dr1
Image result for doctors in india at service

வணக்கம் டாக்டர்ஸ்!

சமீபத்தில் வாட்ஸ் அப்பில் படித்தது – எண்பது வயது முதியவருக்கு இதயத்தின் இரத்தக்குழாயில் அடைப்பு. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு எட்டு லட்சம் ரூபாய்க்கு பில் வந்தது. பில்லைப் பார்த்த பெரியவர் கண் கலங்கினார். ‘ இல்லையென்றால் பரவாயில்லை, குறைத்துக் கொடுங்கள் ‘ என்றனர் மருத்துவர்கள். அதற்கு முதியவரின் பதில் நம்மை சிந்திக்க வைப்பது. ‘ பத்து லட்சம் கூட நான் தருகிறேன், அதற்கல்ல இந்தக் கண்ணீர். மூன்று மணி நேரம் என் இதயத்தைப் பார்த்துக் கொண்டதற்கே எட்டு லட்சம் என்றால், எண்பது வருடங்களாக எந்த வியாதியும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் – கண்ணீர் வந்தது ‘ என்றார்.

உண்மைதான். நம்மிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நமக்கு நன்மைகள் செய்து காத்திடும் நம் நல விரும்பிகளிடம் நாம் நன்றியோடிருக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கண்ணீர் சொல்லும் நீதி!

பெரிய மால் அல்லது ஷோ ரூம்களில் அவர்கள் கேட்ட விலையை, (வாங்கும் பொருளிலேயே ஒட்டியிருக்கும் விலையை) அப்படியே கொடுக்கும் நாம், பிளாட்ஃபாரத்தில் கத்தரிக்காய் விற்பவரிடம் ஐந்து ரூபாய்க்குப் பேரம் பேசுவோம்!

இந்த முரண் மருத்துவர்களிடம்  ‘இவ்வளவு பீஸா?’ என்று பேரம் பேசுபவர்களிடமும் உண்டு.

அவசரப் பிரிவில் மயங்கிய நிலையில் உள்ள நோயாளிக்கு வைத்தியம் செய்யும் டாக்டர் அப்போது ‘கடவுள்’ மாதிரித் தெரிவார்! சிறிது குணமாகி, நோயாளி கண் விழித்து இரண்டு வார்த்தை பேசினால், கடவுள், நல்ல டாக்டராகத் தெரிவார். உட்கார்ந்து, பிறகு இரண்டு அடி நடக்க ஆரம்பித்தவுடன், டாக்டர் ஒரு நல்ல மனிதனாகத் தெரிவார். பின்னர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யும்போது, பில் கொடுக்கும் அந்த நல்ல டாக்டரே ‘பிசாசு’ போலத் தோன்றுவார்!  இது மருத்துவர்களுக்கான சாபக்கேடு.

முதலிலேயே, நோயாளியின் சிகிச்சை பற்றியும், செலவு பற்றியும் பேசினால், ‘இந்த டாக்டர் பணத்திலேயே குறியாய் இருக்கிறாரே’ என்று அங்கலாய்ப்பர். வியாதி குணமான பின்னால் கேட்டால், ’இது அவசியமா, அது அவசியமா’ என ஆரம்பித்து, பேரம் பேசத் தொடங்குவார்கள். குணமாகாமல் வேறு விதமாக ஆகிவிட்டால், (நோயாளிக்கு என்ன வியாதியானாலும், என்ன வயதாக இருந்தாலும்) இப்போதெல்லாம் டாக்டருக்கு அடி உதை என்று செய்திகளிலும், ஊடகங்களிலும் பார்க்கிறோம்.

பொதுவாகவே, மருத்துவர்கள் மீதும், அவர்கள் கண்ணியம் மீதும் ஒரு அவநம்பிக்கை உருவாகியிருப்பதை உணரமுடிகிறது. மக்களின் அறியாமை, பொறுமையின்மை, அரசியல் தொடர்புகள், பெருகி வரும் அடிதடி கலாச்சாரம், ஊடகங்களில் தவறான கருத்துக்களைப் பரப்புதல், மருத்துவர்களுக்குள் கருத்து வேற்றுமைகள் எனப் பல காரணங்கள்!

எனக்குத் தோன்றும் சில யோசனைகள்.:

முதலில் முதலுதவி. பின்னர் என்ன பிரச்சனை, என்ன செய்ய வேண்டும் என்ற விளக்கம்

இங்கு வசதி இருக்கிறதா இல்லையென்றால் எங்கு செல்ல வேண்டும்?

பொதுவாக இப்படிப்பட்ட வியாதிகள், அப்போதைய நிலையில் எப்படி சிகிச்சை அளிக்கப்படும்? விளைவு எப்படியிருக்கும்?

உடனிருப்பவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

டாக்டர் நோயாளியின் கண்டிஷன் மற்றும் எதிர்பார்க்கும் காம்ப்ளிகேஷன் எல்லாவற்றையும், நெருங்கிய உறவினருக்குத் தெரிவித்தல்.

சிகிச்சையின் வரையறை – லிமிடேஷன் – உடனிருப்பவர்களுக்குத் தெளிவாக அறிவிப்பது.

டாக்டர்களும் மனிதர்களே – மந்திரவாதிகளோ, சித்தர்களோ, கடவுளோ அல்ல.

குழப்பமும், பதட்டமும், வருத்தமும், கலவரமும் கூடிய மனநிலையில் உள்ளவர்களுக்கு, ஆசுவாசமும், உண்மை நிலையும் புரிய வேண்டும் – அது டாக்டர் அல்லது சீனியர் நர்சு ஒருவரால் தெளிவாக எடுத்துரைக்கப் பட வேண்டும்.

இருந்தாலும், டாக்டர்களுக்கும், ஏனைய மருத்துவ சிப்பந்திகளுக்கும் பொதுவாகவே ஒரு பாதுகாப்பற்ற நிலையே இருப்பதாகத் தோன்றுகிறது. தகுந்த போலீஸ் பாதுகாப்பு கூட அவசியமோ என்று தோன்றுகிறது.

Image result for doctors performing open heart operation in chennai