பிந்துசாரன்

 

sar1
பிந்துசாரன் பிறந்த கதை பார்த்தோம்.  ( 

(பிம்பிசாரன்  வேறு . அவன்  ஆம்ரபள்ளி கதையில் வருபவன் . பிந்துசாரன்  சந்திரகுப்தனின் மகன். நெற்றியில் விஷப் பொட்டுடன் பிறந்தவன் , குவிகம்  மே  இதழில் உள்ள சரித்திரம் பேசுகிறது பகுதியைப் படிக்கவும்) 

பிந்துசாரன்  பிறப்பதற்குப்  பிரசவம் பார்த்த சாணக்கியர் – அவனது ஆட்சியிலும் மந்திரியாகவும் அரசியல் ஆலோசகராகவும் இருந்தார்.

பிந்துசாரனின் மற்றொரு மந்திரி சுபாந்து.

சுபாந்துவுக்குச் சாணக்கியரைக் கண்டாலே ஆகாது.

பொறாமை!

சுபாந்துவுக்கு பொறாமை தாங்க முடியவில்லை.

ஒரு நாள் அரண்மனையில் சுபாந்து – மன்னன் பிந்துசாரனைத் தனியாகச் சந்தித்தான்.

“அரசே! நான் இப்போது சொல்லப் போவது சத்தியமான வார்த்தைகள். இதைச் சொல்வதால் தாங்கள் என்னிடம் கோபம் கொள்ளலாகாது!”

“அமைச்சரே! உங்கள் கருத்தை என்றாவது தவறாகக் கருதி இருக்கிறேனா? கூறுங்கள்”

“உங்கள் தாய்.. மகாராணி துர்தாரா.. அன்பும் அறிவும் கொண்ட பேரரசி” என்று நிறுத்தினார்.

“என்ன செய்வது சுபாந்து! நான் கொடுத்து வைக்காத பாவி! பிறந்த போதே அன்னையைக் கொன்றவன் நான்! தாயை ஒரு முறை கூடக் காணக் கிடைக்கவில்லை” – பிந்துசாரன் கண்கள் சற்றே கலங்கின.

“அரசே! அவர் மரணத்திற்குத் தாங்கள் எப்படிக் காரணமாவீர்கள்? ஆயினும் அதற்குக் காரணமானவர் சுதந்திரமாக உலவுவதுதான் எனக்கு இன்னும் வருத்தத்தைக் கொடுக்கிறது”

“என்ன சொல்கிறாய் சுபாந்து” பிந்துசாரனின் குரலில் சூடு ஏறியது…சற்றே நடுங்கியது!

சுபாந்து சாணக்கியரின் விஷத்தினால் மகாராணி துர்தாரா இறந்ததைக் கூறினார்.

“அரசே இந்நாள் வரை யாரும் தங்களுக்கு இதைச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஏனென்றால் – சாணக்கியர் மீது அனைவருக்கும் அவ்வளவு பயம். மகாராணியையே விஷம் வைத்துக் கொன்றவர் நம்மைக் கொல்லாமல் விடுவாரா என்ற பயம் எல்லோருக்கும்“   

சுபாந்து பொய் சொல்ல மாட்டார் என்று நம்பினான்.

“சாணக்கியரை இன்றே கொன்று இதற்கு முடிவு கட்டுகிறேன் “ – பிந்துசாரன் வாளெடுத்துப் புறப்பட்டான்.

sar2

சாணக்கியருக்கு ஆயிரம் காதுகள்.

காற்று நுழையாத இடத்திலும் அவரது உளவாளிகள்.

மன்னரின் சூளுரை அவர் காதில் உடனே சென்றடைந்தது.

சாணக்கியர் தனது உடன் இருந்த இரு வயோதிக தாதிகளை (நர்ஸ்) அழைத்தார்.

“நீங்கள் இருவரும் எனது தக்ஷசீல காலத்திலிருந்து என்னுடன் பணி புரிகிறீர்கள். எனது எல்லா ஆயுர்வேத மருத்துவத்திற்கும் என்னுடன் துணை நின்றீர்கள். மகாராணி துர்தாரா பிரசவமும் உங்கள் உதவியால் தான் நடந்தது. சாணக்கியன் என்ற ஆலமரத்தின் வேர் நீங்கள்”

தாதிகள் இதைக் கேட்டு நெகிழ்ந்தனர்.

