Related image

 

“மேடம், உங்களை ஒரு பத்து நிமிஷம் பார்க்கலாமா? கேட்டுக் கொண்டே அவினாஷின் அப்பா உள்ளே நுழைந்தார். மிகக் கண்ணியமானவர்.

உள்ளே வந்தவர் உட்காராமல், “அவினாஷ் உங்களைப் பார்க்க விரும்புகிறான். தப்பா எடுத்துக்கவேண்டாம். அவனுக்கு ஒன்றும் இல்லைன்னு எனக்குத்தெரியும். அவனாக  வந்தால், சிறுவன் என்று உங்கள் ரூல்ஸ்படி பார்க்க மாட்டீர்கள். அதனால்தான் நான் வந்தேன். அவன் க்ளியரா உங்களை, ஸைக்கியாட்ரிக் ஸோஷியல் வர்க்கரைத்தான் பார்க்கவேண்டும் என்று தெளிவாகச் சொன்னான்” என்றார்.

அன்றைக்கு ஏற்கேனவே அப்பாய்ண்ட்மென்ட் பல இருந்ததால் மறு நாளைக்கு நேரம் குறித்துக் கொடுத்தேன். மறு நாள், நான் வருவதற்கு முன்னேயே அவினாஷ் அப்பாவுடன் காத்துக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்தவுடன், அப்பாவிடம்,  “அப்பா, நீ இங்கேயே இரு, ப்ளீஸ்பா”. என்னைப் பார்த்து “மேடம், தயவுசெய்து நான் மட்டும் உள்ளே வரேன்” என்றான். இவன் ஒன்பது வயதான சிறுவன். அடர்த்தியான சுருட்டைமுடிச் சுருள்கள் நெற்றியில் திராட்சைக் கொத்து போலிருந்தது. வண்டு கண்களை விரித்து என் பதிலுக்குக் காத்திருந்தான்.

அவனின் கனிவு என்னைக் கவர்ந்தது. இப்படிச் செய்வதன் அவசியம் என்னவோ என்று  என்  ஆர்வமும் தூண்டியது.

இருவருமாக உள்ளே நுழைந்தோம்.  நான் உட்காரக் காத்திருந்து என் எதிரில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்தான். உடனே திகில் சினிமா பார்ப்பதுபோல் நாற்காலியின் விளிம்பிற்கு வந்து “மிஸ், … ஸாரி , மேடம், நான் உங்களை ஒன்று கேட்கவேண்டும் ஆனா ப்ராமிஸ், யாரிடமும் சொல்லக்கூடாது” என்று ஆரம்பித்தான். நான், இங்கு சொல்வது யாரிடமும் போகாது என்று எடுத்துச் சொன்னேன்.

அவினாஷ் சொன்னான்,  “நாங்கள் ஸ்கூலுக்கு ஒரு வேனில் போவோம் -வருவோம். எங்களோடு தீரஜ் வர ஆரம்பித்து இருக்கிறான். அவனைப் பற்றித் தான் சொல்ல வேண்டும். சொல்லலாமா? அப்பாவுக்கு அவன் அப்பா ரொம்ப தோஸ்த். அதான் அப்பாவை வெளியே உட்காரச்சொன்னேன்”. எவ்வளவு அக்கறை என்று வியந்தேன்!

விவரத்தைச் சொல்லச் சொன்னேன். சொல்ல ஆரம்பித்தான்.  “நான் அவன் பின் சீட்டில் உட்காருவேன். சில நாட்களாக அவன் விசும்பல் கேட்கிறது. இறங்கும்பொழுது ஒன்றும் பேசுவதில்லை,  ‘பை ‘ கூடச் சொல்லாமல் போய்விடுகிறான். பாவமா இருக்கு. ஏதாவது செய்ய வேண்டும். அதான் உங்களை ஐடியா கேட்கலாமென்று நினைத்தேன். உஷாவின் பயத்தை நீங்கள் ஈஸியாகச்  சரி செய்ததைப் பார்த்திருக்கிறேன்”.

