குருஜினியும் ஷாலுவும் பஜ்ரங்க்பலி ஷர்மாவும் சேர்ந்து கோமாதாவின் கோவிலுக்காக்கத் தயார் செய்து கொண்டிருக்கும்போது அவர்களின் எதிரணியின் பிரசார பீரங்கி பலமாக வேலை செய்தது. எருமையும்தான் நமக்குப் பால் தருகிறது. சொல்லப்போனால் எருமைமாட்டுக் கா
பிதான் டிகிரி காபி மற்றவையெல்லாம் வெறும் பிளஸ் டூ தான். எமனுக்கு வாகனம் எருமை. எமன் தமிழன். காமதேனு – கோமாதா எல்லாம் ஆரிய மாயை என்று அவர்கள் பிரசாரம் செய்யும் அளவிற்குப் போய்விட்டது.
தமிழ்நாட்டில் எப்பவும் எல்லாத்திலும் ரெண்டு கட்சி இரு
க்கும். அந்தக் காலத்தில தெருக்கூத்திலக்கூட எரிஞ்ச கட்சி எரியாத கட்சி என்று ரெண்டு இருக்குமாம். காப்பிக்கு டபரா டம்ளர் என்று இருப்பது போல. இட்டிலுக்கு சட்னி சாம்பார் என்று இருப்பது போல.
முன்னாடி சோழன்-பாண்டியன் என்று அடிச்சுக்கிட்டோம். அப்புறம் சிவன்-.விஷ்ணு என்று அடிச்சுக்கிட்டோம். சினிமாவில எம் ஜி ஆர் – சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய், விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் என்று எப்பவும் நாம் ரெண்டு பிரிவா பிரிஞ்சே நிப்போம். அரசியல்ல திமுக – அதிமுக, கருணாநிதி – ஜெயலலிதா இப்படி எல்லாத்திலேயும் ரெட்டை ரெட்டையா நாம பிரிஞ்சே இருப்போம். அது தான் இரண்டின் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையோ?
எங்க வீட்டிலேயே எடுத்துக்கங்களேன்.ஷாலு ஆளுங்கட்சி. நான் எதிர்க்கட்சி. ஷிவானி, ஷ்யாம் இருவரையும் சேர்த்துக்கொண்டு மக்கள் நலக்கூட்டணி அமைப்பேன். ஷிவானி, ஷாலுகூட எல்லாத்துக்கும் சண்டைபோடுவா. என்கூட இருப்பது போலத் தோன்றும். ஆனா
எங்கட்சிக்கு வரமாட்டா. ஷ்யாம் சுயேச்சை எம் எல் ஏ ராஜ்யசபா தேர்தலில் ஓட்டுப் போடுவதுபோல யாருக்குப் போடுகிறான் என்பது அவனுக்கே தெரியாது. என் சைடுன்னு நினச்சுக்கிட்டிருப்பேன் ஆனா பல சமயம் சேம் சைடு கோல் போடுவான். ஒவ்வொரு முறையும் எனக்கு சாதகமா ஓட்டுப் போட நான் காசு அல்லது மற்ற சமாசாரங்கள் கொடுக்கவேண்டியிருக்கும். ஷாலு அம்மாவாச்சே. குழந்தைகளுக்கு இலவசங்களைக் கொடுத்தே என்னைக் கவுத்திடுவா.
இதெல்லாம் படிக்கும் போது உங்களுக்கு ஷாலு ஒரு கொடுமைக்கார அரக்கி மாதிரி, நம்ம சீரியல்களில் வரும் வில்லிகள் மாதிரி தோன்றியிருக்கும்னா அதற்கு நான் பொறுப்பில்லை. நானும் கொஞ்சம் சாதாரண நிகழ்ச்சிக்குக் கண்ணும் காதும் வைத்து எழுதுவதுண்டு. ஷாலு இதைக் கண்டு கொள்வதில்லை என்பதால் என் தெனாவட்டு பல மடங்கு அதிகரித்துவிட்டது.
ஆனால் இது எனக்கும் ஷாலுவுக்கும் இருக்கிற கல்யாண அக்ரிமெண்ட்டின் அடிவாரத்தையே ஆட்டிவிடும் என்பதைத் தெரிந்து திடுக்கிட்டுப்போனேன். அது என்ன அக்மெரிண்ட் என்கிறீர்களா?
