![]()
சூரியதேவனின் விமானம் விஸ்வகர்மாவின் தலைநகரின் மேலே ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தது. உலகையே தினம் வலம் வரும் போது , இவ்வளவு அழகு மிகுந்த பிரதேசத்தை நாம் எப்படிப் பார்க்காமல் இருந்திருக்கிறோம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். சாதாரணமாக இருந்த தன் மாளிகையை விஸ்வகர்மா நொடிக்குள் இந்திரனுடைய அமராவதிப் பட்டணத்தை விட அழகாக மாற்றியிருக்கிறார் என்பது அவனுக்குப் புலனாயிற்று.
திடீரென்று சற்றுத் தூரத்தில் அவன் விமானத்தை நோக்கி நுற்றுக்கணக்கான பறவைகள் வருவதுபோல் தெரிந்தது. சற்று உற்று நோக்கினான். அவை பறவைகள் அல்ல – அனைத்தும் விமானங்கள் என்றும் புரிந்தது. ‘ எதற்காக இத்தனை விமானங்கள்? என்னைத் தாக்க வருகின்றனவா? அப்படியானால் அவற்றைச் சுட்டெரித்து விடவேண்டியதுதான்’ என்று முடிவு கட்டினான்.
விமானங்கள் அருகில் வந்ததும் சூரியதேவன் முகத்தில் இருந்த ரத்தினச்சிவப்பு மஞ்சள் நிறப் புன்சிரிப்பாக மாறியது. ஒவ்வொரு விமானத்திலும் அழகுத் தேவதைபோல பெண்கள். வண்ண வண்ண மலர்களையும் வண்ணப் பொடிகளையும் அவன் மீது தூவிக் கொண்டே இருந்தனர். வாசனைப் புகைகளையும் பன்னீரையும் அவன் மீது பரவ விட்டுக்கொண்டிருந்தனர். தங்கத் தாம்பாளத்தில் ஆரத்தி வைத்து வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
சூரியதேவனுக்குத் தான் ஒருமுறை கைலாயத்தில் பார்வதி தேவியின் நந்தவனத்திற்குச் சென்றபோது அங்கிருந்த அழகு ததும்பிய சூழல் அப்படியே மீண்டும் வருவதுபோல் இருந்தது. அந்த நந்தவனத்தையும் விஸ்வகர்மாதான் நிர்மாணித்தார் என்று அன்று பார்வதிதேவி கூறியதும் நினைவில் வந்தது.
அந்தப் பெண்கள் வந்த விமானங்கள் அவனை அரைவட்ட வடிவமாகச் சுற்றிக்கொண்டே அவனுடன் பறந்து வந்தன. அடுத்து வந்தது இன்னொரு விமான வளையம். அவற்றில் இருப்பவர்களைக் கண்டு சூரியதேவன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். ஒவ்வொரு விமானத்திலும் ஒரு தவ சிரேஷ்டர். ஒவ்வொருவரும் மந்திரங்களைச் சொல்லி அவன் மீது கமண்டலத்திலிருந்த நீரை அவன் மீது தெளித்து ஆசி வழங்கிக்கொண்டிருந்தார்கள். அந்த விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. ஒவ்வொரு முனிவரும் அவன் முன் நின்று வாழ்த்து மந்திரத்தைச் சொல்லி அவனை வலம் வந்தனர்.
முதலில் வந்தவர் அகத்திய முனிவர்.
“ ஆதித்யா ! உன்னை என் ஹிருதயத்தில் வைத்துப் போற்றுகிறேன். நானும் என் சீடர்களும் கூறும் இந்தப் புண்ணிய மந்திரங்களைச் செவிமடுப்பாயாக! உன் பெருமைகளைக் கூறும் இந்த ஆதித்ய ஹிருதய மந்திரங்கள் பிற்காலத்தில் தேவர், கந்தர்வர், மனிதர் அனைவருக்கும் வழி காட்டும் மந்திரங்களாக விளங்கும் ” என்று வாழ்த்தி அருளினார்.

நல்வினைகளையும் , வெற்றியையும் ,மங்களத்தையும், மாங்கல்யத்தையும், நீண்ட ஆயுளையும், சிறப்பினையும் தருவதுடன் பகைவர்களையும், பாவங்களையும், துன்பங்களையும்,கவலையையும் அழிக்கவல்ல ஆதித்யஹ்ருதயத்தை நாள் தோறும் துதிக்கவும்!
தேவரும் அசுரரும் வணங்கும் உலகின் நாயகனை மூவுலகத்திற்கும் ஒளிதரும் சூர்யதேவனைத் துதியுங்கள் !