‘எதற்காக இப்படிப் பேசுகிறார் இன்று?’ என்று சற்றே குழப்பமும் அடைந்தனர்.

சாணக்கியர் தொடர்ந்தார்:

“இன்று மன்னன் பிந்துசாரன் – நான் மகாராணியைக் கொன்றேன் என்று – என்னைக் கொல்ல வருகிறான்”

“ஐயோ…“ – தாதிகள் பதறினர்.

சாணக்கியர் : “இந்தக் கிழவனுக்கும் வயதாகி விட்டது. எனது வாழ்வின் கடமைகள் அனைத்தும் முடிந்து விட்டது. இறைவனை நாடிச் செல்லும் நேரம் வந்துவிட்டது “

தாதிகள் விம்மினர்.

சாணக்கியர் :

“வருந்தாதீர்கள். எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். எனது சொத்துக்களை இந்நாட்டின் ஏழை, அநாதை, மற்றும் விதவை நிலையங்களுக்குக் கொடுத்து விடுங்கள். நான் விரதம் இருந்து இறைவனடி சேர முடிவு செய்து விட்டேன் “

தாதிகளுக்குத் துயரம் தாள முடியவில்லை.

“மன்னர் சந்திரகுப்தர் முதல் மன்னர் பிந்துசாரர் வரை – அரசர்களுக்கு நன்மை செய்தே வாழ்வைக் கழித்த உங்கள் சேவைக்கு இது தானா பரிசு” தாதிகள் இருவரும் கண்ணீர் வடித்தனர்.

சாணக்கியர்  புறப்பட்டார். சுடுகாடு அருகில் உள்ள ஓரிடத்தில் – மாட்டு சாணத்தால் செய்த வரட்டிகளை வைத்து சிறு மேடை அமைத்து அதில் அமர்ந்தார். அன்ன ஆகாரம் இல்லாமல் விரதமிருந்து உயிர் விடத் துணிந்தார்.

பிந்துசாரன் கோபத்தின் உச்சியில் இருந்தான். நேரே சாணக்கியரின் அரண்மனை சென்றான். சாணக்கியரின் தாதியர் இருவரைக் கண்டான்.

sar3

‘ இந்த மூதாட்டிகள் தானே நான் இந்த உலகுக்கு வர உதவினர்!’ பிந்துசாரன் கரங்கள் கூப்பின. சற்றே சாந்தமடைந்தான்.

இருப்பினும் சாணக்கியர் செய்த கொடுமையை எண்ணி…

“சாணக்கியர் எங்கே?” என்று உறுமினான்!

ஜூலியஸ் சீசர் மரணத்திற்குப் பின் மார்க் ஆண்டனியின் சொற்பொழிவு ஷேக்ஸ்பியர்  எழுதியதால் பிரபலமானது.

அன்று இந்த தாதியர் பேசியது அதற்குச் சற்றும் குறைந்ததல்ல.

ஒரு நூற்றாண்டு காலமாக மக்கள் நலம் – மன்னர் சந்திரகுப்தர்  மற்றும் அவரது குடும்ப நலம்- ஒன்றையே மனதில் கொண்டு நாளும் இரவும் உழைத்த சாணக்கியரின் தியாகத்தை எடுத்துரைத்தனர்.

“நல்லது செய்வது என்றே அவர் செய்த ஒன்று மகாராணியை பலி வாங்கியது. ஆனால் அது சந்திரகுப்தர் செய்த தவறு. அந்நாள் வரை மகாராஜாவும் மகாராணியும் தனித் தனியாகத்தான் உணவருந்த செய்யப்பட்ட ‘முறை’ யை மீறியதால் அது நிகழ்ந்தது. அதிலும் சாணக்கியரின் சமயோசிதத்தால் தான் ‘தாங்கள்’ உயிர் பெற்றீர்கள். சாணக்கியர் தவறு செய்ததாக நினைத்திருந்தால்  – தங்கள் தந்தையே அவரைத் தண்டித்திருப்பாரே! எதற்காக உங்களை சாணக்கியரிடம் ஒப்புவித்து நாடு துறந்தார்? மன்னர் மன்னரே! சுபாந்துவிடம் குறை ஒன்றுமில்லை. சுபாந்துவின்  பொறாமை மட்டும் தான் அவனது குறை. அதனால் இழைத்த இந்த தவறுக்கு அவனை நீங்கள் மன்னித்து விடவேண்டும்”

இதை எழுத நான் ஷேக்ஸ்பியர் இல்லையே. வெறும் ‘யாரோ’ தானே!

