சேரன்

பொதுவாக… இந்திய சரித்திரம் எழுதுபவர்கள் சொல்வது இது தான்:
அசோகருக்குப் பிறகு – சில நூற்றாண்டுகள் ‘வட இந்தியா’ இருண்ட காலமாக இருந்தது –என்று சொல்லி பிறகு குப்த சாம்ராஜ்யம் பற்றி கதை சொல்ல ஆரம்பித்து விடுவர்.

அப்படியானால், தமிழகத்திற்குச் சரித்திரமே இல்லையா என்ன?
நந்தர்கள், மௌரியர்கள் வடக்கே கோலோச்சியபோது தமிழ் மன்னர்கள் என்ன சும்மாவா இருந்தார்கள்?

என்ன செய்வது? அசோகர்போல் தமிழக மன்னர்கள் விளம்பரம் செய்ததில்லையே!

ஆனாலும் அந்த இருண்ட கால சமயம் தமிழகத்தின் நற்காலமாகத் தான் இருந்திருக்கிறது.

எனினும் ஆதாரம் எதுவும் இல்லாமல் அந்த சரித்திரம் தட்டுத் தடுமாறுகிறது!

தமிழர் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்… மாபெரும் அசோகனையும் விரட்டி அடிக்க முடியும் என்பதைப் பார்த்தோம்.

ஔவையார் ஆத்திசூடியில் சொன்னார் : ‘ஒற்றுமை என்றும் பலமாம்’

அதை எந்த தமிழ் மன்னன் கேட்டு வாழ்ந்தான்?

அப்படி வாழ்ந்திருந்தால் அது தமிழகத்தின் பொற்காலம் ஆகியிருக்குமே!

சேரன் சோழன் பாண்டியன் மூவரும் ஒருவர்க்கு ஒருவர் சண்டையிட்டே அழிந்தனர்.

முதலில் சேர நாட்டுக் கதைகளைச் சற்றுப் பார்ப்போம்.

இவைகள் எல்லாம் கி மு 300 – கி பி 100 வாழ்ந்த சேர மன்னர்கள் பற்றி.

பொதுவாக, சேர மன்னர்கள் தங்களைவிடப் பலம் கொண்ட சோழ – பாண்டிய மன்னர்களின் தாக்கத்தில் தோல்வி கண்டு தடுமாறினரென்றாலும் மக்களைப் பேணி – கலை வளர்த்து நல்லாட்சி தந்தனர்!

sep1

முதல் கதை:

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் “இமய வரம்பன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளான்.

வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள்  கூறுகின்றன. இமயத்திற்கும்,குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்.

கிரேக்க யவனர்கள் போர் வீரர்களுடன் மலபார் கரையில் கப்பலில் வந்ததை அறிந்த நெடுஞ்சேரலாதன் தனது கடற்படையுடன்  சென்று தாக்கினான். கடலில் நடந்த இந்தத் தாக்குதலில்  யவனர்கள் முறியடிக்கப்பட்டுத் தப்பி ஓடினர்.

முதுமைப் பருவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ்வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத்தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து * இவன் மாண்டான் எனப் புறநானூறு கூறுகிறது.

(* வடக்கு நோக்கி உட்கார்ந்து சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிரை விடுவது)

இரண்டாம் கதை:

அந்த சேர மன்னன் மாவீரன்.
மக்கள் பால் அன்பும் பரிவும் கொண்டவன்.
வீரத்துடன் மானத்தை உதிரத்தில் கரைத்தவன்.
மாபெரும் கவிஞன்.
அவன் கவிதை கேட்க அவன் அரசவையில் புலவர்களே பேரார்வம் காட்டுவர்.
இதயத்தை நெகிழச் செய்யும் கவிதைகளை நொடியில் தொடுப்பதில் மன்னன்.

