ரோபோட் என்பதிலிருந்து வந்தது தான் போட் .  நம்முடைய செய்திகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதற்குச் சரியான பதிலை அளிக்கும் மென்பொருள்தான் போட் .  அத்துடன் நாம் தொடர்ந்து டெக்ஸ்ட் செய்து உரையாடினால்  அதற்குப் பெயர்தான் சாட்போட்   (CHATBOT) 

CHATBOT க்கு  நான் வைத்த பெயர் ” அரட்டை எந்திரா” 

உங்கள் டி‌வி சரியாக வேலை செய்யவில்லை. நீங்கள் கம்பெனி ஆட்களுடன் போனில் பேசி விஷயத்தைக் கூறலாம் . இல்லையேல் இமெயில் அனுப்பலாம். அல்லது கம்பெனி பிரதிதிகளுடன் சாட்  செய்யலாம். அதாவது டெக்ஸ்ட் அனுப்பலாம் – உரையாடலாம்.  அரட்டை அடிக்கலாம்.   அல்லது அவர்கள் அழைப்பு மையம் ( கால் சென்டர்) ஆட்களுடன் பேசலாம். 

இதெல்லாம் பழங்கதை. வந்துவிட்டது புது கலக்கல் –  CHATBOT – அரட்டை எந்திரா. செயற்கை நுண்ணறிவுடன் உங்களுடன் உரையாடும் ஒரு கருவி. கிட்டத்தட்ட ரஜினிகாந்த் எந்திரனில் பேட்டி கொடுப்பது போல  இது நீங்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லும் .  

இப்போது இந்தத் துறைதான் மிகவும் சூடான தலைப்பு.   செயற்கை நுண்ணறிவும் ( Artificial Intelligence) கருவி மொழியும் (Machine Language ) இணைந்து மிக வேகமாக முன்னேறிவருகிறது.  நாளையத் தொலைத் தொடர்பின் ஆணிவேர் இதுதான். 

 ஆப்பிள் ஐ போனில் வரும் ‘சிரி’ விண்டோஸ் சிஸ்டத்தில் வரும் ‘கோர்ட்டானா.’ கூகிளின் ‘கூகிள் நௌ’ , அமேஜானின்  அலெக்ஸ் எக்கோ போன்றவையும்  போட் வகைதான்.

இது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறதல்லவா ?

மிட்ஸுகு என்ற ஜப்பானிய எந்திரா (BOT ) உங்களுடன் உரையாடக் காத்திருக்கிறது.

செல்லுங்கள்    http://www.mitsuku.com/

நீ யார்? என்று கேட்டதற்கு மிட்ஸுகு சொன்ன பதில் : 

நான் செயற்கை நுண்ணறிவின் புதிய வரவு.  மனித மூளையின்  திறமையோடு அதி வேகமாகவும் சரியாகவும் செய்யக் கூடிய மனித எந்திரம். 

உங்களுக்குப் பொழுது போகவில்லையா ? ஒரு நல்ல எந்திராவுடன் அரட்டை அடியுங்கள்.

 கண்ணம்மாப்பேட்டைக்கு எப்படி போகணும்னு வழி தெரியலையா? (வேற உதாரணமே கிடைக்கலையா என்று எந்திரா திட்டினாலும் திட்டும்) . எந்திரா கிட்டே கேட்டால் ரோட்டை மட்டுமல்ல ரூட்டையும் காட்டும். அது இணைய தளத்தில தேடித்தான் காட்டுது. 

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கோச்சிங் சென்டரிலும் இந்த போட்டுக்கு நல்ல வரவேற்பு. மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதிலிருந்து, அவர்கள் அவற்றைச் சரிவரச் செய்து விட்டார்களா, எங்கே எல்லாம் தப்பு செய்திருக்கிறார்கள் ,எங்கு அவர்களுக்கு ஆசிரியரின் உதவி தேவைப்படுகிறது, சரியான விடை இருக்கும் இணையதளம் போன்ற பல நிகழ்வுகளை நிகழ்த்துகிறது இந்த எந்திரா. மனித குறுக்கீட்டைக் கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைக்கிறது . 

இப்போதைக்கு ஆங்கிலத்தில்தான் நீங்கள் இதனுடன் உரையாடலாம். கூடிய விரைவில் தமிழில்

” என்னம்மா கண்ணு சௌக்கியமா ? ” என்று நீங்கள் செய்தி அனுப்பினால் எந்திரா ”  ஆமாம்மா  கண்ணு சௌக்கியம்தான்” என்று பதில் எழுதும்  காலம் ரொம்ப தூரத்தில் இல்லை.