வீட்டில் கொஞ்ச நாட்களாய் கடிகாரம் அசையாமலிருந்தது.  கடிகாரம் சுவரில் சார்த்தியிருந்ததால் அசையாமல் தான் இருக்கும்.  ஆனால் பெயருக்குத்தான் அது கடிகாரமாக இருந்தது.  அதன் முட்களும் அசையாமலிருந்தன.  மாதக்கணக்கில் இப்படி அசையாமலிருந்த கடிகாரத்தை, வீட்டிலுள்ளவர்கள் அலட்சியப் படுத்தினார்கள்.

 ஆனால் அந்த வீட்டிலுள்ள வயதான பெண்மணி மட்டும் ‘ இதை எடுத்துக்கொண்டுபோய் ரிப்பேர் செய்யக் கூடாதா? ‘ என்று அடிக்கடி முணுமுணுக்காமலிருக்க மாட்டாள்.  எல்லார் காதுகளிலும் அவள் முணுமுணுப்புகள் விழுந்தாலும், யாரும் அவள் சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அந்த வீடு இருந்த தெருவிலேயே கடிகாரம் ரிப்பேர் செய்யும் கடையும் இருந்தது.  கடிகாரத்தை எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்பதை தவிர வேறு ஒன்றுமில்லை.  யார் கடிகாரத்தை எடுத்துக்கொண்டு போய் அங்கு கொடுப்பது என்பதுதான் கேள்வி.