வேறு யாரிடம் இதைப்பற்றிப் பகிர்ந்துகொண்டான் என்பதையும் கேட்டேன்.  சீரியஸாக “என் டைரி” என ரகசியம் சொல்லுவதுபோல் சொன்னான். “அப்பாவிடம் எல்லாம் சொல்லுவேன். அப்பாவுக்கு தீரஜ் அப்பா நல்ல தோஸ்த்..”  மேலும்  ஏதோ சொல்ல வந்து, அப்படியே விட்டு விட்டான்.

தீரஜ் விசும்பல் எப்பொழுதெல்லாம் என்று கேட்க ஆரம்பிப்பதற்குள் அவனே “எங்க வேன் முதல் வரிசையில், அஜய், ரவி, சங்கர், விஷ்வாஸ் உட்காருவார்கள். இவங்களுக்கு, வேன் அண்ணன் கூட பயப்படுவாங்க. அவர்கள் தீரஜை அதிகம் டீஸ் (tease) பண்ணுவாங்க, சீண்டிக்கொண்டே இருப்பாங்க”.

Preteen Sunday School Lesson: Peer Pressure

இதை வர்ணிக்க இவன் கண்கள் கலங்கியது,”ரொம்ப பாவமா இருக்கு. என்ன செய்யணும் சொல்லுங்க மேடம்?” என்றபடி கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

மேலும் விவரித்தான்.  நால்வரில் விஷ்வாஸ்தான் பாஸ். மற்ற மூவரும் விஷ்வாஸ் சொல்வதைச் செய்வார்கள். அவர்களில் தீரஜ் வருவதைப் பார்த்துச்  சொல்வது ரவியின் இலாகா. சங்கர், தீரஜ் உள்ளே நுழைந்ததும் “கர்ல் (girl) எப்படி இருக்கே?” குரல் எழுப்புவான். விஷ்வாஸ் தீரஜைப் பார்த்தபடி மூவரிடமும் ஏதோ பேசி, சிரிப்பார்கள். இறங்கும்போது, விஷ்வாஸ் வேன் கதவைத் தடுத்து நிற்பான்.

தீரஜ் நான்காவது படிப்பவன். படிப்பில் சுமார். அவன் அப்பாவின் லட்சியம், அவன் டென்னிஸ் வீரனாக வேண்டும். தினமும் டென்னிஸ் பயிற்சி. பல போட்டிகளில் போய் விளையாடியிருக்கிறான். எல்லாவற்றிலும் தோல்வி. அவன் அப்பாவுக்கு மிகவும் வருத்தம். இதனால் அவர் இவனை “நீ கர்ல் (girl) மாதிரி இருக்க. பாய் மாதிரி போல்டாக இரு” என்பாராம். அவினாஷின்  அப்பா  அவரிடம்,  “ஏன் எல்லோர் முன்னும் சொல்லணும்? உனக்கே உன் மகள்  எவ்வளவு துணிச்சல்காரின்னு  தெரியும். அப்போ, இவனை ஏன் கர்ல்னு சொல்ற?” என்று கேட்பதும் உண்டு.

அவினாஷ் என்னை என்ன செய்ய வேண்டும் என்று மறுபடியும் கேட்டான். தீரஜ் திறமைகளைபபற்றிக் கேட்டேன்.  நன்றாக வரைவான், நிறைய ஜோக் சொல்வான், உதவி செய்வான், பாடம் சொல்லித் தருவான், நன்றாக டான்ஸ் ஆடுவான் என வரிசைப் படுத்தினான். வேன் உள்ளே மாறி விடுகிறான். இப்படி டீஸ் பண்ணித்  துன்புறுத்துவதை என்னவென்று புரிந்து கொள்வது என்றும் கேட்டான்.

அவினாஷுக்கு விளக்கிச்சொன்னேன், டீஸ், கேலி செய்வது  எல்லாம் ஓரிரு  நிமிடம் இருக்கும் அதற்குப் பிறகு அதை விட்டு விடுவார்கள். எந்த கசப்பும் இருக்காது. விளையாட்டுக்குச் செய்வார்கள். இதில் வஞ்சகம்  இருக்காது.கொட்டிக் கொண்டே இருக்கமாட்டார்கள்.

