பனைமர நட்பு !

“நண்பேண்டா….” “அம்மா, அப்பாவையெல்லாம் விட எனக்கு என்ஃப்ரண்ட்ஸ்தான் முக்கியம்” “உலகத்திலேயே ஃப்ரண்ட்ஷிப்தான் உயர்ந்தது” “ஃப்ரண்ஷிப்புக்காக உயிரையும் கொடுப்பேன்”
இதெல்லாம் இன்றைய இளைஞர்களிடையே சுற்றிவரும் நட்பாஞ்சலித் தொடர்கள்!
உண்மைதான்.
கிருஷ்ணன் – குசேலர் நட்பு முதல், கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார், பாரி – கபிலர், கர்ணன் – துரியோதனன், ராஜாஜி – பெரியார் எனப் பல நட்புகளின் பெருமையை நாம் அறிவோம்.
நட்புகளிலேயே பள்ளிக்கூட நட்புக்கொரு தனி இடம் உண்டு. உயர்ந்தவன் – தாழ்ந்தவன், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு ஏதுமின்றி சுற்றித் திரியும் மகிழ்ச்சியான காலம் அது. கவலைகளும், பொறுப்புகளும் இல்லாத காலமும் கூட!
நாற்பது வருடங்களுக்கு முன்னால் பள்ளிக்கூடத்தில் மலர்ந்த நட்பு, இன்றும் தொடர்கிறது நானும், என்னுடன் படித்த பதினைந்து நண்பர்களும் தொடர்பிலிருப்பது மிகவும் சுகமான ஒன்று! வீட்டில் விசேஷம், பொது விழா, திருமணம் என நண்பர்கள் குடும்பத்தாருடன் கலந்து கொள்வது, ஒரே கலாட்டாவாக இருக்கும்
அதுபோலவே, மருத்துவக் கல்லூரியில் மலர்ந்த நண்பர்கள், இன்றும் வாட்ஸ் அப்பில் அரட்டையடிப்பது, கல்லூரிநாட்களை நினைவுத் திரையில் ரீவைண்ட் செய்து பார்ப்பது போல் சுவையானது!
சிறு வயது நண்பர்களை, பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன? ஃப்ளாரிடாவில் வசிக்கும் மருத்துவர் (மகப்பேறு சிறப்புமருத்துவர்) ஃப்ராங்க் போயெம் தனது “DOCTORSCRY,TOO என்ற புத்தகத்தில் சொல்வது சுவாரஸ்யமானது.
பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் வாழ்வின் மிக முக்கியமான தருணங்களைக் கொண்டது வெற்றிகள், தோல்விகள், வருத்தங்கள், சந்தோஷங்கள், புதிய எண்ணங்கள், முயற்சிகள், புதிய நட்புகள் என பல வண்ணங்கள் அந்த நாட்களை நம்முடன் பகிர்ந்துகொண்ட நண்பர்களை மீண்டும் சந்தித்து அவர்கள் நம்முடன் இப்போது இல்லையென்றாலும் நன்றி சொல்லி, அந்தத் தருணங்களைத் திரும்ப வாழ்வது சுவாரசியமானதும், மகிழ்ச்சியானதும்தானே !
நாம் எல்லோரும் அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளை, அண்ணன், தங்கை என்று ஏதாவது ஒரு ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறோம் – நமக்கென்று ஓர் ஆசை, ஒரு சொல், ஒரு நிமிடம் – நாம் நாமாக இருக்கும் தருணம் – நம் இளவயது நட்புகளுடன் மட்டுமே சாத்தியம்!
நாம் நாமாக இருப்பதற்கு உதவும் நட்புக்கு ஈடு ஏதாவதுஇருக்கிறதா?
நாலடியாரில் ’நட்பாராய்தல்’ பாடல் ஒன்று:
கடையாயார் நட்பில் கமுகனையார் ஏனை இடையாயார் தெங்கின் அனையார் – தலையாயார் எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே தொன்மை உடையார் தொடர்பு.
சினேகப் பண்பில் கடைசிதரம் – தினமும் கூடிப் பழகி ஏதாவது உதவி செய்தால் மட்டும் நிலைக்கும் நட்பு (பாக்குமரம்போல் தினமும் நீர் பாய்ச்ச வேண்டும்).
இடைத்தரமானவர்கள் தென்னை மரத்தைப் போன்றவர்கள்– விட்டு விட்டு நீர் பாய்ச்சுவதைப் போல, அவ்வப்போது உதவி செய்தால்தான் நட்பு நிலைக்கும்!
முதல்தரமான நட்புடையவர்கள் பனை மரம் போன்றவர்கள் – விதையிட்ட நாளைத்தவிர , கவனிக்காமலே விட்டுவிட்டாலும், தானாய் வளர்ந்து பயன் தரும் – அதுபோல பழைய நினைவுகளை மறக்காதவர்களுடைய நட்பு, காலங்காலமாக நிலைத்திருக்கும்!
பனைமர நட்பு வாய்த்தவர்கள், பாக்கியசாலிகள் !
டாக்டர் ஜெ.பாஸ்கரன். .