ஹை கோர்ட் வளாகம் . என்னுடைய சேம்பருக்கு வெளியே நண்பர் ஒருவருlawyerக்காகக் காத்துக் கொண்டிருந்தேன் .என் நண்பரின் நண்பர் ஒருவருக்கு, பாமிலிக் கோர்ட்டில் ஏதோ வேலையாம் .என்னிடம் அதைப் பற்றிக் கேட்க வருகிறார்கள். பாமிலிக் கோர்ட்டில் வக்கீலுக்கு அவசியம் இல்லை . சரி நேரில் சொல்லிக்கலாம் என்று வரச் சொல்லியிருந்தேன் .உள்ளே போய் உட்காரலாம் என்று திரும்பினப்ப தூரத்தில் ஒரு பெண் என்னைப் பார்த்து கையை ஆட்டியபடி வந்தாள்.தெரிஞ்ச முகம். டக்குன்னு நினைவுக்கு வரல. கிட்ட வந்து ,என்ன அக்கா , அடையாளம் தெரியலையா ?  என்றாள்.

அட , வைஷ்ணவி ,

கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டீங்களே .ஒரு பத்து நிமிஷம் பக்கத்துச் சேம்பர்ல  ஒருத்தரைப் பாத்துட்டு வந்துடறேன். இருப்பீங்களா ?

இன்னும் 2 மணி நேரம் இங்கதான் இருப்பேன் . வா ” என்று நான் சொன்னவுடன் சிரித்தபடி கிளம்பினாள் .

வைஷ்ணவி ..பாத்து 7 வருஷம் இருக்கும்.முன்னைவிட இப்பக் கொஞ்சம் குண்டாய் ஆனா அழகா இருக்கா.  என்ன நகை ஸ்டாண்ட் மாதிரி நகையை மாட்டிகிட்டுருந்தாள்.

நான் படிச்சு முடிச்சுட்டு ஒரு சீனியர் வக்கீலிடம் ஜூனியராக இருந்தேன் இந்த வைஷ்ணவி ஒரு நாள் அவள் அப்பாவுடன் எங்கள் ஆபீசுக்கு வந்திருந்தாள்.எந்தப் புகைப்படலமும் இல்லாமல் அன்று நடந்தது காட்சிக்குக் காட்சி நினைவில் இருந்தது .

ஒண்ணுமே பேசாமல் எங்கள் முன் உட்கார்ந்திருந்தாள் .

சொல்லுமா, என்ன வேணும் உனக்கு ” என்று கேட்டார் என் சீனியர் .

“டிவோர்ஸ் வேணும்”

தொடர்ந்து அரை மணி நேரம் போராடிய பின் அவளைக் கவுன்சிலிங் செய்யும் பொறுப்பை என்னிடம் தந்தார்.

விவரம் இதுதான்.

காலேஜ் இரண்டாம் வருஷம் படிக்கும்போதே வீட்டுக்குத் தெரியாம ஒரு பையனை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணியிருக்கா. பழையபடி இரெண்டு பேரும் அவங்க அவுங்க ஹாஸ்டலுக்குப் போய்ட்டாங்க . வேலை கிடைச்சவுடன் வீட்டில சொல்லி வாழ்க்கையைத் தொடங்கலாம்னு முடிவு பண்ணிருக்காங்க .

( அலை பாயுதே படம் வரத்துக்கு முன்னாடி நடந்தது.  மணிரத்தினம் பொறுப்பல்ல ) படிப்பு முடிஞ்சு 2 வருடம் இது வீட்ல வாயத் தொறக்கலை. அந்தப் பையனுக்கு இன்னும் வேலை கிடைக்கல . வீட்டில இப்ப அலையன்ஸ் பிக்ஸ் பண்ணற டைம்ல விஷயத்தை வெளில சொல்லிருக்காள். இதல்லாம் அவள் அப்பா என்கிட்ட சொன்னது .

சரிம்மா, லவ் பண்ணித்தானே ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கிட்டே. இப்ப எதுக்கு டிவோர்ஸ் ” என்று கேட்டேன் அவள் அப்பாவை வெளியில் அனுப்பிவிட்டு .

முகத்தை நிமித்தலை. பதிலும் சொல்லல.