தீரஜுக்கு விஷ்வாஸ், அவன் கூட்டாளிகள் செய்வதை ஆங்கிலத்தில் “புல்லீயிங்” (Bullying) என்றும்  கேலி செய்வோரை “புல்லீ” (Bully) என்றும் சொல்வார்கள்.  புல்லீயிங்கில் கேலி, கிண்டலாகவே இருக்கும். இந்த புல்லியிங் செய்வதினால் , பாதிக்கப்பட்டவர் கூனிக்  குறுகுவதைப்பார்த்து மேலும் புல்லியிங்  செய்வார்கள்.  பெரும்பாலும் இப்படி புல்லீ செய்வோர் வயதிலோ, தோற்றத்திலோ, வசதிகளிலோ, வித்தியாசம் இருக்கக்கூடும். வேறுபாடினாலேயே துன்புறுத்துவோரை அடிமைபோலவே கையாளுவது இவர்களின் குறிக்கோளாகும்.

அதேபோல் யாரை “புல்லீயிங்” செய்கிறார்களோ அவர்கள் பயத்தினால் வெட்கப்பட்டுக்கொண்டே   இருப்பார்கள். இதனாலையே புல்லீகள் சொல்வதைச் செய்வார்கள்.    புல்லீகள், தன் பயந்த சுபாவத்தை மறைக்க  “என்னை புல்லீ செய்ய முடியாது” என்று    அடாவடி  செய்வதும் உண்டு. மேலும் புல்லியிங் செய்பவர்கள்  யாரும் தங்களைத் தடுக்காததால் செய்து கொண்டே இருப்பார்கள்.

மேலும் விவரித்தேன், “தீரஜை இதிலிருந்து விடுவிக்கவேண்டும் என்றால் அவன் தன்னம்பிக்கையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். விஷ்வாசை  மட்டும் அல்ல,  இதைப்போன்ற மற்ற சூழ்நிலைகளையும் சமாளிக்கத் தெரியவேண்டும்”. இன்னும் ஒன்று எடுத்துக் சொன்னேன் “தீரஜ் இங்கு வரலாம், அவனிடம் கலந்து பேசிப் பல  யோசனைகள் செய்யலாம். இதே போல், நீயும், உன் நண்பர்களும் தீரஜுக்கு நிறையச் செய்யலாம்” என்று சொன்னேன்.

“அப்ப நான்   அவனுக்குப் பரிஞ்சு பேசலாமா?” என்று அவினாஷ் கேட்டான்.

நான், “கண்டிப்பாகப் பேசலாம். இதை “Bystander Support” என்போம். அதாவது வேடிக்கை பார்ப்பவர்கள் கேள்வி எழுப்பினால் கூடக் கேலி  செய்பவர்கள் உணர ஆரம்பிப்பார்கள்.  தங்களால் மற்றவர்கள்  காயப்படுவதை அவர்கள் கவனத்திற்கே திசை திருப்புகிறோம்.  இதை விளையாடும்பொழுது நாமே செய்திருப்போம். யாரோ வேண்டும் என்றே மற்றவரைச்   சீண்டினால் , எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து அதை நிறுத்திவிடுவோம். அதேபோல்தான் இதுவும் . இதை நண்பர்கள் செய்யும்பொழுது “பியர் ஸப்போர்ட்” (Peer Support) என்போம். ஆனால் தீரஜ், எனக்கு பியர் ஸப்போர்ட், பைஸ்டான்டர் ஸப்போர்ட் இருக்கு என்று விட்டுவிடக்கூடாது. அவனும் தன்  பங்கிற்கு முயலவேண்டும்.” என்றேன்.

இரண்டே நாளில் தீரஜ் அவன் அப்பாவுடன் வந்தான். தீரஜ் தோற்றத்தில் தன் வயதினருடன் ஒப்பிட்டால் மிக மெலிந்து, குட்டையாக இருந்தான். கண்கள் பயத்தில் விரிந்து, தயக்கத்துடன் வந்தான். அவன் பெயருக்கும் தோற்றத்துக்கும் பொருந்தவே இல்லை.