அனைத்து தேவதைகளின் உருக்கொண்டவரும், பிரகாசமானவரும் ஆன சூரியபகவான் தன் ஒளித்திறத்தால் உலகைக் காக்கின்றார்.
இவர்தான் பிரம்மா, விஷ்ணு, சிவன், கந்தன், இந்திரன்,குபேரன், காலதேவன், எமன்,சந்திரன், வருணன் மற்றும் அனைத்து உயிர்களின் அதிபதியாவார்.
இவர்தான் பித்ரு தேவதை, வசுக்கள், சாத்யர்கள், அஸ்வினி தேவர்கள், மருத்துக்கள்.மனு, வாயு,அக்னி. மற்றும், உலக மக்களின் உயிர் காக்க , பருவ காலங்களைப் படைத்து ஒளியைக் கொடுப்பவர்.
இவருக்கு மற்ற பெயர்கள் ஆதித்யன், ஸவிதா, ஸூர்யன், ககன்,பூஷா, கபஸ்திமான், ஸ்வர்ண சத்ருசன், பானு, திவாகரன்.
இவருக்கென்று பச்சைக் குதிரை உண்டு. ஆயிரம் தீ நாக்குகள் உண்டு.ஏழு குதிரை உண்டு .ஏழு ஒளிக்கிரணங்கள் உண்டு. இருளைப் போக்கி மங்களம் தரும் பன்னிரு ஒளிக்கற்றைகள் உண்டு.
இவர் தங்கமயமான அண்டத்தைத் தன் கர்ப்பத்தில் தாங்கியவர்.குளிர்ச்சியைத் தருபவர். அதே சமயம் நெருப்பாய் எரிகிறவர். ஒளிமயமானவர்.அக்னியைக் கர்ப்பத்தில் கொண்டவர். பனியை விலக்கும் ஆதவன். அதிதியின் புதல்வர்.
இவரே ஆகாயத்தை ஆள்பவர். தமோ என்னும் இருளை விலக்குபவர். ருக்,யஜுர் ,சாம வேதங்களைக் கடந்தவர். மழையைப் பொழிவிக்கின்றவர்.வருணனின் தோழர். விந்திய மலை மேலே வான வீதியில் பயணம் செய்பவர்.
இவர் வெப்பமாய் கொளுத்துபவர் . வட்ட வடிவானவர். தங்க மயமானவர். விரோதிகளை அழித்து எரிக்கும் குணமுடையவர். உலகத்தின் கவியானவர். மிகுந்த ஜோதி படைத்தவர். சிவப்பு நிறத்தவர். எல்லா உயிர்களையும் தோற்றுவிப்பவர்.
இவர் நட்சத்திரங்கள், கிருகங்கள் இவற்றின் தலைவர். உலகத்தை உருவகித்தவர். தேஜஸ் நிறைந்தவர். பன்னிரு வடிவுள்ளவர்.
உங்களுக்கு எங்களது வணக்கங்கள்!
கிழக்கில் மலைகளில் உதயமாகி மேற்கில் மலைகளில் மறையும் சூர்யனே உனக்கு வணக்கம். ஒளிக்கூட்டங்களுக்குத் தலைவனே வணக்கம். பகலுக்கு அதிபதியே வணக்கம்.
வெற்றியையும் வெற்றியோடு நலனையும் தருபவருக்கு வணக்கம்.வணக்கம்.
பச்சைக்குதிரை கொண்டவருக்கு, ஆயிரம் கிரணங்கள் படைத்தவருக்கு அதிதியின் புதல்வருக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்.
உக்கிரம் வாய்ந்தவருக்கு வணக்கம். வீரம் செறிந்தவருக்கு வணக்கம். வண்ணம் நிறைந்தானுக்கு வணக்கம். மார்தண்டாயானுக்கு வணக்கம். தாமரையை மலரச் செய்தானுக்கு வணக்கம். வணக்கம்.
அனைத்து முனிவர்களும் தங்கள் விமானங்களிலிருந்து மந்திர கோஷங்கள் மூலம் அவனுக்கு முகமன் கூறியது சூரியதேவனைப் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. தன்னைப் புகழ்ந்துரைக்கும் சொற்களைக் கேட்டதும் அவன் பணிவு மேலும் அதிகமாகி இரு கைகளையும் கூப்பி அனைவரையும் வணங்கிய கோலத்தில் விஸ்வகர்மாவின் அரண்மனை முற்றத்தில் வந்து இறங்கினான்.

அங்கே அழகே உருவெடுத்து வந்தது போல, கையில் மாலையுடனும் கன்னத்தில் வெட்கப் பொலிவுடனும் சூரியதேவனை வரவேற்கக் காத்திருந்தாள் விஸ்வகர்மாவின் மகள் ஸந்த்யா .