நானும் ஷாலுவும் எப்படி லவ் பண்ணிக் கல்யாணம் செய்துகொண்டோம் என்று உங்களுக்கு விலாவாரியா சொன்னேன். கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவுக்கெவ்வளவு இன்னோசெண்ட் ஆக இருந்தாளோ அந்த அளவுக்கு இப்போ இண்டெலிஜெண்டா இருக்கா. கல்யாணம் முடிஞ்சு முதல் இரவில ஷாலு என்கிட்டே சொன்னாள்:

“இங்கே பாருங்கோ! இப்போ உங்க கிட்டே சில முக்கியமான சமாசாரம் பேசப்போறேன். என்னன்னா லவ் பண்ணும் போது நாம நிறைய பொய் சொல்லியிருப்போம். நிறைய சமாசாரங்களை மறைச்சிருப்போம். அதெல்லாம் காதல் பண்ணும் போது ஓகே. ஆனால் கல்யாணம் ஆனப்புறம் நம்மகிட்டே எந்த விதமான ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது.
“கரெக்ட் ஷாலு , நம்மகிட்டே எந்த விதமான ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது. கிட்ட வா “
:”கொஞ்சம் இருங்கோ! நாம நிறைய பேசணும். எங்க தமிழ் டீச்சர் எங்களுக்கு இதைப்பத்தி கிளாஸ் எடுத்திருக்கா. நாம மனம் விட்டுப் பேசணும். அப்பறம்தான் மத்த எல்லாம். “
” தமிழ் டீச்சர் எல்லாம் அப்படித்தான் சொல்வாங்க. அவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் பேச்சுதான். எங்க என் சி சி மாஸ்டர் கூட சொல்லிக் கொடுத்திருக்கிறார் ஸ்கூலில. பேச்சைக் கொறை செயலில் இறங்குன்னு”
“நான் சீரியஸா பேசறேன். நீங்க ஜோக் அடிக்கிறீங்க. இந்த சமயத்திலதான் நாம ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கணும்.
“நானும் அதையேதான் சொல்றேன்- நாம ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கணும்”
“கொஞ்சம் கேளுங்க! நான் உங்ககிட்டே மறச்சதை முதல்ல சொல்லிடறேன். அப்பத்தான் நான் எந்தவித குற்ற மனப்பான்மையும் இல்லாம உங்க கூட இருக்கமுடியும். அதுக்கப்பறம் நீங்க உங்களைப் பத்தின எனக்குத் தெரியாத உண்மையெல்லாம் சொல்லணும். “
“ஷாலு, உன்னைப்பத்தின எந்த உண்மையையும் என்னால ஏத்துக்கமுடியும். பழசு ஏதாயிருந்தாலும் அதை மறந்துட்டு நம்ம வாழ்க்கையைத் தொடங்குவோம். நேரமாகுது.”
“நீங்க பழசு வேண்டாமுன்னு சொல்றதைப் பாத்தா எனக்கு சந்தேகமாயிருக்கு”
“நீ பழசைச் சொல்லத் துடிக்கிறதப் பாத்தா எனக்கு பயமாயிருக்கு”
” நான் சொல்லவேண்டியதை சொல்லிவிடறேன். நீங்க பெருந்தன்மையோட அதை ஏத்துப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”
” ஷாலு, இதெல்லாம் சினிமாவிலேயும் கதையிலும் தான் வரலாம். நிஜ வாழ்க்கையில முதல் இரவில் யாரும் இப்படிப் பேசிக்கிட்டிருக்க மாட்டாங்க.”

” ப்ளீஸ், நான் சொல்ல வந்ததைச் சொல்லவிடுங்க! நான் உங்களை லவ் பண்ணறதுக்கு முன்னாடியே…….
முன்னாடியே?
சொன்னாள்.
என் தலை வெடித்தது. காலேஜ் படிப்பு முடிஞ்சப்புறம் ஒரு வருஷமா அவள் லவ் பண்ணியிருக்காளா? அவ அம்மா அப்பாவுக்கும் தெரியாமலா? மகாபலிபுரம் லைட் ஹவுஸ் ஜோசியன் இதைப் பற்றி ஒண்ணும் சொல்லவில்லையே? எத்தனை நாள் நானும் இவளும் மணிக்கணக்கா பேசிக்கொண்டிருந்தோமே ? அப்பல்லாம் சொல்லலையே? வெறும் லவ் தானா? அதுக்கும் மேல உண்டா?