கதையில் ஒரு குறுங்கதை (சரித்திரத்திலிருந்து புராணம் சொல்வோம்) :

திருவானைக்காவல் என்னும் தெய்வத்தலம். அங்கு வெள்ளை நாவல் மரத்தின் தாழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. சிவபெருமானை வழிபட வந்த சிலந்திக்கும் யானைக்கும் நிகழ்ந்த பகையால் சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. சிலந்தியின் செயலால் சினங்கொண்ட யானை துதிக்கையை ஓங்கி வேகமாக நிலத்தில் அடித்தது. சிலந்தி இறந்தது. அதே சமயத்தில் யானையும் சிலந்தியின் விஷம்  தாங்காமல் நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. சிவபெருமான் அருளால் அந்த சிலந்தி சோழன் செங்கணானாகப் பிறந்தது.

உலகின் முதல்  ஸ்பைடர்மேன் (spider man)  அவன் தான் போலும்!

போர்க்களத்தில் பெரும்வீரனும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் செங்கணான்

குறுங்கதை முடிந்தது.

நமது சேர மன்னனுக்கும் சோழன் செங்கணானுக்கும் பகை வளர்ந்தது.

sep2

சேர மன்னன் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் சோழன் செங்கணானோடு போர் துவங்கினான். சேரனின் வீரம் போர்க்களத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. அவனது யானைப்படை சோழ சைனியத்தை அழிக்கத் துவங்கியது. சோழனின் குதிரைப்படையும், காலாட்படையும் திறம்படப் போரிட்டது.

வீரம் மற்றும் வெற்றியைத் தேடித் தருமா?
சோழன் செங்கணான் சேரனுடன் தனித்துப் போரிடுகையில் சேரன் பிடிபட்டான். 
சோழனால் சிறைபிடிக்கப்பட்டான் சேர மன்னன்.
சேரன்  அவமானத்தால் துடித்தான்!
என் மார்பில் இந்த சோழனின் வேலோ வாளோ பாய்ந்து என் குருதியைக் குடித்து உயிரைப் பறித்திருக்கக் கூடாதோ?
கண்கள் கட்டப்பட்டுக் குதிரையில் கட்டப்பட்டு சேர மன்னன் உறையூர்க் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்பட்டான்.

புலவர் பொய்கையார் என்ற சங்கப் புலவர்.
தமிழ்நாடெங்கிலும் அவர் புகழ் பரவிக் கிடந்தது.
அவர் சேர சோழ பாண்டிய மன்னர்களது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானவர்.
இந்தப் போரை போர்க்களத்திலேயே நேருக்கு நேர் பார்த்தார்.
எந்த மன்னன் தோற்றாலும் தமிழன்தானே தோற்கிறான்.
மன வலி கொண்டார்.
சோழன் செங்கணானைச் சந்திக்கச் சென்றார்.
சோழன் புலவரை முக மலர்ந்து வரவேற்றான்.

பொய்கையார்:

“சோழ மன்னா! உன்னைப் போன்ற சிறந்த சிவனடியார் உளரோ? போரில் நீ சிவனது ருத்ர தாண்டவம் போலப் போரிட்டுக் கண்கள் சிவந்தாய் செங்கணானே’ என்றார்.

செங்கணான்:

“பொய்கையாரே! உங்களது வருகையும் வாய் மொழியும் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் பாடலைக் கேட்க பேரார்வத்துடன் உள்ளேன்”

பொய்கையார் செங்கணானின் போரைச் சிறப்பித்து ஒரு ‘களவழி நாற்பது’ கவிதை பாடினார்.

புகழ்ச்சி எவரையும் போதையில் ஆழ்த்தத் தயங்குவதில்லை.. 

சிவ பக்தியே எப்பொழுதும் மனதில் கொண்ட செங்கணானையும் அது ஆட்கொண்டது.

