Image may contain: 1 person

 

”என்னை ஒண்ணும் பேசச்சொல்லமாட்டாங்களே?”

சிரித்துக்கொண்டே கேட்டார்.

” நானும் லதாவும் சரியா ரெண்டரைக்கு வந்துடறோம்!”

தயாராக வாசலிலேயே காத்திருந்தார். அவர்வீட்டிலிருந்து அண்னா நூலகம் வரும் வரை சிரிக்காமல் வரவே முடியவில்லை. பட் பட்டென்று தெறித்த யதார்த்த நகைச்சுவை.

“ இந்த Gucci அப்புறம் Leno Perosஆமே, நான் என்னத்த கண்டேன்! அமெரிக்காவுல பசங்க வாங்கிக்கொடுத்தாங்க நான் வெச்சுண்டு சுத்திண்டு இருக்கேன்!”

“ அத்தன தூரம் போணுமேன்னு தயக்கமா இருந்தது. எனக்கோ 70க்கு மேல ஆயிடுத்தே. இங்க தனியா இருக்கறத விட தேவலைன்னு குரூப்போட நானும் முக்திநாத்துக்கு கிளம்பிட்டேன். ஏர் போர்ட் போனாத்தான் தெரியறதுப்பா, வந்த குரூப்புலயே நாந்தான் சின்னவ! எல்லாம் தொண்டு கெழமான்னா இருந்தது!”

சரமாரியாகப் பேசிக்கொண்டு வந்தார்.

”சுஜாதா என்னும் பன்முக ஆளுமை – ஒரு அமர்வு”

நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக மேடம் சுஜாதாவை அழைத்துக்கொண்டு போயிருந்தோம்.

நாள்  முழுவதும் நடந்த அபார நிகழ்ச்சி. அவரின் நாவல்கள். சிறுகதைகள். கவிதைகள் , நாடகங்கள், சினிமா என சுஜாதாவின் ஆளுமை பற்றிப்  பலர்  பேசிய அருமையான நிகழ்வு.

இரா முருகன் சிறுகதைகள் பற்றியும், எம் பி மூர்த்தி நாடகங்கள் பற்றியும், அடியேன் கட்டுரைகள் பற்றியும் பேசினோம்.

இன்னும் பாஸ்கர் சக்தி, சாம்ராஜ், ஹாலாஸ்யன் ஆகியோரும் பேசினார்கள்.

மேடம் சுஜாதாவை பேசச்சொன்னபோது முதலில் தயங்கிப்  பின்னர் சுருக்கமாகப்பேசினார்.

எல்லா அப்ளாஸையும் அவரே வாங்கிக்கொண்டுவிட்டது சந்தோஷமான சம்பவம்!

வெளியே வரும்போது மேடம் சுஜாதாவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளப் பெரிய க்யூ!!.

வந்திருந்த அவையோரில் Rangarathnam Gopu மற்றும் நகுபோலியன் Balasubramanian Natarajan , Vijayaraghavan Uppilly வந்திருந்தது எதிர்பாராத சந்தோஷம்.

அபாரமாக நடத்தின வாசகசாலை அமைப்புக்கும் கார்த்திகேயனுக்கும் நண்பர்களுக்கும் என் பாராட்டும் வாழ்த்துக்களும்.