அவினாஷ் அவன் பின் நின்றிருந்ததைக் கவனித்தேன். தீரஜ், “மிஸ்” என்று சொல்லி நிறுத்தினான். உடனே அவினாஷ் அவன் கையைப் பற்றி,  “நீ பேசுடா! மேடம் ரொம்ப கூல்” என்று ஊக்கப்படுத்தினான். தீரஜ் அப்பா அவனை முறைத்தபடி,  “தீரஜ்! என்ன இது? பேசப்  போறயா, இல்ல…” என்றார்.  நான் உடனே, “இதோ, கொஞ்ச நேரத்தில் சொல்ல ஆரம்பிப்பான்”  என்று சொல்லி, அவரைச் சற்று வெளியே செல்லும்படிக் கேட்டுக்கொண்டேன்.  அவினாஷ் அவர் கையைப்  பிடித்து “வாங்க அங்கிள், அவனே  சொல்வான்” என்று,  தன்னுடன் அழைத்துச்சென்று, கதவையும் மூடிக் கொண்டு போனான்.

Image result for chennai father coaching his 10 year old son in tennis

தீரஜ், அவன் அப்பாவின் டென்னிஸ் ஆசை பற்றி ஆரம்பித்தான். அவரின் கனவு இவனுக்கு ஒத்து வரவில்லை என்று விவரித்தான். அப்பா இவனை வீட்டிலும், வெளியிலும் “கர்ல்” என்று கூறுவதையும்,  வேனிலும், விஷ்வாஸும்  அவன் தோஸ்தும் அதே மாதிரி “கர்ல்” என்றே அழைப்பதையும் விவரித்தான்.

தீரஜுக்குப்  மிகவும் பிடித்தது,   படம்  வரைவது, கதை கற்பனை பண்ணிச் சொல்வது,  மற்றவர்களைச்  சிரி்க்க    வைப்பது.  டென்னிஸ் விளையாடும்போது ,  கதைகளைப்பற்றியும் , படம் வரைவதைப்பற்றியுமே  யோசிப்பான்.  அதனாலேயே டென்னிஸ் விளையாட்டில் மனம் செலுத்த முடியாமல் தோற்றுப் போவான். டென்னிஸ் பிடிக்காததால்  அதில் தோல்வி அடைவது பற்றி அவனுக்கு  அவ்வளவாகக் கவலை இல்லை.   ஆனால்  அவனுடைய அப்பா  ரொம்ப ஃபீல் பண்ணுவார். அவன்  தோற்ற நாள் முழுவதும், அவனை “கர்ல்” என்றே அழைப்பார். மேலும், பெண்கள்தான்  வரைவார்கள், பாட்டிதான் கதை சொல்வாள் என்று  அவர்  சொல்வதால் , இவற்றையெல்லாம் யாருக்கும் தெரியாமல் மூடி மறைத்தே செய்வான்.  இப்படிச் செய்வதை பெரிய குற்றம் என்றும்  நினைத்தான்.

விஷ்வாஸின்  ‘புல்லீ”யினால், தீரஜ்  அடிக்கடிக் கண் கலங்கிவிடுவான். இதனாலேயே, அவர்கள் கர்ல் எனச் சொல்கிறார்களோ  என்று நினைத்தான். அதே சமயம், தன் தங்கை மிகத் தைரியசாலி, அப்படியிருக்க  அப்பா ஏன் இப்படிச் சொல்கிறார் என்ற குழப்பத்தையும், தர்ம சங்கடத்தையும் அடைந்தான்.

வீட்டில் வரைவதையும், வர்ணம் தீட்டுவதையும் அப்பா “வெட்டி செயல்” என்பதால் மறைத்தே செய்வான். இதற்கு நேர் எதிராக, ஸ்கூல் நோட்டீஸ் போர்டில், கிளாஸில் இவன் ஓவியங்களே நிறைந்திருக்கும். இவன் வகுப்புத்  தோழர்களும், டீச்சர்களும் ஊக்கப் படுத்துவார்கள்.

அப்பாவைப் பொறுத்தவரை ஆண் பிள்ளை என்றால் விளையாட வேண்டும்.  தன்னால் வெல்ல முடியாத டென்னிஸ் பரிசை வென்றாக வேண்டும்.  இதற்காகவே அவர், இவனுடைய டென்னிஸ் கோச்சிங் நேரத்திற்கு ஏற்றாற்போல் தன் வேலையை அமைத்துக் கொண்டார்.