“மிக்க மகிழ்ச்சி! என்ன கொடுத்தாலும் உங்கள் கவிக்கு ஈடாகுமா? தாங்களே கூறுங்கள்! பரிசு என்ன என்று. எதுவானாலும் கேளுங்கள்.. தருகிறேன்”

பொய்கையார்:

“மன்னர் மன்னா! சேர மன்னன் வீரமும் மானமும் மிகுந்த சிறந்தவன்! மாபெரும் கவிஞன்! அவன் உங்கள் பகைக்குத் தகுந்தவனல்லன். அந்த மறத் தமிழனைச் சிறையிலிட்டுத் துன்புறுத்துவது தங்களைப் போன்ற சிவநேசனுக்கு உகந்ததில்லை”

செங்கணான் நெகிழ்ந்தான்!

“புலவரே! வேலும் வில்லும் செய்யாத வித்தையை உங்கள் சந்தக் கவிதை செய்தது விந்தையிலும் விந்தை! தாங்களே என் வீரர்களுடன் சென்று சேரனை சிறை மீட்டுங்கள்”

பொய்கையார்:

“அரசே! என்னே உன் கருணை! நீ சரித்திரம் உள்ளளவும் பாடப்பெறுவாய்!”

புலவர் சிறைக்கு விரைந்தார்.

சிறையில் சேரன் கால்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டுச் சிறைக் கம்பிகளில்  கட்டப்பட்டிருந்தான்.
மாவீரனாக இருக்கலாம்!
மானத்தை உதிரத்தில் கலந்தவனாகவும் இருக்கலாம்!
ஆனால் – அரையடி வயிறு செய்யும் கொடுமையை என்னவென்று சொல்வது!
தாகம் அவன் கண்ணை அடைத்தது!

காவலாளிகள் இருவர் சிறை வாசலில் அமர்ந்திருந்தனர்.

“காவல் வீரனே! சற்று இங்கே வா” சேரனின் குரல் தாழ்ந்திருந்தது.

வீரன் சேரனைத் திரும்பிப் பார்த்தான்”

“தாகமாக உள்ளது. கொஞ்சம் தண்ணீர் தருகிறாயா”

அவன் வாழ்வில் இரந்து கேட்டததில்லை!

இரப்பதற்கு பதிலாக இறந்தே போயிருக்கலாமே!

வீரன் தன் துணை வீரனைப் பார்த்து:

“மகாராஜா ஆணையிடுகிறார் பார்த்தாயா?” மெல்லச் சிரித்தான்.

மற்றவன்:

“இவர் அட்டக்கத்தி மகாராஜாடா!”

முதல்வன்:

“ஆமாம் இவர் கவிஞர் சக்கரவர்த்தி! ஓலையில் கவிதைச் சண்டை போடுபவர்!”

“ஆமாம். அதனால் தான் போர்க்களத்துக்கு வாளுக்குப் பதிலாக ஓலையும் எழுத்தாணியும் கொண்டு சென்றார் போல”

இருவரும் பெரும் சிரிப்புச் சிரித்தனர்.

எள்ளி நகையாடிக்கொண்டே சென்றனர்.

காலம் கடந்து.. மெல்ல… இருவரும் நீர்க்குவளையுடன் வந்து சேர்ந்தனர்.

சேர மன்னன் மனது துயரத்தில் துவண்டது:

“பிறந்த குழந்தை இறந்துவிட்டாலும்,
பிறக்கும்போதே சதைப் பிண்டமாகப் பிறந்துவிட்டாலும்
அந்தக் குழந்தையைப் போரில் காயப்பட்டது போல்
வாளால் கீறிப் புதைப்பர்.

அப்படியிருக்க…
இப்போது நான் காயமில்லாமல் பிடிபட்டுக் கிடக்கிறேன்
நாயைச் சங்கிலியால் கட்டியது போல் நான் இருக்க
என் வயிற்றுத் தீயைத் தணித்துக்கொள்வதற்காகத்
தண்ணீரை இரந்து கேட்டுப் பெற்றிருக்கிறேன்
இப்படிப்பட்ட ஈனப்பிறவியை எந்த மன்னனாவது பெறுவானோ?’

