
நாளைக்கு ப்ராக்டிக்கல்ஸை வைத்துக்கொண்டு ஃபிபோனஸி சீரீஸின் சி ப்ரோக்ராமை நவீன் மனப்பாடம் செய்துகொண்டிருந்தான். “சை! இதெல்லாம் என்ன ______ க்கு படிக்கணும். பைசா பிரயோஜனம் இருக்கா? வாழ்க்கைக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கா?” கடுப்போடு புக்கை மூடி வைத்துவிட்டுக் கைபேசியை எடுத்து நண்பனுக்கு டயல் செய்ய எத்தனித்தான். டயல் பேடில் 0,1,2,3,5,8 ஆகிய எண்களைக் காணவில்லை. ஏதும் கோளாறாக இருக்குமோ? லாக் செய்து திரும்ப அன்லாக் செய்து மறுபடியும் போய்ப் பார்த்தான். காணவில்லைதான். “ஏதும் புது வைரஸோ? போன மாசம்தானே வாங்குனேன்” என்று நினைத்தபடியே அதன் பின்மண்டையில் நாலு தட்டு தட்டினான்.

தட்டிக்கொண்டே இருக்கையில் பின்னிருந்து ஒரு புது குரல். “நவீன்”. “யாருடா அது?” என்று திரும்பிப் பார்த்தால் காணாமல் போன எண்கள் அங்கே நின்று கொண்டிருந்தன. சதுரமாய் ஒரு உடல், அதில் எண்கள் எழுதப்பட்டு, கைகால் மட்டும் முளைத்து. நவீனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். கிள்ளிப் பார்த்துக் கொண்டான். கனவில்லை. நிஜம்தான். ஆனால் ஏன்? “நீங்க?” என்று இழுத்தான். “இவ்வளவு நேரம் திட்டினியே? ஒரு கெட்ட வார்த்தை கூட சொன்னியே? நாங்கதான் ஃபிபோனஸி எண்கள். பேச்சு கேக்க முடியாம, சில விஷயங்களச் சொல்லி புரிய வைக்க நாங்களே வந்துட்டோம்.” பேசியது எண் 1.
தலையைச் சொறிந்துகொண்டே நின்றவனை உட்காரச் சொல்லியது எண் 2. எண் 3 தொண்டையைச் செறுமியபடி பேச ஆரம்பித்தது. முதல்ல எங்களப் பத்தி சொல்லிடுறோம். நாங்க ஒரு பெரிய கூட்டம். எவ்ளோ பேருன்னு எங்களுக்கே தெரியாது. ஆனா எங்களோட எண் குடும்பம் எங்ககிட்டயிருந்துதான் தொடங்குது. 0,1 ல ஆரம்பிச்சு இரண்டுத்தையும் கூட்டி வர்ற எண் 1. அது ரெண்டுத்தையும் மறுபடியும் கூட்டுனா 2, இப்படியே கடைசியா இருக்கற இரண்டு எண்களக் கூட்டினா புது எண் கிடைக்கும். இப்டியே செஞ்ச்சுகிட்டே இருக்கலாம். எங்களை இயற்கையில இருந்து கண்டுபிடிச்சவர் பேருதான் ஃபிபோனஸி. அவர் பேரையே எங்களுக்கு வச்சுட்டாங்க. ஆனா நாங்க இந்த பிரபஞ்சம் முழுக்க பரவியிருக்கோம். . 3 நிறுத்த 5 தொடர்ந்தது. உங்க வாழ்க்கையில பல இடங்கள்ல நாங்க குறுக்க வர்றோம். உங்க உடல்லயே சில இடங்கள்ல நாங்க இருக்கோம். “என் உடம்புலையா? நீங்களா?” நவீன் தன்னைத்தானே சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டான்.
“உன் காது இருக்குல்ல காது. அதோட வடிவம் எங்களுடைய ஜியமெட்ரி வடிவமான ஃபிபோனஸி ஸ்பைரல் மாதிரி இருக்கும். 8 அவனுடைய ஃபோனை அவன் கையிலிருந்து எடுத்து ஃபிபோனஸி ஸ்பைரலை இணையத்தில் தேடிக் காட்டியது. “காது மாதிரி இருக்கு” என தன் காதைத் தொட்டுத் தடவிப் பார்த்துக்கொண்டான். “காதோட வெளிப்புற அமைப்பு மட்டும் இல்ல. காதுக்குள்ள இருக்கற காக்லியா அப்டிங்கற எலும்புலயும் இந்த ஃபிபோனஸி சுருள் இருக்கு.

