Image result for ashokamitran

அசோகரின் நுட்பமும் மித்திரனின் நட்பும்

இந்திய வரலாற்று வானில் சாம்ராட் அவர்
இலக்கிய வரலாற்று வானில் சாம்ராட் இவர்

அவர்,
வீரத்தால் வெற்றிகளைக் குவித்தவர்
அன்பால் அனைவரையும் அணைத்தவர்
நாடுபல சென்று நல்மதம் பரப்பினவர்
நாடும் மக்களுக்கு நல்லதை அளித்தவர்

இவர்,
எழுத்தால் வெற்றிகளைக் குவித்தவர்
எழுத்தில் அனைவரையும் இணைத்தவர்
ரத்தினச் சுருக்கமாய் முத்திரை பதித்தவர்
பத்தரை மாற்றுப் பொன்னாய் மின்னியவர்

மற்ற இலக்கியவாதிகள்,
பித்தளைப் பாத்திரங்களுக்குத் தங்கமுலாம் பூசுவர்
தத்துவக் கடலில் தத்தளித்துத் தவிப்பர்
பக்கத்துக்குப் பக்கம் மையால் நிரப்புவர்
சிக்கன எழுத்தைச் சிந்தையில் மறப்பர்

இவரோ,
பித்தளை தம்ளரில் காபி தருவார்                                                               வெயிலுக்கு இதமாய் விசிறி வீசுவார்
பக்கத்தில் வந்து தொட்டுக் காட்டுவார்
பட்டணப் பகட்டைச் சுட்டிக் காட்டுவார்

நறுக்கென்று சொல்லும் வித்தகர்
சுருக்கென்று குத்தும் வித்தையர்
குபுக்கென்று சிரிப்பைக் கிளப்புவார்
திடுக்கென்று கதையை முடிப்பார்

அடுத்த வீட்டுப் பெண் இவரது நாயகி
மாடி வீட்டு ஏழை இவரது நாயகன்
தெருவில் திரியும் மனிதரே கதைமாந்தர்
மொத்தத்தில் இவர் ஒரு சாமான்யர்
சாமான்யர்களுக்காக சாமான்யரைப் பற்றி
சாமான்யர் பார்வையில் எழுதிய சாமான்யர்!

பேசும் வார்த்தையில் அவரது அறிவு பளிச்சிடும்
எழுதும் எழுத்தில் அவரது நுட்பம் புலப்படும்
பழகும் விதத்தில் அவரது எளிமை வெளிப்படும்
வீசும் சிந்தனையில் அவரது பெருமை புரிபடும்!

எழுத்துக்கு இலக்கியமும் நட்புக்கு இலக்கணமும் படைத்தவர்
எவரையும் செல்லமாய்க் கோபிக்கும் குழந்தை மனத்தவர்
ஆகையால் இவர் எல்லோருக்கும் இனியதொரு மித்திரன்
அவர்தான் நம்எழுத்துலக சாம்ராட் அசோகமித்திரன் !!