Image result for chandragupta vikramaditya

ராமகுப்தர்  (மறைவு)

முன் கதை:
சமுத்திரகுப்தனின் மூத்த மகன் ராமகுப்தன்.
இளைய மகன் சந்திரகுப்தன்.
மாவீரன் சந்திரகுப்தனுக்கும் பேரழகி துருவாதேவிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது.
சமுத்திரகுப்தன் இறந்தவுடன் ராமகுப்தன் மந்திரியின் உதவியால் முடிசூடத் திட்டமிட்டான்.
அத்துடன் அழகி துருவாதேவியையும் சூழ்ச்சியால் மனவியாக்கத் துணிந்தான்.
ராமகுப்தன்- துருவாதேவி திருமணம் முடிந்தது..
ராமகுப்தன் குப்தச் சக்ரவர்த்தியானான்..
காதலர்கள் உள்ளம் துவண்டது..

இனி கதை தொடர்கிறது:

காலம் மெல்ல உருண்டது..

 

 

 

 

 

 

 

 

 

சமுத்திரகுப்தன் காலமானதும் அவனுக்கு அடங்கியிருந்த சில மன்னர்களுக்குக் குளிர்விட்டுப்போனது.
அந்த மன்னர்களில் சிலர் சக்தி பொருந்திய மன்னர்கள்.
சக வம்சத்தின் ருத்ரசிம்மா-II.

சமுத்திரகுப்தனின் மோதிரக்கையால் குட்டுப்பட்டவன்.
அவன் மகன் … அவன் பெயரும் ருத்ரசிம்மா-III.
பெயரைக்கேட்டாலே சும்மா அதிரும்.
வீரனாக வளர்க்கப்பட்டான்.
முரடன்.
பலத்தில் யானை போன்றவன்.

அவன்  தந்தை சாகும் முன் மகனை அழைத்து…
“மகனே! குப்தர்கள் நம்மைக் குனிய வைத்துவிட்டனர்.
நான் சாகப்போகும் தருணம் நெருங்கி விட்டது.
இதே நேரம் சமுத்திரகுப்தனும் சாகக்கிடக்கிறான்.
அவனுக்குப் பின்
அந்த ஆட்சியைக் குலைத்து…
அவனது ஆதிக்கத்தை அழித்து…”

சற்றே மூச்சு வாங்கி… நிறுத்தினான்.

“……..” – மகன் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
தந்தை தொடர்ந்தான்:
“அவர்களது பெருமையை அழிக்கவேண்டும்.
அவமானத்தில் அந்தப் பரம்பரை துடிக்கவேண்டும்”

மேலும் தொடர்ந்தான்:

“மகனே!
குப்தரின் மாபெரும் செல்வம் ..
அவர்கள் படையெடுத்துச் சேர்த்த செல்வம்..
அவரது கடலார்ந்த சேனா பலம் ..
உலகப் பிரசித்தி பெற்ற அந்த மன்னர்களின் ராணியர்களின் அழகும் செல்வாக்கும்… முதலாம் சந்திரகுப்தனின் ராணி குமாரதேவி முதல்  ‘துருவாதேவி’ வரை அனைவரும் பொக்கிஷங்கள்…
துருவாதேவியின் அழகுபற்றிதான் உலகே அறிந்ததே!
அவர்களது இந்த அனைத்துச் செல்வங்களையும் நீ பறித்து அவர்களை அவமானத்தில் குறுக வைக்கவேண்டும்”

சக மன்னன் ருத்ரசிம்மாவும் சமுத்திரகுப்தனும் ஒரே நாளில் இறந்தனர்.

ராமகுப்தன் குப்த மன்னனான அதே நாள் ‘இளவரசன் ருத்ரசிம்மா’வும் சக நாட்டு மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.
குப்தர்களை வெல்வதற்கு சமயம் பார்த்துக்காத்திருந்தான்…

ராமகுப்தன் பட்டாபிஷேகக் கொண்டாட்டங்களில் மகிழ்ந்திருந்தான்!
நான்கு வருடங்கள் மெல்லச் சென்றது..

பல இதயங்கள் சோகத்தை மனதில் புதைத்து அந்த வடுவுடன் வாழ்வை நடத்தின.