டென்னிஸ் கோர்ட்டில் இவனுடன் 4 பேர் உண்டு. நன்றாக விளையாடுவார்கள். தீரஜின் கோச் இவனை நிறையத் திட்டுவார், “நீ டென்னிஸ் விளையாட லாயக்கேயில்லை” என்று சொல்வார்.

அவன் விளையாடுவதை அவன் அப்பா கூர்ந்து கவனிப்பது,  அவனைக் கண்காணிப்பதுபோல் தோன்றியது. இது வெட்கத்தை அதிகரித்து அவன் கண்களைத்  தளும்பும்படி  செய்யும். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான்.

இங்கு ஷேர் செய்வதுபோல், அப்பாவிடம் இந்த டென்னிஸ் வேண்டாம் என்று எப்படிச் சொல்வது என்று தடுமாறினான்.

தீரஜின் அப்பா என்னிடம் வந்ததே அவமானம் என்று  நினைத்தார். அவர், அன்று இரண்டு மணி நேரம் மட்டும்தான் இருக்க  முடியும் என உறுதியாக இருந்தார். இங்கு வந்தால் டென்னிஸ் நேரம் பாதிக்கும் என்றார்.

சரி  என்று  அவசர சிகிச்சைபோல் பாவித்து, விஷயத்தை ஆரம்பித்தேன். அவினாஷ் கூடவே இருந்ததை “Peer Support” பியர் ஸப்போர்ட்டாக  எடுத்துக் கொண்டேன்.

நான், இதை, Role play “பங்கேற்பு நாடகம்” வடிவம் கொடுத்து அணுகலாம் என்று  முடிவெடுத்தேன். மூவரும் (தீரஜ், அவினாஷ், நான்) ஒவ்வொரு பாத்திரமாக  மாறிச் செய்தோம்.  தீரஜ், விஷ்வாஸாகவும் , நான் அவினாஷாகவும், அவினாஷ் தீரஜாகவும் நடித்தோம்.

புல்லீயுங் (Bullying) செய்யும் நேரம் தீரஜை எப்படியெல்லாம் அணுகலாம் என்று ஆரம்பித்தேன். இதற்கு, முதலில் மற்றவர்களைப் பார்ப்பதுபோலவே, புல்லீயையும் பார்க்க வேண்டும். அவர்களுக்கும், மற்றவருக்குச் சொல்லும் அதே, “ஹலோ”, “குட் மார்னிங்”, “பை “. இதை நடைமுறையில் எப்படிச் செய்வதென்று Role play “பங்கேற்பு நாடகம்” மூலம் செய்துபார்த்தோம்.

விஷ்வாஸ் புல்லீ செய்ய, அவனைப் பார்த்து, “ஆம், நீ சொல்லுவது உனக்குச் சரி எனத் தோன்றினாலும் அது என் மனசைப் புண்படுத்துகிறது” எனலாம். இதை வெவ்வேறு மாற்றம் செய்து, ஒரு 10 நிமிடம் செய்தோம். தீரஜ் முகத்தில் செய்யமுடியும் என்ற ஒரு மிகச் சின்ன ஓளி பிரகாசித்தது.

அடுத்ததாக,  வேனிலிருந்து இறங்கும்பொழுது தடுத்தால், “மன்னிக்கவும், கொஞ்சம் இடம் கொடுக்க முடியுமா?” எனக் கண்ணைப் பார்த்துச் சொல்லவேண்டும். இந்த முறை , நான் விஷ்வாஸ் பாத்திரமானேன். பல முறை தீரஜ் கண்கள் தளும்பின. செய்யச்செய்ய அவனுக்குப் புரிந்தது, மனதின் பயம், உடலில் தெரியும். அதனாலேயே, நாம் சொல்வதில், நமக்கு நம்பிக்கை இருப்பது முக்கியம்.  இது புரிந்தவுடன் தீரஜ், தீரஜாகச்  (அதாவது தைரியமாக) செய்தான்.