பிந்துசாரன் உண்மையை அறிந்தான்.

தாதியர் கால்களில் விழுந்து வணங்கினான்!

உடனே சாணக்கியர் இருக்குமிடம் சென்று மன்னிப்புக் கேட்டுத் தனது தவறுக்குப் பிராயச்சித்தம் என்ன செய்வது என்று கெஞ்சினான்.

சாணக்கியன் சொன்னான்: ‘அரசே… உங்கள் மன்னிப்பை நான் ஏற்கிறேன். ஆனால் சுபாந்துவும் என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்.”

மனிதனுக்குத் தான் என்ற அகங்காரம் அழிவதேயில்லை.

சாணக்கியனும் இதற்கு விலக்கில்லை!

பிந்துசாரன் ஒப்புக்கொண்டு புறப்பட்டான்.

சுபாந்துவை சந்தித்தான்.

sar4

கடுங்கோபத்தில் “உன்னை இன்றே கொல்லவேண்டும். ஆனால் நீ உயிர் வாழ ஒரே ஒரு வழி உள்ளது. சாணக்கியரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டால் நீ உயிர் பிழைக்கலாம்”

சுபாந்து மனமொடிந்து போனான். அரசனிடம் மன்னிப்புக் கேட்டு சாணக்கியரிடமும் மன்னிப்புக் கோர ஒப்புக்கொண்டான்.

சுபாந்து ஒத்துக்கொண்டாலும் மனம் சாணக்கியரை அடியோடு வெறுத்தது.

சாணக்கியரை சந்தித்து மன்னிப்பு வேண்டினான். அதே நேரம் அவர் அமர்ந்திருந்த வரட்டி மேடையில் ஒரு நெருப்புத் துண்டை மெல்ல ரகசியமாகச் செருகினான்.

காற்று சற்று வலுத்திருந்தது.

நெருப்பு கொழுந்து விட்டு பரவியது.

சாணத்தால் ஆன வரட்டி  – சில நொடிகளில் முழு மேடையும் பற்றி எரிந்தது.

நெருப்புக்கு எல்லாம் ஒன்றுதான்!

சாண வரட்டியானாலும் சரி…. சாணக்கியரானாலும் சரி….

எதையும் எரிக்கும். யாரையும் எரிக்கும்.

அது மௌரிய சாம்ராஜ்யத்திற்கு அடிகோலிய சாணக்கியரையும் பாரபட்சமில்லாது எரித்தது!

 

பிந்துசாரன் அவன் ஆட்சியில் பதினாறு அரசாங்கங்களை வென்றான். அவன் ஆதிக்கத்தில் அகப்படாதவை : கலிங்கம், மற்றும் தென்னிந்திய சேர சோழ பாண்டியர் மட்டுமே..

sar5

பிந்துசாரன் பல நாடுகளை வென்றது மட்டுமல்லாது நாட்டின் அரசாங்கத்திலும் முன்னேற்றம் செய்தான். ஆயுர்வேதத்திற்கு பெரும் ஆதரவு அளித்தான். கலாச்சாரத்திற்கும் அனைத்து மதங்களுக்கும் மதிப்பு அளித்தான். தந்தை பின் பற்றிய சமண மதத்தைப் பின் பற்றாது –புத்த மதத்தையும் பின் பற்றாது – அஜீவக மதத்தைப் பின் பற்றினான்.   

sar6

 

பிந்துசாரன் பல மனைவிகளைக் கொண்டிருந்தான்.

அவர்களில் ஒருத்தி ‘தேவி தர்மா’!

தேவி தர்மா – சம்பா நகரத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த அழகிய பெண்!