அப்பா பயமுறுத்தறாரா?? அவனுக்கு வேலை இல்லைன்னு பயப்பிடுறியா?? அவனுக்கு வேலைக்கு ஏற்பாடு பண்றோம் . அவனோட சேர்ந்து வாழறியா??

அப்பாவால உங்களை ஒண்ணும் பண்ண முடியாது .”

இது எதுக்குமே அவள் பதில் சொல்லல. “எனக்கு அவன் வேண்டாம். ப்ளீஸ் டிவோர்ஸ் வாங்கிக் குடுத்துடுங்க.”

கிளிப் பிள்ளைபோல் இதையே திருப்பித் திருப்பிச் சொன்னாள்.

இங்க பாரு வைஷ்ணவி , பணம்தான் பிராப்ளம்னா , அவனுக்கு நல்ல வேலை கிடைக்கற மட்டும் நானும் என் பிரெண்ட்ஸும் மானிட்டரியா சப்போர்ட் பண்றோம் ( சமூக சேவை !!)

எதுக்கும் அவள் அசைஞ்சு கொடுக்கலை.

ரெண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பின் என் தோல்வியைச் சீனியரிடம் ஒப்புக் கொண்டேன். அவர் வைஷ்ணவிக்கு ஒரு வாரம் டைம் தந்தார்.அதற்குப் பிறகும் டிவோர்ஸ்தான் வேணும்னா கேஸ் எடுத்துக்கறேன்னு சொல்லி அவங்களை அனுப்பிட்டார்.

ஒரு மாதம் சுத்தமாய் வைஷ்ணவியை மறந்து வேறு வழக்குகளில் மூழ்கி விட்டோம் . அப்புறம்தான் தெரிந்தது .. அவள் வேறு ஒரு வக்கீலிடம் சென்று மியூச்சுவல் டிவோர்ஸ் கேட்டிருக்கான்னு.

அந்தப் பையன் அதுக்கு எப்பிடி சம்மதித்தான் ?அவனைக் கன்வின்ஸ் பண்ண யூஸ் பண்ண மெத்தெட் என்னவாயிருக்கும்? பாவம் அந்தப் பெண் . வீட்டில அவங்களைப் பயமுறுத்திருப்பாங்க, என்று நாங்கள் எங்களுக்குள் புலம்பிக்கிட்டோம் .

சேரில் சாய்ந்து கண்ணைமூடிக் கொண்டு பழைய நாட்களை அசை போட்டுக்கொண்டிருந்தேன் .

பேசலாமான்னு கேட்டுகிட்டே வைஷ்ணவி வந்தாள் .

கொஞ்ச நேரம் பேசாம என்னைப் பார்த்துகிட்டு இருந்தாள்

உங்களுக்கெல்லாம் என்மேல கோவம்தானே ” என்று கேட்டாள்.

சே சே . உன்னை உங்க வீட்ல எப்பிடிப் பயமுறுத்திப் பணியவச்சாங்கன்னு , உங்க அப்பா மேலதான் ஆத்திரம் ., என்றேன்.

ஐயோ அப்பா ரொம்ப நல்லவரு . முதல்ல கோவப்பட்டாரு . அப்பறம் எனக்குப் பொறுமையா எடுத்துச் சொன்னாரு .

“என்னத்தை எடுத்துச் சொன்னாரு ” என்றேன் கேலியாக

அவனும் நானும் கிட்டத்தட்ட ஒரே வயசுக்காரங்க . அவன் ரொம்ப ஏழைப்பட்டவன் . கல்யாணத்துக்கு ஒரு அக்கா வேற இருந்தாங்க .அவன் எப்ப செட்டில் ஆவான்?? நாங்க எப்ப எங்க வாழ்க்கையை   ஆரம்பிக்கறது ?

ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணும்போது தெரியலையான்னுக் கேக்காதீங்க . அப்ப லவ் பண்ண வேகம் .

ஒரு பக்கம் பிரெண்ட்ஸுக உசுப்பேத்திவிட்டாங்க . செய்யறது தப்பா, சரியான்னு தெரியாத வயசு. அப்பா நிறைய எடுத்துச் சொன்னாரு.

100 பவுன் நகையும் டாக்டர் மாப்பிள்ளையும் ரெடியா இருக்கறப்ப , காதலுக்காகக் கஞ்சிக் குடிச்சுட்டு , பத்துப் பாத்திரம் தேய்ச்சுக்கிட்டு , கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிலப் புள்ளைப் பெத்துக்கப் போறியான்னு.

