கையில் ஆயுள்ரேகைக்குக் கீழே ‘ஜெய் பஜ்ரங்பலி’ என்று கூறி ஒரு கோடு போட்டார். ரத்தம் குபுகுபுவென்று வந்தது.அதை அப்படியே ரத்தத் திலகமாக சிவப்பு கொஞ்சம் இல்லாத முகத்தில் தடவினார். குருஜினியும் அதைத் தொட்டு நெற்றியில் நீட்டமாக இட்டுக் கொண்டார். நல்லவேளை எங்களுக்கு ரத்தத்திலகம் தரவில்லை. மறுபடியும் கங்காஜலத்தினால் கையை அலம்பினார். பிறகு சாப்பிட உட்கார்ந்தனர்.

இன்றைக்கும்  அதே மாம்பழ சாம்பாரும் முள்கத்தரிக்காய் கறியும் தான். குருஜினிக்கு இந்த காம்பினேஷன் ரொம்பப் பிடிக்குமாம். ஷர்மாஜிக்கு சப்பாத்தி, தால். ஷர்மாஜி தாலைச் சாப்பிட்டுக்கொண்டே அச்சா என்றார். ஷாலுவிற்கு அச்சார் என்று கேட்டது. அந்தக்கால விஷாரத் இல்லையா அவள் ? “சாரி மறந்திட்டேன்” என்று சொல்லி ஆவக்காய் மாங்கா ஊறுகாயை அவர்  தட்டில் போட்டாள். ஏற்கனவே தாலில்  இருந்த பச்சைமிளகாயைக் கடிச்சுட்டு அவர் கண்ணீரும் கம்பலையுமா  இருந்தார்.  ஊறுகாய்,  எரிகிற வாய்க்கு வென்னீரை விட்டது போல் இருந்திருக்கும். அதற்குமேல் ஷர்மாஜியால் ஒன்றும்  பேச முடியவில்லை.

குருஜினிதான் எல்லா விஷயங்களையும் கூறினார்.

சென்னையில் பத்து இடங்களில் காமதேனு பூங்கா. இருபது இட
ங்களில் கோமாதா பூஜை. பிறகு தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத் தலைநகர்களிலும் கோமாதா பூஜை. ஷோலிங்கநல்லூரிலும் மாதவரத்திலும்  ஆவின் பாலகத்திற்கு அருகே கோமாதாவிற்குக்

கோயில். அதே போல் கோயமுத்தூரிலும் நாகர்கோவிலிலும் கோமாதா  கோவில். ‘கோமாதா காமதேனு முன்னேற்றக் கழகம்’ ஒரு அரசியல் அமைப்பு அல்ல. மக்களுக்கு ஆன்மீகத்தைக் குறிப்பாகக் கோமாதாவின் பெருமைகளை எடுத்துரைக்கும் மாபெரும் இயக்கமாக வரவேண்டும்.  திட்டம் பலமாக இருந்தது.

ஆனால் அதே சமயம் இந்தத் திட்டத்தைப் பற்றித் தெரிந்துகொண்ட மற்றொரு புது இயக்கம் இதற்கு எதிராகத் தமிழ் நாட்டில் ஈரோட்டில் எருமை மாட்டை முன்னிறுத்தி அதற்குக் கோயில் கட்டத் தீர்மானித்திருந்தார்கள் என்பது அந்தச் சமயத்தில் அவர்களுக்குத் தெரியவில்லை.

(தொடரும்)