ஜூன் 4 – மாலை 4 மணி ஜி ஆர் டி அரங்கத்தில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியில் இருந்தார்கள் என்றால் அது ஒரு திருமண அல்லது நிச்சயதார்த்த விழா என்று தானே நினைப்பீர்கள்!
மன்னிக்கவும். அது ஒரு புத்தக வெளியீட்டு விழா!
டாக்டர் பாஸ்கர் எழுதிய ‘அப்பாவின் டைப்ரைட்டர்’ என்ற கட்டுரைப் புத்தகம்தான் அது.
மணிமேகலைப் பிரசுரம் பதிப்பித்துள்ளது.
விழாவைப்பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டுப் புத்தகத்தின் விமர்சனத்துக்குப் போகலாம்.
இந்த விழாவில் , பாஸ்கரன் என்ற மனித நேயமிக்க ஒரு மருத்துவரையும், நட்புக்கு உதாரணமாகத் திகழும் சிறந்த நண்பரையும் , தனக்கென்று ஒரு பாணியை அமைத்துக் கொண்டு எழுதிவரும் எழுத்தாள்மையையும், புத்தகத்தின் மூலம் தந்தைக்கு விழா எடுத்த பெருந்தகைமையையும் கண்டோம்.
ரவி தமிழ்வாணன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், லேனா தமிழ்வாணன், லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை ஆசிரியர் கிரிஜா ராகவன், உரத்த சிந்தனை ராம் ,முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ,மற்றும் எழுத்துலகப் பிதாமகர் அசோகமித்ரன் ஆகியோரை மனம் போன அளவில் பேசவிட்டு விழாவின் நாயகரான டாக்டர் பாஸ்கர் இரண்டே இரண்டு நிமிடம் பேசிய ஓர் அபூர்வ நிகழ்ச்சியையும் அங்கே கண்டோம்.
இதை எழுதிவிட்டு “அப்பாவின் டைப்ரைட்டர்’ புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட்டு எழுதுகிறேன். ( இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது இதைப்படித்து முடிக்க )
எனது ஒரு வரி FIR :
படிப்பதற்கு சுலபமாக இருக்கிறது.
விவரம்:
சொல் புதிதில்லை கருத்தும் புதிதில்லை. குபுக்கென்று சிரிக்க வைக்கவில்லை. கண்ணின் ஓரத்தில் கண்ணீர் கசிய வைக்கவில்லை. ஆனால் நடை – கோடையின் துவக்கத்தில் அக்கரையின் ஓரத்தில் கொஞ்சமாக ஓடும் காவிரியைப் போல எழுதியிருக்கும் இவரும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று சொல்ல வைத்துவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது. (அலை பாயுதே மாதவன் சொல்வது மாதிரி )
வறுத்த நிலக்கடலையை அல்லது சீடையை ஒன்றொன்றாக வாயில் போட்டு அசை போட்டுக்கொண்டு அந்தக்காலத்தில் அக்கா , தம்பி தங்கைகளோடு சண்டை போட்டுக்கொண்டு குமுதம், விகடன், கல்கி, கல்கண்டு, சாவி, இதயம், குங்குமம் படிப்போமே !
{ நான்: நான் முதல்லே படிச்சுட்டு தர்றேன்.
அக்கா: நீ முதல்லே வேண்டாம் – முதல் அட்டைலேர்ந்து கடைசி அட்டை வரை படிப்பே !
நான்: இல்லேக்கா -சத்தியமா தொடர் கதைகள்- சிறுகதைகள் எல்லாம் படிக்கமாட்டேன் ! சும்மா துணுக்கு எல்லாம் பாத்துட்டுத் தர்ரேன்
அக்கா: சரி! சரி! நீயே படிச்சுட்டுத் தா. அதுக்காகச் சத்தியமெல்லாம் பண்ணாதே!}
அதைப்போல இதமாக இருந்தது.
பிள்ளையார் சுழி போட்டு, அப்பாவிற்கும் அவரது டைப் ரைட்டருக்கும் ஒரு கும்பிடு போட்டு டாக்டர் பாஸ்கரன் சென்ற பாதை கடற்கரைச் சாலையில் நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவது போல ஜாலியாக இருந்தது.
பழகிய நண்பர்கள் ( சீராஜூதீன், லேனா)
பிடித்த எழுத்தாளர்கள் ( சார்வாகனன், ம.வே சிவகுமார், சுஜாதா, அழகியசிங்கர், ஜெயகாந்தன், விக்ரமன், அசோகமித்திரன், சந்திரமோகன், சந்திரசேகர், ரமேஷ், முத்துலிங்கம், மாலன் )
மதிக்கும் மனிதர்கள் ( மாமனார், தலைமை ஆசிரியர், டாக்டர் சாந்தா, கிருஷ்ணமூர்தி ஸ்ரீநிவாஸ், டாக்டர் சுனிதி சாலமன், )
பிரபலங்கள் ( தேவன், சஞ்சை சுப்ரமணியன், மாண்டலின் ஸ்ரீநிவாஸ், சோ ,கிரிஜா ராகவன், மனோரமா )
திரைப்படங்கள் ( இதயக்கமலம், தில்லானா மோகனாம்பாள், மைக்கேல் மதன காம ராஜன், காக்கா முட்டை, குற்றம் கடிதல்)
மனதை வருடிய செய்திகள் ( சிறுவயது பள்ளி, மார்கழிப் பூ, செக்கு, கிருஷ்ண ஜெயந்தி,சென்னை வெள்ளம், அய்யப்பன்)
சென்ற இலக்கியக்கூட்டங்கள், படித்த புத்தக விமர்சனங்கள்,
எல்லாவற்றிற்கும் மேலாக அவரது மருத்துவத் துறையைப்பற்றிப் பல உயரிய பதிவுகள்
டாக்டர் பாஸ்கரன்! உங்களிடம் ஸ்டெத் மட்டுமல்ல நல்லதொரு பேனாவும் இருக்கிறது.
இரண்டையும் போற்றிப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை!