அன்னிக்குப் பேசாததையும் சேர்த்து வச்சுப் பொரிஞ்சு தள்ளினாள் .

வாயடைச்சுப் போனேன் .

நாங்க பேசிக்கிட்டிருக்கும்போது என்னோட கிளையண்ட் உள்ள வந்து கோவில் குங்குமமும் துளசியும் கொடுத்தாள். கண்ணால அவளை உட்காரச் சொல்லிட்டு திரும்ப வைஷ்ணவியப் பார்த்தேன் .

என்னக்கா ,பணம்தான் பெருசான்னுக் கேக்கிறிங்களா ? பணமும் வசதியும் பழகாமல் இருந்திருந்தா , காதலை மட்டும் கையிலப் பிடிச்சுக்கிட்டு வாழ்ந்துருப்பேனோ என்னோமோ ?? பொறந்ததிலேருந்து பழகின விஷயம்.

காதல் பெருசுன்னு அன்னிக்கி ஓடிருந்தா , அஞ்சு ஆறு வருஷத்திலே வெறுத்துப் போய் டிவோர்ஸ் வாங்கியிருப்பேன் . அவனைச் சுத்தமா வெறுத்துருப்பேன் . அப்பிடி வெறுத்துப் போய்ப் பிரியறதுக்கு முளையிலேயே கிள்ளிப்பிட்டேன். எப்பயாவது மனசு உறுத்தும் .

உறுத்தல் இல்லாம யாரால வாழ முடியும் ?

பட பட வெனப் பொரிந்தவளை அசந்து போய்ப் பார்த்தேன்.

நான் என்னைப் பத்தியே பேசிக்கிட்டுருக்கேன் . உங்களுக்கு எத்தனை குழந்தை ?

ஒரு பொண்ணு

எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. உங்களப் பாத்ததுல ரொம்பச் சந்தோஷமக்கா . நான் கிளம்பறேன் . இந்தாங்க என் வீட்டு அட்ரஸ் . கண்டிப்பா பொண்ணையும், அண்ணனையும் கூட்டிக்கிட்டு வாங்க ” என்று விசிட்டிங் கார்டு தந்துவிட்டுப் புயலாய்ப் போனாள்.

கணவன் சிட்டியின் லீடிங் ஐ ஸ்பெஷலிஸ்ட் .

அப்படியே உட்கார்ந்து  இருந்தவளை ” மேடம் ” என்ற குரல் எழுப்பியது.

அச்சச்சோ , கிளைண்ட்டை மறந்துட்டேன் .

” என் புருஷன்கிட்டப் பேசிப் பார்த்தீங்களா ”

பேசினம்மா ..அவரு ரொம்பப் பிடிவாதமா இருக்காரு . டிவோர்ஸ்தான் வேணுமாம் ”

இல்ல மேடம் . நான் அவரை ரொம்ப லவ் பண்றேன் .. அவருக்கும் என் மேல உள்ள காதல் குறையல .. ஏதோ கெட்ட நேரம் . அவரு இப்பிடி இருக்காரு . சக்கரத்தாழ்வார் அவரு மனசைக் கண்டிப்பா மாத்துவாறு..

எப்பிடியாவது என்னை அவர்கூடச் சேத்து வச்சுடுங்க மேடம் ” என்று தலைக் கவிழ்ந்து அழ ஆரம்பித்தாள் .

வாட் அன் ஐரானி. இவள் பேரும் வைஷ்ணவிதான் .. லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டு , ஒரு குழந்தை . அவன் வேலை வெட்டிக்குப் போகாம தினம் குடி, அடி ,உதை . இப்ப ஒரு பொண்ணோட தொடர்பு வெச்சுகிட்டு இவளை விவகாரத்துப் பண்ண கேஸ் போட்டிருக்கான்.

இவளானா , தினம் சக்கரத்தாழ்வாரைச் சுத்தி வந்தால் கல்யாணம் நிலைக்கும்னு சுத்திட்டு, டிவோர்ஸ் வேணாங்கறா.

ais

இந்த ரெண்டு வைஷ்ணவி ல எந்த வைஷ்ணவி சரி ??

எந்த ஜட்ஜுகிட்ட நான் தீர்ப்புக் கேக்கறது ??