“அந்த வயசில தெரியாம வந்த ஆசை. அதில ஒரு கிக். மொள்ள அம்மா அப்பாகிட்டே சொன்னேன். எனக்கு வந்த கடிதங்களையெல்லாம் காட்டினேன். அவர்கள் ஒத்துக்கவேயில்லை. எல்லாவற்றையும் கிழித்து எறிந்தார்கள். அதற்குப் பிறகு என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.”
இதை நான் எதிர்பார்க்கவில்லை.
“விடு ஷாலு, கீதா சொன்னாளே?” என்று ஏதோ பேசவேண்டும் என்று உளறினேன்.
“யார் கீதா?” – அவள் குரல் உயர்ந்தது.
“கீதா .. பகவத் கீதா .. நடந்தது ஓடட்டும் . நடப்பவை நடக்கட்டும். அது சரி..” கொடேஷன் சரியா சொல்லத் தெரியாமல் தடுமாறினேன்.
“இப்ப தான் எனக்கு நிம்மதியாச்சு. உங்களுக்கு அதில ஒண்ணும் வருத்தமில்லையே?”
விஷத்தைக் கொடுத்துவிட்டு அதில் சர்க்கரை போதுமோ என்பது போலல்லவோ கேட்கிறாள் என்று நினைத்தேன்.
“இந்தாங்கோ! இந்தப் பாலைக் குடிச்சுட்டு உங்க கதையைச் சொல்லுங்கோ!” என்றாள்.
“ஷாலு, ஒரே ஒரு கேள்வி உன்னுடைய பழைய சமாசாரத்தைப் பத்தி. நீ லவ் பண்ணிணியே அவன் பேர் என்ன? “
“வாட். லவ்வா?” அலறினாள் ஷாலு. :யாரு சொன்னா நான் லவ் பண்ணினேன்னு ? நான் லா பண்ணினேன்னு சொன்னது உங்களுக்குக் காதில விழலையா? சட்டம். பி ஜி எல். கரெஸ்பாண்டில் பண்ணினேன். உங்களுக்கு லவ்வுன்னா விழுந்தது?”
“அப்பாடா, என் வயத்தில கூஜா நிறைய பாலை வார்த்தாள். நீ ‘லா’ பண்ணினேன்னு சொல்லணுமா என்ன? உன் ரத்தத்திலேயே ஆர்குமெண்ட் ஊறியிருக்கு.”
இந்தக் களேபரத்தில என்னோட பழய கதையைக் கேட்க மறந்துட்டா. நல்லதாப் போச்சு!
“நீங்க எப்படியிருந்தாலும் நான் உங்களை மனசார ஏத்துக்கறதா அன்னிக்கு ஆஞ்சநேயர் ஸ்வாமி கிட்டே வாக்குக் கொடுத்துட்டேன். சரி, நம்ம அக்ரிமெண்டுக்கு வருவோமா?”
“அதென்ன அக்ரிமெண்ட்? ஓஹோ ! கல்யாணத்துக்கு முன்னாடி லா(வ் ) பண்ணின குசும்பா?”
“உங்களை நான் மகாபலிபுரத்தில பாத்த அன்னிக்கு எனக்குத் தூக்கமே வரலை. கனவில நம்ம ரெண்டு பேருக்கும் அன்னைக்கே கல்யாணம் ஆயிடுச்சு. நடு ராத்திரி எழுந்திருச்சு
உங்க பேரை மேஜை மேலேயிருந்த பேப்பரில் எழுதினேன். அப்போதான் தெரிஞ்சுது அது ஒரு ஸ்டாம்ப் பேப்பர் என்று. அதில நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனபிறகு நடக்கப்போற ஒரு அக்ரீமெண்டைக் கற்பனையா எழுதினேன். இது தான் அது” என்று காட்டினாள்.
அதை நான் சத்தமாகப் படிக்கப் படிக்க ஷாலு வெட்கத்தில் நெளிந்தாள். அதில் எழுதியிருந்ததைப் படிக்கும்போது எனக்கே சந்தோஷமாக இருந்தது. இந்த மாதிரி அக்ரிமெண்ட் போட்டா எந்தக் கல்யாணத்திலும் பிரச்சினை வராது. “இவ்வளவு ஆசையாடா ஷாலுக்குட்டி” என்று கேட்டுவிட்டு அவளை இறுக்கப் பிடித்தேன்.
அந்த அக்ரிமெண்டில் என்ன எழுதியிருந்தது என்று தெரிந்துகொள்ள ஆசையாய் இருக்கிறதா? சாரி! லேடீஸ் மற்றும் ஜெண்டில்மென். அதெல்லாம் கண்டிப்பா பர்சனல். உங்க ஆசையைத் தூண்டிவிட்டதற்காக ஒரே ஒரு ஐட்டம் மட்டும் சொல்லுகிறேன்.
