லா சா ராமாமிர்தத்தின் ” அபிதா” ஒரு மாஸ்டர் பீஸ் – காவியம் – உணர்ச்சிப் பெட்டகம் – மணிரத்னம் போன்றவர்கள் எடுக்கவேண்டிய அழகான திரைக்கதை , ஒவ்வொரு வரியிலும் கவிதை இழையோடுகிறது!
அதிலிருந்து சில பொன்வரிகள்:
ரயிலின் ஓட்டத்தின்போது தெரியும் வெளி உலகைப் பற்றி இப்படிச் சொல்கிறார்:
காட்டான் கட்டானாய் வண்டி வேகத்தில் முகம் திரும்பும் வயல்களில் பயிர்களின் பச்சை நடுவில் சிவப்பும் மஞ்சளும் வேலையும் ஊதாவுமாய் ஆண் பெண்களின் ஆடைகள், வானில் பகல் பூரா சூரியச் சக்கரம் உழுது உருண்ட பாதையில் முளைத்துப் பழுத்துப் பல ரங்குகளில் சாய்ந்த ஒளிக்கதிர்கள், புலவியில் பூமியைக் கவ்விக் கடித்து மேல்கவிந்த வான்கவானில் சிந்திய விந்துவெனக் கட்டிய நக்ஷத்திரங்கள் ……
விளக்கு ஏற்றினால் வெளிச்சம் ஆனால் விடிவு என்னவோ வேளையில்தான்
ராஜா மணந்த பிச்சைக்காரி ராணியாகிவிடலாம் ஆனால் ராணி மணந்த ஏழை ராஜா இல்லை என்றும் அவன் பிரஜை தான்
பாம்புக்குப் படம் படுத்ததால் அதன் கோபம் தணிந்ததென்று அர்த்தம் இல்லை
உங்கள் வெற்றியைவிட என் தோல்வி தானே உங்களுக்கு முக்கியம் !
மணவரை மஞ்சத்தில் புலவி வெறியில் பிய்த்தும் உருவியும் தானாவும் உதிர்ந்த மலர்கள் போல் வானில் மேகங்கள் இப்போதும் சிதறிக் கிடக்கின்றன. இவ்வளவு மகத்தான கலவிகொண்ட விராட்புருஷன், அவனுடைய ஸ்த்ரீ யார்?
இடுப்பில் குடத்துடன் அவள் முன் ஏறுகையில் வேணுமென்றே என் நடை அவளை இரண்டு படிகள் முன் விட்டது. இடுப்பில் குடத்துக்கு இடம், குடத்தின் செருக்கு. இடையில் குடம் இடுப்பின் செருக்கு இடையின் வளைவுள் குடத்தின் வளைவு புதைந்ததும் கோடுகள் பூக்கும் மர்மப் புன்னகை இதயத்தில் ஒளி தட்டுகின்றது.
நமக்குக் கவலையைக் கொடுத்த கவலையற்ற கடவுள் கொடுத்து வைத்தவர்.
சமயமே சிற்பமாகி விட்டபின் சிற்பத்தில் எது அல்பம், எது சொல்பம் ?
நாகப்பழம் போல் விழிகள் சுறுசுறுவென உள்ளத்தைத் துறுவுகின்றன.
பற்று, ஆசை, அன்பு, பாசம், பக்ஷம், காதல், காமம், வேகம், விரகம், ஏக்கம், இன்பம், வேதனை, சோகம், சுகம், சொர்க்கம், நரகம், உயிர், ஊசல், கூடல்,பிரிதல் இன்னும் எத்தனையோ எத்தனையோ அத்தனையும் ஒரே சாயம் பிடித்துக்கொண்ட கெட்டியின் ரகங்களைக் காட்டும் பெயர்கள் தானே ! பற்று ஒன்றின் மீது விழுந்துவிட்டால் , தொடல் என்பது ஏன் அவ்வளவு அவசியமாகிறது? தொடல் உரிமையின் முத்திரை உறவின் வழித் துணை
எப்பவும் பசிக்காகவா சாப்பிடுகிறோம்? சமைத்ததற்காகவா சாப்பிடுகிறோம்?
முகத்தில் ஏன் கடவுள் கண்ணை எழுதி, காக்ஷியைக் காட்டி ,கூடவே கலவரத்தையும் கொடுத்தான்?
மாந்தோப்புள் – தோப்பா? தொப்புளா?
கன்றின் தாயாகிவிட்ட தாயின் கன்று , இங்கு மந்தையில் தன் தாயை அடையாளம் கண்டு கொள்ளுமோ ? இல்லை, நானும் மாடு, நீயும் மாடு எனும் போட்டி அடையாளம் மட்டுந்தான் நிற்குமோ?
இன்னும் எத்தனையோ வரிகள் நம் மனதை அப்படியே ஆக்ரமிக்கக் கூடியவவை!
( ஒரு நாள் இந்தக் கதையின் ருசியை நன்கு உணர்ந்தவர்களுடன் கலந்து அமர்ந்து உரையாடத் திட்டம் ஒன்று இருக்கிறது)