இரண்டாம் பகுதி

ஜெயகாந்தன் பேச எழுந்தார்.
அனைவருக்கும் வணக்கம். எந்த மேடையிலும் பேசுவதற்கு நான் பயந்தவனல்ல. பேசத் தெரிந்த நாள் முதல் பேசிக் கொண்டே இருந்தேன். பின்பு எழுதத் தொடங்கினேன். என் எழுத்து மற்றவர்களுக்குப் பிடித்ததோ இல்லையோ என்று நான் கவலைப்படவில்லை. எனக்குப் பிடித்தது. எழுதிக் கொண்டே இருந்தேன். பேச்சு எழுத்து இரண்டையும் என் இரு கண்களாகப் பாவித்து என்னை நானே நடத்திக் கொண்டிருந்தேன்.
நான் வெற்றி அடைந்தேன். இறுமாப்புகொண்டேன். கோபத்தில் ஆழ்ந்தேன். வெறுப்பையும் தொட்டேன்.
எத்தனையோ பேர்களை எடுத்து எறிந்து பேசியிருக்கிறேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனக்கு பத்மபூஷன் விருது வழங்கியதற்காக நடைபெற்ற விழாவில் நான் தமிழைத் தாழ்த்தி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பேசினேன். அதுவும் எப்படி?
‘‘வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’ பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுதவேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக்கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது.’’
இப்படிப் பேசியதற்காக தமிழ் உலகம் என் மேல் அவ்வளவாகக் கோபம் கொள்ளவில்லை. சிலர் மட்டும் வாய் வலிக்க வைதார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் ‘இவன் தன் தாயின் அன்பை நன்றாக அறிந்தவன், தாயைத் திட்டினாலும் அவள் காலடியிலேயே விழுந்து கிடப்பவன்’ என்று நம்பி என்னை மன்னித்தார்கள்.
அதிலிருந்து ஒரு வைராக்கியம் கொண்டேன். பேசுவதையும் எழுதுவதையும் குறைத்துக் கொண்டேன், ஓரு பரிகாரம் போல.
அதனால்தான் என் 80 வது வயது விழாவின்போது மற்றவர்கள் நிறையப் பேசினார்கள். நான் ஒரு நிமிடம்தான் பேசினேன். அதுவும் என்னவென்று தெரியுமா?
‘’இங்கே என்னை அழைத்தபோது எல்லோரும் நன்றி வணக்கம்தான் சொல்லுவார்கள் என்று அழைத்தனர்.. ஆனால் இங்கே எல்லோரும் நிறையப் பேசினார்கள்.. அதனால் நான் நன்றி வணக்கம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. நன்றி வணக்கம்’’ என்று மட்டும் சொல்லி முடித்துக்கொண்டேன்.
பேச்சு குறைந்தது.
“எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன். எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் வளமும் எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன். எதிர்கால சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன். வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில், நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம்” என்றெல்லாம் என் எழுத்தைப்பற்றி வர்ணித்த நான் எழுதுவதையே நிறுத்திவிட்டேன்.
எழுத்தும் குறைந்தது.
என் குறை நிறை எல்லாம் எனக்குள் இருக்கும் பொக்கிஷமாக வைத்திருந்தேன். யாருக்கும் தெரியாது என்ற இறுமாப்பு வேறு.
ஆனால் என்னை அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பார்த்த நண்பர் மேடையில் அமர்ந்திருக்கிறார். அவர் என்னை அழைத்த போது எனது தீர்ப்பு நாள் வந்துவிட்டது என்று உணர்ந்தேன். அப்போது எனக்கு நான் எழுதிய அக்கினிப் பிரவேசம் கதை நினைவிற்கு வந்தது.
நானும் அக்கினிப் பிரவேசத்திற்குத் தயாராகி இங்கு வந்தேன். என்னை நானே புடம்போட இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று உணர்ந்தேன்.
அது மட்டுமல்ல , நான் எழுதிய ” சுமை தாங்கி ” என்ற கதையை உங்களுக்குச் சொல்லவேண்டும்.
![]()
ஒரு போலிஸ்காரன், பக்கத்தில் இருக்கும் காலனியிலிருந்து வந்த யாரோ ஒரு பத்து வயசுப் பையன் லாரியில் அடிபட்டு இறந்ததைப் பார்க்கிறான். குழந்தையே இல்லாத அவனுக்கு அது கூட வலியாக இல்லை. அது யாருடைய குழந்தை என்று அந்தக் காலனியில் விசாரிக்கும்போது அவனைப் பெற்ற தாய் எப்படித் துடிப்பாள் என்பதை நினைத்துக் கலங்குகிறான் போலீஸ்காரன்.
