குற்றமும் தண்டனையும்! ( நன்றி வாட்ஸ்  அப் ) 

Image result for crime and punishment

 
 
*ஃபிலிபோஸ் மார் கிரிசோஸ்டம் என்பவர் தமது சுயசரிதை நூலில் குற்றமும் தண்டனையும் எனும் பகுதியில் (மலையாளம்) மூன்றாம் வகுப்பில் நடைபெற்ற நிகழ்வு குறித்து கூறுகின்றார்:
 
*அது ஒரு தேர்வு நேரம். வகுப்பில் மாதாந்திரத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. தேர்வு எழுதிக்கொண்டிருந்த ஒரு மாணவன் காப்பி அடித்துக்கொண்டிருந்தான். வகுப்பாசிரியர் டி.பி. தோமஸ் மாஸ்டர் அதைக் கவனிக்கவில்லை.
 
*ஆயினும் திடீரென அங்கே வந்த தலைமை ஆசிரியர் அந்த மாணவனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். உடனடியாக அவனுக்குத் தண்டனையும் அறிவித்தார். தண்டனை என்ன தெரியுமா..? பள்ளிக்கூட அசெம்ப்லி ஒன்று கூட்டப்பட்டு அனைவர் முன்னிலையிலும் குச்சியால் கையில் ஆறு அடி அடிப்பதுதான் அன்றைய பெரும் தண்டனை. அசெம்ப்லி கூட்டப்பட்டது.
 
*ஆனால் இந்த முடிவை தோமஸ் மாஸ்டர் பலமாக எதிர்த்தார். “அவன் தவறு செய்தமைக்குக் காரணம் நான்தான். ஆகவே எனக்கே அந்தத் தண்டனையைத் தாருங்கள். எனது பணியையும் கற்பித்தலையும் நான் சரியாகச் செய்திருந்தால் இந்த மாணவன் காப்பி அடித்திருக்க மாட்டான். ஆகவே அவனுக்குக் கொடுக்க வேண்டிய தண்டனையை எனக்கே தாருங்கள்” என்று அனைவர் முன்னிலையிலும் ஆசிரியர் கூறவும் ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் திகைத்தது.
 
*தலைமை ஆசிரியரோ தோமஸ் மாஸ்டரை கண்ணியத்துடன் பார்த்தாலும் மாணவனுக்குத் தண்டனை கொடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. தோமஸ் மாஸ்டரும் விடவில்லை. இறுதியில் ஆசிரியரின் நிர்ப்பந்தத்திற்குத் தலைமை ஆசிரியர் அரைமனதுடன் சம்மதித்தார்.
 
*அந்த மாணவனை சுட்டிக்காட்டியவாறு தலைமை ஆசிரியர் ஏனைய மாணவர்களிடம் கூறினார்: “இவன் செய்த தவறுக்காக இப்போது இந்த ஆசிரியர் தண்டிக்கப்படுகிறார்”.
 
*உடனே தாமஸ் மாஸ்டர் கூறினார்: “இல்லை.. இல்லை.. இவன் செய்த தவறுக்காக அல்ல… நான் செய்த தவறுக்காக என்னைத் தண்டியுங்கள். எனது பணியை நான் சரியாகச் செய்திருந்தால் இவன் காப்பியடித்திருக்க மாட்டானே” என்று கூறியவாறு அனைத்து மாணவர் முன்னிலையிலும் கை நீட்டியவாறு அந்த ஆசிரியர் நின்றார்.
Image result for caning in schools in india
 
*தலைமை ஆசிரியர் அவருடைய கையில் ஓர் அடி கொடுத்தார். பள்ளிக்கூடமே திகைத்தது மாணவர்கள் நடுங்கினர். அந்த ஓர் அடியில் ஒட்டுமொத்த மாணவர்களும் அழுதனர். உடனே அந்த மாணவன் அழுதவண்ணம் தலைமை ஆசிரியர் முன்னால் முட்டுக்குத்தி நின்றவாறு, “இனியும் ஆசிரியரை அடிக்க வேண்டாம்..” என்று கெஞ்சினான்.
 
*பின்னர் தோமஸ் மாஸ்டரின் காலைக் கட்டிக்கொண்டு கதறினான்: “நான் செய்தது தவறுதான். நான் செய்த தவறுக்கு நீங்கள் தண்டனை பெறுவதைக்காண எனக்கு சக்தி இல்லை. தோற்றாலும் சரியே இனி ஒருபோதும் நான் காப்பி அடிக்க மாட்டேன் மாஸ்டர்..!”
 
*இந்தக் காட்சியைக் கண்ட ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் கண்ணீர் விட்டது. குற்றத்தைக் குறித்தும் அதற்கான தண்டனை குறித்தும் ஓர் புதிய பாடத்தை அன்றுதான் பள்ளிக்கூடமே கற்றுக்கொண்டது.
அறிவும் அனுபவமும் ஒருங்கே பெற்ற ஒரு நிகழ்வு இது.