அது என்ன அமேசான் கிண்டில்  ( KINDLE) தமிழ் புத்தகம்?

‘ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு, அவன் ஒரு குழந்தையாவது பெற்றிருக்கவேண்டும்; ஒரு வீடாவது கட்டி இருக்கவேண்டும்; ஒரு நுாலாவது எழுதி இருக்க வேண்டும்’ என்று சொல்லப்படுவது உண்டு.

படிக்கும் பழக்கமுள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எழுதும் ஆசை இருக்கும். அதில் ஒரு பகுதியினரே ஆர்வத்தோடு செயலாக்குகிறார்கள். அப்படி எழுதியவற்றை மற்றவரிடம் கொண்டு சேர்ப்பது வேறு வித்தை. தற்போது வலைப்பூக்களும், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களும் பலருக்கு எழுதவேண்டும் என்கிற ஆசையை (நப்பாசை!) பெரும்பாலும் தீர்த்துவிடுகின்றன.

கதைகள், கட்டுரைகள், கவிதைகள் சிலருக்கு, ஒரு புத்தகம் போடும் அளவிற்குச் சேர்ந்துவிட்டால், அதைப் புத்தகமாக வெளிக்கொணர பல இடையூறுகள் உண்டு. அதில் முக்கியமான  ஒன்று அந்தப் புத்தகத்தை வெளியிட  பதிப்பாளர் கிடைப்பது. அப்படியே கிடைத்தாலும் இது ஒரு வணிக ஒப்பந்தம் என்பதால் எல்லோராலும் அவற்றின் நன்மை தீமைகளைப் புரிந்துகொள்ள இயலாது.

பதிப்பாளர்கள் உங்கள் புத்தகத்தை அவர்கள் செலவிலேயே பதிப்பித்துவிட்டு, விற்பனையில் 10 முதல் 15 சதவிகிதம் வரை ராயல்டி என்று கொடுப்பதுதான் பாரம்பரியமான பதிப்பு முறை. இதில் ஆரம்ப மற்றும் அறியப்படாத எழுத்தாளர்களின் படைப்புகளை ஒரு பதிப்பாளர் தேர்ந்தெடுப்பது மிகவும் அரிது. தமிழ் நாவல் உலகில் ஒரு மைல்கல் என்று சொல்லப்படும். திரு. நீலபத்மநாபனின் “தலைமுறைகள்” என்னும் நாவலுக்கு, ஒரு பதிப்பாளர் கிடைக்கச் சுமார் ஏழு ஆண்டுகள் பிடித்தது என்பதும், மிகுந்த சிரமங்களுக்கு இடையே அந்த நாவல் வெளிவந்தது என்பதும் வரலாறு. நீல பத்மநாபன் தனது படைப்பான “இலையுதிர் காலம்” புதினத்திற்காகவும் அதற்கு முன்பே ஐயப்ப பணிக்கரின் கவிதைகள் மொழிபெயர்ப்புக்காகவும் இரு சாகித்ய அகாதமி விருதுகள் பெற்றுள்ளார் என்பது கூடுதல் செய்தி.

எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் இடையிலான நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்ட இம்முறை, பற்பல கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்தது. சரியான ராயல்டி கிடைப்பதில்லை என்பதே எழுத்தாளர்கள் பெரும்பாலோரின் மனக்குறை.

பின்னாட்களில் சில மாற்று முறைகளும் நடைமுறைக்கு வந்தன.

தயாரிப்புச் செலவு முழுவதும் அல்லது பெரும்பங்கினையும் எழுத்தாளரே செய்யவேண்டும். பதிப்பாளர் பிரதிகளில் ஒரு பகுதி எழுத்தாளரிடமே கொடுக்கப்படும். அவற்றை விற்றுத் தன் முதலீட்டை மீட்பது ஒரு பெரும் சவால்.

தனது செலவிலேயே, புதியதாக ஒரு பதிப்பகம் பெயரில் தாங்களே வெளியிட்டுக்கொள்வதும் சகஜம். இதிலும் மேற்குறிப்பிட்ட விற்பனை பிரச்சினைதான்.

இப்போது நடைமுறைக்கு வந்துள்ள “PRINT ON DEMAND” மிகக் குறைந்த எண்ணிக்கையில் (30 அல்லது 50)  புத்தககங்கள் பதிப்பிக்க வசதி இருப்பதால் முதலீடு குறைகிறது, தேவைப்பட்டால் மீண்டும் அச்சிட்டுக் கொள்ளவும் இயலும்.   

தற்சமயம் இதைத் தவிர மின்-புத்தக (E BOOKS) வெளியீடுகளும் பிரபலமாகி வருகின்றன. தமிழில் இவ்வகையில் புஸ்தகா, கினிகே போன்று சில இணையதளங்கள் உள்ளன.  விற்பனை நோக்கமின்றி பிறர் படிப்பது மட்டுமே நோக்கமாக இருந்தால் ‘ப்ரதிலிபி’ நல்ல தெரிவு. (OPTION என்னும் சொல்லுக்கு தெரிவு என்பது தமிழாக்கம்)

இந்தப் பீடிகையுடன் “SELF PUBLISHING WITH AMAZON” பற்றிய சில தகவல்கள்.

பதிப்புரிமை தன்னிடமே உள்ள எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்பினை ஈ-புத்தகமாக விற்பனை செய்ய அமேசான் சுயபதிப்பு முறை வசதியாக உள்ளது.