அப்பாவும், வேனில் மற்றவர்களும்  சொல்வதால் தான்  அப்படியே கர்ல் ஆகி விடுவோமோ என்ற தீரஜின் பயத்தை எடுத்துக்கொண்டோம். “நீ கர்ல்”, “நீ கோழை”, என்றால் என்ன செய்ய வேண்டும்? இதிலும், தீரஜை, தீரஜாகவே இருக்கச் சொன்னேன். கேள்விமேல் கேள்வி கேட்டு, யோசிக்க வைத்தேன். இது சம்பந்தப்பட்ட பல கேள்விகள், அவினாஷையும் கேட்டேன். 20 நிமிடங்களில் பல வழிமுறைகள் தோன்ற ஆரம்பித்தன.

மற்றவர் சொல்வது, செய்வது பிடிக்கவில்லை என்றால் “நீ சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை” அதாவது அந்தச் சொல்/செயல் குறிப்பாகப்  பிடிக்கவில்லை என்று தெரிவிக்கும்படி தீரஜிடம் கூறினேன்.

ஏதோ காரணத்தினால்  பேசத் தைரியம் வரவில்லை என்றால், தைரியமான தோற்றத்துடன் (நடுங்காமல், தலை குனியாமல்) அங்கிருந்து நகர்ந்து விடவேண்டும். புல்லீ சொல்வதைச் சட்டை செய்யவோ, அவர்களின் வார்த்தைகளை மனதில் ஏற்றுக்கொள்ளவோ  கூடாது. இப்படிச் செய்தபின் நமக்கு நாமே ஒரு சபாஷும் கொடுத்துக் கொள்ளவேண்டும் (இப்படிச் செய்வதில் நம் தைரியம் இன்னும் அதிகரிக்கும்).

புல்லீகள் வன்முறை உபயோகிப்பதில் சில விதங்களைச் சொன்னேன். வேண்டும் என்றே இடிப்பது, புண்படுத்தும் சொற்களைச்  சொல்லுவது , பொருட்களை எங்கேயாவது  ஒளிப்பது, உதாசீனப்படுத்தும் பெயர் சூட்டுவது, நக்கலாகச் சிரிப்பது போன்றவற்றை அவர்கள் செய்யக்கூடும்.

இப்படிச்  செய்யும்போது  கோபம் வரத்தான்  செய்யும்.  அது நியாயம் தான். அந்தக் கோபத்தைத்தான்  புல்லீயும் விரும்புவார்கள். அதற்காகவே சீண்டுவார்கள். மாறாக, நாம் கோபத்தை அடக்கி நகர்ந்து விட்டால், புல்லீ, புல்லீ செய்யமுடியாது.

புல்லீகள் ஊக்கப்படுவதே மற்றவரின் பலவீனத்தில்தான். எந்த மாற்றமும்  காட்டாமல் இருந்தால், புல்லீயிங் தானாகவே நின்றுவிடும். இப்படிச் செய்யத்  தைரியமும், தன்னம்பிக்கையும் முக்கியம்.

மேலும்,  நம் எல்லோருக்கும் தனித்துவம் உண்டு.  உதாரணத்துக்கு, நம் பெயர் தீரஜ் என்றால்  ‘தைரியம்’. எதற்கு, எங்கு, எப்பொழுது தைரியம் என்பதை தீரஜ்தான் முடிவு செய்யவேண்டும். அவினாஷ் என்றால்,  ‘என்றும் அழியாது’. எது ‘என்றும் அழியாது’ என்று அவினாஷ் முடிவு செய்யவேண்டும். இவற்றையெல்லாம் தீரஜுக்கு விளக்கினேன்.

அதற்குள் சிகிச்சை நேரம் முடிவடைந்தது.   தீரஜ் -அவினாஷ் இருவரும்  ஜோடிப் புறாக்கள்போல் ஒன்றாகக் கைகோர்த்துச்  சென்றார்கள்.  தீரஜ் -அவினாஷ் இருவருக்கும் பலம் கூடியது! தீரஜ் தோள் தூக்கி நடப்பதைப் பார்த்து, பங்கேற்பு நாடகம் நிஜ வாழ்விலும்  வெல்லும், என்று முழுக்க நம்பினேன்.

சில மாதங்களுக்குப் பிறகு தீரஜின் தைரியம் கூடிக் கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மகிழ்ச்சியாக  இருந்தது.