அவனைக் காலனின் தூதுவன் என்றே நான் அழைத்தேன்.
முடிவில் தன் கைக்குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருத்தியிடம் தயங்கிக்கேட்க , அவள் தன் பெரிய பையன் காசு எடுத்துக் கொண்டு ஐஸ் வாங்கச் சென்றிருப்பதாகக் கூற , அவன் தான் லாரியில்… என்று போலீஸ் சொன்னதும் ‘ அட ராசா ‘ என்று அவள் ஓடுவதைப் பார்த்து இதயம் வெடிக்க நின்றான்.
ஆனால் அப்போது அடிபட்ட இடத்திலிருந்து வேறொரு குரல், ‘என்னை விட்டுட்டுப் போயிட்டியே ‘ என்ற அலறுவதைக் கேட்டதும், கைக்குழந்தைக்காரி, ‘அது என் பிள்ளை இல்லை’ என்று சிரித்துக் கொண்டே திரும்புகிறாள்.
போலீஸ்காரன் போய்ப் பார்த்தால், அங்கே அவன் மனைவி அழுது கொண்டிருக்கிறாள். ‘எனக்குத்தான் குழந்தை இல்லை, யாரோ பெத்த பிள்ளைக்காக அழக் கூட உரிமையில்லையா என்று கேட்டுக் கொண்டே போலீஸ்காரனுடன் வீடு திரும்புகிறாள். அப்போது ‘என்னைப் பெத்த ராசா போயிட்டியே ‘ என்று முன்னே கேட்ட அதே கைக்குழந்தைக்காரியின் குரல் மீண்டும் கேட்கிறது.
இந்தக் கதையில் நான் எமனை நன்றகத் திட்டியிருப்பேன்.
” ஒருத்தி பத்து மாசம் சுமந்து பெத்த குழந்தையை, இப்படிக் கேள்வி
முறையில்லாம எடுத்துக்கக் கடவுளுக்குத்தான் என்ன
நியாயம்?..
சீசீ! கடவுள்தான் உயிருங்களை உண்டாக்கறார் – இந்த யமன்
தான்… யமனை உண்டாக்கினது யாரு? அவன் இப்படி
அக்குரும்பு பண்ண இந்தக் கடவுள் எப்படிச் சம்மதிக்கிறாரு?’
‘கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். கடை கெட்ட
அரக்கனுக்குமில்லாத, சித்திரவதையை ரசிக்கிற குரூர மனசு
படைச்சவன்னு. இல்லேன்னா, சாவுன்னு ஒண்ணு
இருக்கும்போது பாசம்னும் ஒண்ணை உண்டாக்குவானா?…’
‘வாங்கின ஐஸ்கிரீமைத் தின்னு முடிக்கறதுக்குள்ளே ஒரு
கொழந்தைக்குச் சாவு வரலாமா? அட, இரக்கமில்லாத
தெய்வமே! உன்னைத்தான் கேக்கறேன்! வரலாமா சாவு? ‘
அவள் தன் இதயத்தில் தாங்கும் உலகத்தின் சுமை –
தாய்மையின் சோகம் – அதனை அவனால் தாங்க
முடியவில்லை.
அதனால், நான் எமதர்மராஜனிடம் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். சாவுகூடாது என்று அல்ல. சாவை ஏற்றுக்கொள்ளும் தைரியத்தை மனித குலத்திற்குத் தாருங்கள் என்பதைத்தான்.
அதைப்போல, எனக்கு முன்னால் பேசிய நண்பர், நரகத்தில் வாடும் நண்பர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பவேண்டும் என்றார். அந்தக் கொள்கையை நான் ஏற்கவில்லை. அதற்குமாறாக அன்பின் பாதையை அவர்களுக்குக் காட்டவிரும்புகிறேன். வாழ்வில் மட்டுமல்லாமல் அதற்குப் பின்னும் துடிக்கும் உள்ளங்களுக்கு நம் அன்பைப் பரிசாக அளிப்போம். அந்த அன்பு அவர்களுக்குப் பிடி சோறாகமாறி, தைரியத்தைத்தந்து அவர்கள் மனதைக் குளிர்விக்கும்.
என்னை நம்புங்கள். அன்பை அனைவருக்கும் தாருங்கள்.
அல்லது
‘என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ ‘
இல்லை . நன்றி வணக்கம்.
பேசி அமர்ந்தார் ஜெயகாந்தன்.
எமன் கண்ணைக்காட்ட எமி பேசஎழுந்தாள்.
(தொடரும்)
