பாம்பே கண்ணன்  ஏற்கனவே பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தில் மிகவும் பிரபலமானவர்.  பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், அப்புசாமியும் ஆப்பிரிக்கா அழகியும்  போன்ற அருமையான கதைகளை ஒலி வடிவத்தில் தந்திருக்கிறார்.

அவரது சமீபத்திய மாபெரும் படைப்பு சாண்டில்யனின் கடல்புறா. சிறப்பான குரல் வளம் கொண்ட கலைஞர்களைக் கொண்டு தயாரித்த அந்த ஒலிப் புத்தகத்தின்  பெருமையை அந்தப் புத்தகமே பேசுகிறது. சாண்டில்யனின் சிருங்கார வர்ணனைகளை பாம்பே கண்ணனே படிக்க, மற்ற கதா பாத்திரங்கள்  உணர்ச்சியுடன்  காதில் தேன் வந்து பாய்ந்தது போல வளப்பமானத் தமிழைத் தெளிவாகக் கணீரென்று சொல்ல, கதையுடன் இழைந்து  வரும் மெல்லிசையும் சேர்ந்து இசைக்க நாம் நம்மை  அறியாமலே 1063க்கு – கதை  நடந்த காலத்திற்கே நாம் சென்றுவிடுகிறோம் என்றால்  அது ஒலிப் புத்தகமாக அமைத்த பாம்பே கண்ணன் அவர்களின்  வெற்றி என்று தான் சொல்லவேண்டும்.

ஐ டி கம்பெனியில் முதன்மை அதிகாரியாக இருந்தாலும் தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் வெங்கடராமன் அவர்கள் பாம்பே கண்ணனுடன் இணைந்து இந்த ஒலிப் புத்தகங்களைத் தயாரிக்க வந்ததற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .

இதன் டிரைலரைப் பாருங்கள். இல்லை கேளுங்கள்!

கடல்புறாவின் ஒலிப்  புத்தகத்தின் வெளியீட்டு விழா நல்லி குப்புஸ்வாமி, டெல்லி கணேஷ், பாத்திமா பாபு, ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ஆசிரியர் கிரிஜா ராகவன், சாண்டில்யன்  அவர்களின் மகன் சடகோபன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

2 டி வி டி கள். 3 பாகங்கள்.  42 மணி 34 நிமிடங்கள் ஆகும் இந்தப் புத்த்கத்தை முழுதும் கேட்க .  நிச்சயம் அவ்வளவு நேரம் ஒரேடியாகக்  கேட்க யாராலும் முடியாது.

மொபைலில் தினம் ஒரு அத்தியாயத்தைப் பதிவிறக்கம் செய்துகொண்டு  கேட்கலாம். அலுவலகத்துக்குக் காரிலோ இரயிலிலோ செல்லும் போது  அல்லது வீட்டில் இரவில் சாப்பிட்டுவிட்டுப் படுக்கும் போது மனைவியுடன் சேர்ந்து கேட்கலாம்.

மேடையில் டெல்லி கணேஷ் நான் கேட்க  நினைத்த கேள்வியையே கேட்டார்.  ” இந்த ஒலிவடிவத்தில்  வருணனைகள் இல்லாமல் நாடகமாகச் செய்திருக்கலாமே ? ” என்று கேட்டார். பாம்பே கண்ணன்     ” வருணனைகளுடன்  சொன்னால் தான் புத்தகத்தை முழுமையாக  உணரமுடியும்”  என்றார். எனக்கு அதில் முழு உடன்பாடு இல்லை. ஒலிச்சித்திரமாக தேவையானால் கதை புரிய சில  வருணனைகளுடன்  அமைத்தால் இன்னும் நல்ல  வீச்சும் ரீச்சும் இருக்கும் என்பது என் கணிப்பு.

ஆனால் இது பாம்பே கண்ணனின்  வடிவம் ( வசனத்தைப் படிப்பவர் அவரே) . அதைப் போற்றுவோம். மேலும் பல புதுமைகள் வரட்டும். வரவேற்போம். 

2 டிவிடிக்கள் கொண்ட ‘கடல்புறா’ ஒலிப்புத்தகத்தின் விலை ரூபாய் 700/ .

நல்ல தமிழ் கேட்க விழையும் தமிழ் ரசிகர்களும், சரித்திரத்தில் ஈடுபாடு கொண்ட மக்களும், சாண்டில்யனின் வர்ணனைகளில் மனதைப்  பறி  கொடுத்தவர்களும், கடல்புறா என்ற காவியத்தில் கலந்து அதன் ஒவ்வொரு அணுவையும் ரசிக்கும் என் போன்ற உள்ளங்களும் இதை வாங்கிப் பயன்பெறவேண்டும். 

வாங்க நினைப்பவர்கள் திரு பாம்பே கண்ணன் அவர்களை அணுகலாம் ( மொபைல்: 9841153973) . கீழே குறிப்பிட்டுள்ள  இணைய தளத்தின் மூலமாகவும் பெறலாம்.

http://nammabooks.com/Buy-Novels-Essays-Tamil-Books-Online/Buy-Tamil-Historical-Novels-Online/buy-kadal-pura-audio-book