மகாகவி பாரதியார் தம் “விநாயகர் நான்மணி மாலை”யின் தொடக்கத்திலேயே விநாயகர் வழி பாட்டால் உண்டாகும் பயன்களைப் பட்டியல் இடுகின்றார். ‘உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்’. அது என்ன அகக்கண்? நாம் அறிந்த கண் இவ்வுலக மாந்தரை – பொருட்களை பார்க்கவல்ல புறக்கண் மட்டுமே. நம்மைப் பொறுத்தவரையில் அகம்- மனம் என்பது சிந்திக்க மட்டுமே.
அது அப்படியே இருக்கட்டும்.
இறை நம்பிக்கை உள்ள நம்மில் பலர் கோவிலுக்குச் செல்கின்றோம், பூசை அறையிலும் வழிபடுகின்றோம், தோத்திரங்கள் சொல்கின்றோம், அர்ச்சனை செய்கின்றோம், ஆசாரம் காக்கின்றோம். இவை எல்லாம் புற வழிபாடுகள்.
இதைப் பற்றி தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ன கூறுகிறார்?
இறைவன் எங்கோ ஆலயத்தில் மட்டுமே அலங்காரம் செய்துகொண்டு இருக்கின்றான் என்று கருதி அவன் மீது பக்தி உள்ளவனைப்போல் வெறும் பாவனையோடு பக்தி வேடம் அணிந்தேன். என் பொய்மையையும் போலி பக்தியையும் அவன் அறியமாட்டான் என்று நம்பினேன்.
ஒரு நாள் என் அகக்கண் திறந்தது. அதில் பார்த்தால் வீட்டில் மாட்டப்பட்டுள்ள CCTV போல, என் உள்ளத்தின் உள்ளே அவன்மிக ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றான்.
அதுமட்டுமல்ல.
அங்கேயே இருந்துகொண்டு நான் போடும் பக்தி வேஷங்களையெல்லாம் – கள்ளத்தனங்களையெல்லாம் பார்த்து சிரித்துக்கொண்டு தான் இருக்கின்றான் என்பதை உணர்ந்தேன்.
அடடா, இதை அறியாமல் இத்தனை நாள் நான் வெளிவேஷம் போட்டுக்கொண்டிருந்தேனே என்ற என் அறியாமையை எண்ணி வெட்கப்பட்டு விலா நோகச் சிரித்தேன்.
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் முழுப் பாடலைப் பார்ப்போமா?
உள்ளத்தே உறையும் மாலை
உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக்
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்
உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப்போய் என்னுள்ளே நான்
விலவு அறச் சிரித்திட்டேனே
இதையே அப்பர் என்கிற திருநாவுக்காரசாரும் சொல்கிறார். எப்படி?
கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே
நான் ஒரு பொய்யன். பொய்த் தொண்டு செய்வதாய் காலத்தை வீணே கழித்தேன். அது தீர்ந்து தெளிவுற்றவனாகி ஒரு நிலையுடன் தேடினேன்; நாடினேன்; கண்டேன். நினைப்பவர்களின் உள்ளிருந்து- உடன் இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் நீ அறிவாய் என்று வெட்கம் கொண்டேன்; வெட்கத்தோடு என் பொய் நடிப்புகளை எண்ணி விலா புடைக்கச் சிரித்தேன். ( நன்றி: சந்தானம் நாகராஜன் )
யார் முதலில் சிரித்தார் ? யார் மூலவர் ? யார் உற்சவர்? யார் முன் மொழிந்தது? யார் வழி மொழிந்தது? யாரைப் பார்த்து யார் காப்பி அடித்தார்கள்? என்று நம் மனத்தில் ஒரு நமுட்டுச் சிரிப்பு தோன்றுகிறதல்லவா?
அதையும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை உணரும் போது நம் வேஷமும் கலைந்து போய் விடுகிறது.