கண்டிஷன் நம்பர் 7: என்ன தகராறு வந்தாலும் ராத்திரி பத்து மணிக்குக் கட்டிலில் கட்டிப் பிடித்துக் கொண்டு ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்ற பழைய பாடலின் முதல் வரியை மூன்று முறை பாடவேண்டும்.
ஆனால் குவிகத்தில் எழுதிவரும் இந்தத் தொடர் எனக்கும் ஷாலுவுக்கும் இருக்கிற கல்யாண அக்ரிமெண்ட்டின் அடிவாரத்தையே அசைத்துவிடும் போலிருக்கிறதே !
அப்போது போன் அடித்தது. குவிகம் ஆசிரியர்தான். கசாமுசான்னு கத்தினார்.
” நகைச்சுவைத் தொடர் என்று சொல்லிவிட்டு ஏதோ சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பினாத்திக் கொண்டே போகிறீர்களே? தேவையில்லாமல் மோடிஜியை இழுத்திருக்கிறீர்கள். யோகாவையும் நமது கலாச்சாரத்தையும் கிண்டல் செய்கிறீர்கள். பெண்களை மிகவும் கேவலப்படுத்துகிறீர்கள். ஹிந்து மதத்தையும் கோமாதா பூஜையையும் பஜ்ரங் பலியையும் தவறாகச் சித்தரித்திருக்கிறீர்கள். குழந்தைகள் மனதில் தீவிரவாத எண்ணத்தை விதைக்கிறீர்கள். ஆர்குமெண்ட் என்ற பெயரில் அராஜகம் செய்கிறீர்கள். இதனால் சில அரசியல் கட்சிகள் குவிகத்தைத் தடை செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தக் குற்றங்களுக்கு அடுத்த மாதக் கதையில் சரியான பதில் சொல்லவில்லை என்றால் அத்துடன் கதை நிறுத்தப்படும். விட்டுப்போன செய்திகளை பொன்னியின் செல்வன் மாதிரி நாலைந்து கேள்வி-பதிலில் நானே முடித்து விடுவேன்” என்று ஒரே மூச்சில் சொன்னார்.
அதைதொடர்ந்து ஒரு சம்மன் எஸ்எம்எஸ் . குருஜினியிடமிருந்து வந்தது
என்னுடைய இந்தத் தொடரைப் படித்துவிட்டு ஷாலு என்னைப் பத்தி குருஜினியிடம் போட்டுக் கொடுத்துவிட்டாள். கிட்டத்தட்ட வக்கீல் நோட்டீஸ் மாதிரி இருந்தது அந்த எஸ் எம் எஸ். ” நீங்கள் என் சிஷ்யையிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காகவும், (அடிப்பாவி!) அவர்களின் கவுரவத்திற்குக் குந்தகம் ( குந்தகம் அப்படின்னா என்னா சார்) விளைவித்ததற்காகவும் உங்கள் மீது குருஜினி நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குடன் ஒரு விசாரணைக் கமிஷன் வைத்திருக்கிறோம்.
ஜட்ஜ் ‘என்னம்மா இப்படி பண்ணறீங்க’ புகழ் விஜயலக்ஷ்மி அம்மையார்.
அடுத்த ஜூலை மாதம் 15ஆம் தேதி நீங்கள் ஆஜராகவேண்டியது. உங்கள் சாட்சியங்கள் ஷிவானி , ஷ்யாம், ஷாலுவின் அப்பா , அம்மா மற்றும் பிளாட்டில் இருக்கும் சில்க் ஸ்மிதா அவர்களுக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது. உங்களுக்குத் தேவையானால் ஒரு வக்கீலை நியமித்துக் கொள்ளலாம். “என்னையும் என் குழந்தைகளையும் கேவலப்படுத்துவதற்காகவே இந்தத் தொடர் எழுதப்பட்டு வருகிறது . இதனை உடனே தடை செய்யவேண்டும் ” என்று புகார் கொடுத்த ஷாலு தனக்குத் தானே வாதிடுவதாக அறிவிப்பு அனுப்பியிருக்கிறாள்.
இந்தக் கதை இப்போது நீதி மன்றத்தின் பார்வையில் உள்ளது. இடைக்காலத் தடை இல்லையென்றால் கதை தொடரலாம்.
(வாய்தா ஏதும் இல்லையென்றால் அடுத்த மாதம் முடியலாம்)