ஒரு நாள் ராமகுப்தன் தன் மனைவியுடன் ஒரு சிறிய படைகொண்டு ஒரு இன்பச்செலவுக்காகப் புறப்பட்டான். அங்கும் இங்கும் திரிந்து சக ராஜ்யத்தின் எல்லை அருகே வந்தனர்.

அங்கு சக மன்னன் ருத்ரசிம்மாவின் பெரும் சேனை வந்து கொண்டிருந்தது.

ராமகுப்தனின் சிறு படை தாக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது.
ராமகுப்தன், துருவாதேவி இருவரும் சிறைபிடிக்கப்பட்டனர்.

ருத்ரசிம்மா ராமகுப்தனுக்குக் கடிதம் அனுப்பினான்.

‘ராமகுப்தா!
என்னிடம் சிக்கிக் கொண்டாய்!
உன்னுயிர் என் கையில் உள்ளது!
அதை உன்னிடமிருந்து பறிப்பது உன் பதிலில் இருக்கிறது.
உன் மனைவி துருவாதேவி முன்பு சந்திரகுப்தனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தாள்.

 ஆனால் அதற்கு முன்பு அவள் தந்தை அவளை எனக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்திருந்தார்.
ஆக அவள் எனக்கே சொந்தமானவள்.
அவளை எனக்கு மணமுடிக்க ஒப்பி என்னுடன் அனுப்பிவைத்தால்..
உன்னை உன் நாட்டுக்கு அனுப்பி வைப்பேன்.
இல்லாவிடில்…
உன்னுயிர் உன் உடலில் தங்க வாய்ப்பொன்றும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
அடைந்தால் ‘மகாதேவி… இல்லாவிடில் உனக்கு ‘மரண தேவி’ “

கடிதம் ராமகுப்தனைச் சுட்டெரித்தது.
ராமகுப்தன் மௌனமாகத் துருவாதேவியிடம் கடிதத்தை நீட்டினான்.
துருவாதேவி கடிதத்தைப் படித்தாள்.

அவளது பொன் போன்ற முகம் யானைத் தந்தம்போல் வெளுத்தது.
கோபம், துக்கம் பீறிட்டது.
வீரம் துணிச்சல் கொண்டவளாயினும் அவள் நிலைகுலைந்து கீழே விழுந்தாள்.

ராமகுப்தன் கேட்டான்:
“துருவாதேவி… அது உண்மையா?”

துருவாதேவி:
“ஆமாம். என் தந்தை என்னை சக மன்னன் ருத்திரசிம்மனுக்கு மணமுடிக்க முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சக மன்னனின் தீய குணங்களை அறிந்து திருமணத்தை நிறுத்தி விட்டார்.”

ராமகுப்தன்:
“தேவி! பேரழகியே! உன்னை என்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது. ருத்திரசிம்மனுடன் போர் புரிவேன்”

துருவாதேவி ஆனந்தப் பெருமூச்சு விட்டாள்.
‘ராமகுப்தன் வீரம் குறைந்தாலும் கொள்கை கொண்டிருக்கிறானே.” – என்று நிம்மதியடைந்தாள்.

“நீங்கள் ருத்திரசிம்மனுடன் போர் புரிந்து அவனைக் கொல்லுங்கள்… ஒரு வேளை ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என் உயிரை நான் போக்கிக் கொள்வேன்.. ஒரு நாளும் ருத்திரசிம்மனுக்கு உடையவளாக மாட்டேன்”

இந்த செய்தி கேட்டு ருத்திரசிம்மன் இடிஇடியென சிரித்தான்.
ராமகுப்தனை அழைத்து வரச்சொன்னான்.

ராமகுப்தன் கால்கள் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு, கைகள் பின்னால் வைத்துக் கட்டப்பட்டு ருத்திரசிம்மன் முன் இழுத்து வரப்பட்டான்.

ருத்திரசிம்மனின் சிரிப்பு அடங்கியபாடில்லை.
“ராமகுப்தா! நீ ஏற்கனவே தோற்றுவிட்டாய்!
என்னிடம் போர் புரிவாயா?
உன் நிலைமையைப் பார்.
ஏற்கனவே உன் பாதி உயிர் போய் விட்டது.
என்னைப் பார்.”