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒரு சில பெண்களின் அழகு பெரும் பிரசித்தம் அடைவதுண்டு. அது போல் தேவி தர்மாவின் அழகும் அந்நாளில் பெருவாரியாகப் பேசப்பட்டது. கால நிமித்தகர் இந்தப் பெண்ணைப் பற்றிக் கூறும் போது ‘மன்னனை மணந்து சக்கரவர்த்தியை மகனாகப் பெறும் பாக்கியம் பெற்றவள்’ என்றனர்.

பெற்றோர்கள் அவளை பொன்னகையால் அலங்கரித்து –பாடலிபுத்திரத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மன்னன் பிந்துசாரனை சந்தித்து :

‘எங்கள் மகள் மங்களகரமான பெண். தேவதை! இவளைத் தாங்கள் மணந்து கொள்ள வேண்டும்’ என்று விண்ணப்பித்துக் கொண்டனர்.

பிந்துசாரன் அவளை அந்தப்புரத்தில் சேர்த்தான்.

அந்தப்புரம் ஒரு பெரும் விடுதி போல் இருந்தது.
பதினாறு பேர் பிந்துசாரனின் மனைவியர்.
மற்றவர் பிந்துசாரனின் காமக் கிழத்தியர்.

அனைவருக்கும் இந்தப் பேரழகி மேல் ‘பொறாமை’ வந்தது.
‘மன்னன் இந்தப் பெண்ணிடம் உறவு கொண்டால், நம் ஒருவரையும் பிறகு சீண்டவே (தீண்டவே) மாட்டான்’ என்று எண்ணினர்.

அரண்மனைப் பெண்கள் ஒன்று கூடினர்.
கூடி, திட்டமிட்டு – அவளுக்கு சிகை அலங்காரம் பயிற்றுவித்தனர்.
‘இப்படிப்பட்ட சிகை கலாவல்லியுடன் மன்னன் உறவு கொள்ள மாட்டான்’ என்று நம்பினர்.

சிகை அலங்காரக் கலையில் தேவி தர்மா பெரும் தேர்ச்சி பெற்றாள்.

மன்னன் அந்தப்புரம் வரும்போது. அவனுக்கு உடல் அமைதி பெற உருவி இதமாக வருடி விடுவாள். மன்னன் உடனேயே ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்து விடுவான்..

மகிழ்ந்த மன்னன்:

“பெண்ணே! என் மனமும் உடலும் குளிர்ந்திருக்கிறது. உனக்கு ஒரு வரம் தருகிறேன்.

கேள்”

‘அரசே! நான் தங்களுடன் உறவு கொள்ள வேண்டும்’

பிந்துசாரன் : “ஆனால்… நீ ஒரு சிகை அலங்காரப் பெண் ஆயிற்றே …நான் அரச வம்சத்தினன்.. பின் எப்படி…” என்று இழுத்தான்.

“மன்னர் மன்னா! நான் சிகை அலங்காரக் குலத்தில் பிறந்தவள் அல்ல. பிராமணப் பெண். என்னை உங்களுக்கு மனைவியாக என் தந்தை தந்தாரே… நினைவில்லையா?!”

ஒன்று இரண்டு என்று இருந்தால் அவனுக்கு நினைவு இருக்கும். இப்படி அந்தப்புரம் நிரம்பி வழிய பெண்கள் இருந்தால் பிந்துசாரன் என்ன செய்வான் … பாவம் J

“அப்படி என்றால்… யார் உன்னை இந்த சிகைத் தொழில் செய்யச் சொன்னார்கள் ?”

“அந்தப்புரப் பெண்கள்”

“இனி நீ இதைச் செய்ய வேண்டாம். இன்று முதல் நீ என் ராணி!”

அவர்கள் உறவு இரண்டு மகன்களைப் பெற்றுத் தந்தது.

முதல் மகன் பிறந்த உடன்:

‘இவன் பிறந்ததால் நான் சோகமற்றுப் போனேன். ஆகவே இவனை ’அசோகன்’ என்றழைப்பேன்.

இந்திய சரித்திரத்தில் பெரிதும் போற்றப்பட்ட சக்கரவர்த்தி அசோகனின் கதை சொல்வதற்கு   

…சரித்திரம் அட்டகாசமாகப் பேசும்…