நீர்க்குவளையைக் கையில் ஏந்தினான்.
நீரை உண்ணவில்லை
இந்தக் கவியை எழுதினான்:

“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் உலகத்தானே?”

கவிதை வெளி வந்ததும் உயிரும் உடலை விட்டு வெளியே வந்தது.

பொய்கையார் அவன் விடுதலைக்காக ஓடி வந்தார்.

சேரன் “கணைக்கால் இரும்பொறை”யின் பூதவுடல் கண்டார்!

கண்களில் நீர் வார்த்தார்

காலத்தால் அழியாத அந்தக் கவிதையைக் கண்டார்!

தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.

சரி நேயர்களே! பள்ளியில் சரித்திரத்தை வெறுத்த வாசகர்கள் யாரேனும் இருந்தால் இனிமேல் இந்த இதழைப் படிக்க வேண்டியதில்லை.

அடுத்த இதழில் சரித்திரம் கூறும் கதை கேட்போம்.

இனி பொதுவாக மற்ற சேர மன்னர்களைப் பற்றி ஒரிரண்டு வரிகள்.

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு. இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் ( மகாபாரதப் போர் தான் ) பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் எனக் கூறுகின்றார்.

sep3

உதியஞ்சேரலாதன்

உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். இவன் நாட்டை விரிவுபடுத்தினான். முதியோர்களைப் பேணினான். சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்டபொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர்.

பல்யானைச் செல்கெழுகுட்டுவன்

இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான்.

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறையிலிருந்து யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தன்னை விடுவித்துக்கொண்டு வலிதிற்போய் அரியணை ஏறினான்.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்

காப்பியாற்றுக் காப்பியனார் ( முதலில் காப்பி போட்டவர் இவர் தானோ ? அல்லது இவர் காப்பிக் கடை  வைத்திருந்தாரா? ) என்னும் புலவர்….சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்…. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேரன் செங்குட்டுவன்

sep4

சேரன் செங்குட்டுவன் சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன்.

இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது.

 சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.

கண்ணகிக்குச் சிலை செய்ய இமயத்தில் கல் எடு்த்துக் கங்கையில் புனித நீராட்டிக் கொண்டுவந்து வஞ்சியில் கோயில் எடுப்பதே நோக்கமானாலும், தமிழர்தம் வீரத்தைப் பழித்த கனக-விசயர் தலையிலே அக்கல்லைச் சுமந்து வரச் செய்து, கங்கை ஆற்றில் புனித நீராட்டுகிறான் சேரன்

sep5

(சேர நாட்டு நாணயங்கள்)

அந்துவஞ்சேரல் இரும்பொறை

அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.

செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை

செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான். இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன், ஆடல்கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான்.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். அரிசில்கிழார் என்னும் புலவர் இவரைப் பாடியுள்ளார்.

தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசுக் கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.

இளஞ்சேரல் இரும்பொறை

இளஞ்சேரல் இரும்பொறை மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவன்  கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான். அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.

குட்டுவன் கோதை

குட்டுவன் கோதை சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.

சேரமான் வஞ்சன்

சேரமான் வஞ்சன், என்பவன் சேரர் மரபைச் சேர்ந்தவன். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன்.

மருதம் பாடிய இளங்கடுங்கோ

சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுபவர்களும் உளர்.

சேரமான் கணைக்கால் இரும்பொறை இவன் கதை சோகக் கதை –அதை சற்று முன் பார்த்தோமே!

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.

sep6

மாக்கோதை காசுகள்

நன்றி: http://wheretheworldisgoing.blogspot.com/2010/09/blog-post_20.html

வாசகப் பெருமக்களே! தமிழர் சரித்திரம் அறிய இந்த இதழை முற்றிலும் படித்த உங்கள் ஆர்வமும் பொறுமையும்தான் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது!

இனி முற்கால சோழர் சரிதம் பற்றிப் பேசலாம்!