இப்படியும் ஒரு கோணமா… !
‘மிதிலா… இந்த பிள்ளையாரப்பனை நன்றாகக் கும்பிட்டு
‘பிள்ளையாரப்பா.. நாளையிலிருந்து ஆரம்பிக்கிற
பரீட்சைகள்ளே நிறைய மார்க்குகள் கொடுத்து என்
வகுப்பிலேயே முதல் மார்க் வாங்க வைப்பா..’ என்று
வேண்டிக்கிட்டு பதினோரு முறை பிரதிக்ஷணம் செய்.
எல்லாம் பிள்ளையார் பார்த்துப்பார்..கவலையே வேண்டாம்’
என்றேன் என் ஐந்து வயது மகளிடம்.

‘சரிப்பா..’ என்று நான் சொன்னபடியே வேண்டிக்
கொண்டு பிரதிக்ஷணம் செய்யும் மகளை பெருமையோடு
பார்த்துக் கொண்டிருந்தேன்.
கோயிலிலிருந்து வீட்டிற்கு வந்தவள் டி.வி. ரிமோட்டை
எடுத்து அவளுக்குப் பிடித்த ‘போகோ’ சானலைப் போட்டு
டி.வி. பார்க்க ஆரம்பித்தாள்.
‘ஏய்.. மிதிலா.. நாளையிலிருந்து எக்ஸாம். படிக்க
வேண்டாமா.. போ.. போ..’ என்று கத்தினாள் என் மனைவி.
‘போம்மா.. டாடி சொன்னபடி பிள்ளையாரப்பனை வேண்டிக்-
கிட்டு பதினோரு முறை பிரதிக்ஷணமும் வெச்சுட்டேன். அவர்
பார்த்துப்பார். எனக்கு நிறைய மார்க் போட்டு நான்
வகுப்பிலேயே முதல் மார்க் வாங்க வைப்பார்’ என்றாள் சர்வ
சாதாரணமாக.
நான் அயர்ந்து போய் நின்றேன். இப்படியும் ஒரு
கோணமா..?