இந்தப் புத்தகங்களை கிண்டில்(KINDLE)  கருவி தவிர ஆண்ட்ராய்ட்,  செல் போன், ஐ போன்  மற்றும் கணினிகளிலும் படிக்க முடியும்.

தமிழ் புத்தகத்தை கிண்டில் ஈ-புக்கில் பதிப்பிக்கும் முறையை இப்போது பார்ப்போம்.

Ponniyin Selvan (Tamil) by [கல்கி, Kalki]

இதன் வலைத்தளம் kdp.amazon.com

  • வலைத்தளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அமேசானில் பொருள் வாங்கிவருபவர்கள் அதே பயனர்/கடவுச்சொல் பயன்படுத்திக்   கொள்ளலாம்.
  • விதிமுறைகளை  (Terms and conditions) ஒப்புக்கொள்ள வேண்டும்.
  • கணக்கு விவரங்கள் படிவம் நிரப்பவேண்டும். இதில் உங்கள் வங்கிக் கணக்கு விவரமும் அமெரிக்காவில் வருமானவரி (இருந்தால்) பதிவு செய்தல் வேண்டும்.
  • இப்போது புத்தகம் வெளியிட முக்கியத்தேவை, புத்தகத்தை தமிழ் யூனிகோட் முறையில் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு வேர்ட் கோப்பாக தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இப்போது கிண்டில் ஈ-புக் இணைப்பில் புத்தகத்தின் மொழி, தலைப்பு, வகை (கதைகள், இலக்கியம், கட்டுரைகள் போன்றவை), புத்தகத்தைப்பற்றிய குறிப்பு (வழக்கமாக பின்னட்டையில் வருவது போன்று) ஆகியன பதிவு செய்யப்பட வேண்டும்
  • இந்தப் புத்தகத்திற்குக் காப்புரிமை என்னிடம் உள்ளது என உறுதி அளிக்க வேண்டும்
  • புத்தகத்திற்கு DRM (டிஜிடல் ரைட்ஸ் மேனேஜ்மென்ட்) தேவையா எனக் குறிப்பிட வேண்டும். மிகவும் தொழில்நுட்ப/ஆராய்ச்சி மற்றும் பெரிய அளவில் விற்பனையாகக்கூடிய புத்தககங்கள் தவிர மற்றவர்களுக்கு இரண்டும் ஒன்றுதான்.
  • புத்தகத்திற்கு விலை நிர்ணயம் செய்யவேண்டும். மற்ற புத்தகங்கள் என்ன விலைக்குக் கிடைக்கின்றன என்று சற்று ஒப்புநோக்கி விலை நிர்ணயம் செய்வது நல்லது.
  • ராயல்டி 35% அல்லது 70% என்று தேர்வு செய்யவேண்டும். நூலகத்தில் (கிண்டில் அன்லிமிடெட்) படிப்பதுபோல் படிக்க அனுமதித்தால் மட்டுமே 70%. விற்பனைக்கு மட்டும் என்றால் 35% .  இதில் முக்கிய அம்சம் என்னவென்றால்  கிண்டிலில் வெளியாகிற புத்தகங்களைப்  படிக்க அங்கத்தினர்கள் சந்தா செலுத்துகிறார்கள்.  அவர்கள் படிக்கும் பக்கங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ராயல்டி கிடைக்கும். படிப்பவர்களின் நாட்டின் சந்தா மற்றும் அந்நாட்டு சந்தாதாரர்களால் படிக்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை பொறுத்து ராயல்டி மாறுபடும்.
  • அட்டைப்படம் பதிவேற்றம் செய்யவேண்டும்.
  • பதிப்பிக்க வேண்டுகோள் விடுத்தால் ஓரிரு நாட்களில் புத்தகம் வெளியாகிவிடுகிறது
  • என்று எந்தப் புத்தகம் எந்த நாட்டில் விற்பனையானது அல்லது படிக்கப்பட்டது என்று எப்போதுமே வலைத்தளத்தில் பார்த்துக் கொள்ள இயலும்.
  • ஒருமாதம் வரை சேர்கின்ற ராயல்டி, மாதம் முடிந்து அறுபது நாட்களில் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். புத்தகத்தினைத் திருப்பித்தர வாடிக்கையாளருக்கு 30 நாள் அவகாசம் இருப்பதால் இந்தத் தாமதம்.

இது ஓரளவிற்கு அறிமுகம் மட்டுமே. இன்னும் விவரமாகத் தெரிந்துகொள்ள தகவல்கள் இருக்கலாம்.

இம்முறையின் முக்கிய நலனே, புத்தகம் வாங்கப்படுகிறதா, படிக்கப்படுகிறதா என்று தெரியவருவதும், நமக்கு உரிமையான பணம் நமக்கு கட்டாயம் வந்து சேர்கிறது என்பதும்தான்.

குறைபாடுகள் உள்ளனவா, அப்படியானால் அவற்றை எப்படித் தவிர்க்கலாம் போன்றவை இதுவரை கவனத்திற்கு வரவில்லை.

இந்நிலையில் எமது பரிந்துரை “WORTH A TRY”. 

கிண்டிலில் ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் பார்க்கவேண்டுமா?

குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தகமும்,  எஸ் கே என் அவர்களின் புத்தகமுமான  ” சில படைப்பாளிகள்” என்ற புத்தகத்தைப் பாருங்கள். இந்தப்படத்தைக் க்ளிக் செய்தால் அமேசான் இணையதளத்துக்குச் செல்லலாம்.