( Since these spirals have the Divine Proportion of 1.618 seeds per turn, counting the seeds any spiral will result in getting a Fibonacci Number.)
அப்றம் வீட்ல என்ன சமையல் எண்ணை? கோல்ட் வின்னரா? ஒரு சூரிய காந்திப் பூவை கைல எடுத்துப் பார்த்திருக்கியா? 1 திரும்பவும் கேள்வி கேட்டது. “இல்ல” என்றான் நவீன். வட்டம் வட்டமா பூவுக்கு நடுவுல விதைகள் இருக்கும். ஒவ்வொரு வரிசையில் இருக்கும் விதைகளின் எண்ணிக்கையும் ஃபிபோனஸி எண்கள்தான். எல்லா விதையும் முளைச்சு வர்ற செடி வளரும்போது விடக்கூடிய கிளைகளின் எண்ணிக்கை ஃபிபோனஸிதான்.அப்படி இருக்கும்போதுதான் எல்லா இலைகளுக்கும் அதிகபட்ச சூரிய ஒளி கிடைக்கும். ஆக நாங்க எல்லா இடத்துலையும் இருக்கோம்.
“இதுல இன்னொரு விஷயம் இருக்கு” ஒரு காலை மடக்கி சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த 2 சொல்ல ஆரம்பித்தது. “மூளைக்கு இயல்பாவே எங்களைப் புடிக்கும் தெரியுமா? எங்க அஞ்சு பேருக்கு அப்புறம் வர்ற எந்த ஒரு ஃபிபோனஸி எண்ணையும் எடுத்து அதுக்கு முந்தின ஃபிபோனஸி எண்ணால வகுத்தா, 1.6ன்னு ஒரு மதிப்பு தோராயமா கிடைக்கும். அதுக்கு தங்கப் பின்னம்னு பேரு. உனக்குப் புரியற மாதிரி சொல்லனும்னா golden ratio. டாவின்ஸி தெரியுமா டாவின்ஸி. மோனாலிஸா வரஞ்சாரே அவர்தான். அவர் ஒரு கணக்கு சொல்றார். முகத்தோட நீளத்தை முகத்தோட அகலத்தால வகுத்து கிடைக்கற எண் 1.6 ங்கற அளவுல இருந்தா, அவங்களுக்கு அழகான, பிறரைக் கவரக் கூடிய முகம் இருக்குமாம். பிரபலங்கள்ல, நல்ல கவரக்கூடிய முக அமைப்பு இருக்கறவங்களோட முக அளவுகள எடுத்துப் பார்த்தா அவர் சொன்னதோட ஒத்துப் போகுது. அவர் இந்த முக அளவுகளை வைச்சு ஒரு ஆள் குற்றவாளியா இல்லையான்னு சொல்லலாம்னு கூட சொன்னார். அதுவும் கொஞ்ச நாள் அமல்ல இருந்தது.” 2 கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டது.
“உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நீ செய்யாததுனால இதெல்லாம் படிச்சு என்ன பண்ணப் போறேன்னு நினைக்கிற. நீ விவசாயம் பண்றதில்ல. ஆனா யாரோ ஒருத்தன் விளைச்சல் செஞ்சாதானே உனக்கு சோறு. அதேமாதிரி தான். உனக்கு தேவையில்லாம இருக்கலாம். தெரிஞ்சுக்க முயற்சி பண்ணு. தேடு, கேள்விகேளு. அப்போதான் எங்களைப் பத்தி இன்னும் நல்லாப் புரியும் உனக்கு. எண்கள் இல்லாம எதுவும் இல்ல. ஒட்டுமொத்த பிரபஞ்சமும் இயங்கறது எண்களாலதான். நாங்க இப்போ போயிடுவோம். நீ யாருக்கோ ஃபோன் பண்ணப் போனியே. அவனப் பார்க்கப் போகும்போது வழியில சிக்னல்ல எரியற சிகப்பு விளக்க உத்துப்பார்” இதுவரை பேசாமலிருந்த 0 தான் இறுதியாக வந்தால்தான் மதிப்பு எனத் தெரிந்து இதைச் சொல்லிவிட்டு சட்டென்று அவன் போனுக்குள் குதித்து மறைந்தது. தொடர்ந்து 1,2,3,5,8 வரிசையாக உள்ளே குதித்து மறைந்தன.
தெளிவாகக் குழம்பித் தெளிந்திருந்தான் நவீன். ஃபோன் எடுத்துப் பார்த்தால் எல்லா எண்களும் அதனதன் இடத்தில் இருந்தன. நண்பனுக்கு ஃபோன் போட்டு “மச்சான்! நம்ம டீக்கடைக்கு வந்துடுடா அஞ்சு நிமிஷத்துல” எனச் சொல்லிவிட்டு பைக் எடுத்துப் புறப்பட்டான். முதல் சிக்னலை இவன் கடப்பதற்குள் சிகப்பு விழுந்துவிட்டது. சிகப்பை உற்றுப் பார்த்தான். சின்னச் சின்ன சிகப்பு ஒளியுமிழிகள்(light emitting diode) ஒளிர்ந்து கொண்டிருந்தன. கொஞ்சம் கூர்ந்து நோக்குகையில் சூரிய காந்திப் பூவின் அமைப்பு. வட்ட வட்டமாக அடுக்கி வைக்கப்பட்ட ஒளியுமிழிகள். சட்டென்று ஃபிபோனஸி எண்கள் வந்துபோயின. 3,2,1 ல் மின்னி எரியும் சிகப்பு விளக்கு தன்னைப் பார்த்துக் கண்ணடிக்கிறாற்போல் தோன்றியது நவீனுக்கு.

Arumai 😊👌
LikeLike