ருத்திரசிம்மனின் பருத்த முகத்தை அவனது பெரும் மீசை மேலும் பயங்கரமாக்கியது.
உருண்டு திரண்ட தோள்களுடன், பெருத்த இடையுடன் அவன் ஒரு ராக்ஷசன்போல் கர்ஜித்தான்.:

“உன் மனைவியைக் கடைசிமுறை பார்த்துக் கொள்.
அவளை பலவந்தமாக தூக்கிச்சென்று மணமுடித்துக்கொள்ள எனக்குத் தெரியும்.
ஆனால்..ஒரு சில நாட்கள் உங்களை இங்கு தங்கவிட்டு உனக்கு நடக்கும் சித்திரவதைகளைக் கண்டு களிக்கப்போகிறேன்.
பிறகு உன் உயிர் என் கையால் போகும்” என்று நிறுத்தினான்..

அவனது கரங்கள் கொலை வெறியைக் காட்டியது.

“ஒரு வேளை மனம் மாறி துருவாதேவியை நீயே என்னிடம் அனுப்பி வைத்தால், உன்னை உயிருடன் விட்டு விடுவேன்…
அது மட்டுமல்லாது நீ பாடலிபுத்திரம் சென்று அரசனாக இருக்கலாம்.
ருத்திரசிம்மன் வாக்குத் தவற மாட்டான்.
ஆனால் நினைத்ததை அடையாமல் விட மாட்டான்”

ராமகுப்தன் நடுங்கி விட்டான்.
துருவாதேவியிடம் சென்றான்.

“என் ராணி!
உன்னை சகராஜனுக்கு நான் அளிக்காவிடில் நான் என் ராஜ்யத்தை இழக்க நேரிடும். உயிரையும் இழக்க நேரிடும்.
ஆனால் உன்னை அவனுக்குக் கொடுத்தாலோ எனது மனம் உடைந்து விடும்.
தாங்குவது மிகக் கடினம்.
என்ன செய்வேன்?
வெளிப்படையாகச் சொல்வதானால் நான் அரசனாக நீடிப்பதையே விரும்புகிறேன்.
ஆதலால்…
உன்னை இந்தக் கொடியவனிடம் அனுப்பப்போகிறேன்.
நீ அவனை மணம் செய்து கொள்வதை அறிந்து நான் பெரு வேதனை கொள்வேன்.
ஆனால் எனக்கு என் நாட்டுக்குத் திரும்ப செல்லவேண்டும்”

சொல் கேட்டு இடி விழுந்தாற்போல் துடித்தாள் துருவாதேவி.
“நினைத்தேன் … நினைத்தேன்.. உனக்காவது .. வீரம் வருவதாவது..
சே! என்ன மனிதன் நீ! மனிதனா நீ? உன் தம்பி இப்படி ஒரு செயலை கனவிலும் செய்வாரா?”

ராமகுப்தன் கோபத்தின் வசமானான்.

“சந்திரகுப்தனை இதில் எதற்காக இழுக்கிறாய். அவன் அப்படி மாவீரன் என்றால் ஏன் நமக்கு உதவ வரவில்லை”

துருவாதேவி:
“அவருக்கு நம் நிலைமை எப்படித் தெரியும்? அவருக்கு செய்தி அனுப்பினால் நடப்பதைப் பார்”

ராமகுப்தன்:
“அவனுக்கு எப்படிச் செய்தி அனுப்புவது? நம் சேனையில் பாதி இறந்து விட்டது. மீதி இரும்புச் சங்கிலியால் கட்டுண்டு உள்ளனர்.”

வீரமற்று சோரம் போக… வழி தெரியாமல் இருந்தான் ராமகுப்தன்.

பாடலிபுத்திரத்தில்…

‘அண்ணன் மகாராணியுடன் சென்று மூன்று நாட்களில் திரும்பி வருவதாகக் கூறிச்சென்றவன் இன்னும் திரும்பவில்லையே’ என்று வியந்தான்.
‘வாரங்கள் இரண்டு சென்றதே!’ என்று யோசித்தான்.

உடனே சிறு படை ஒன்றைச் சேர்த்துத் தேடலானான்.
குப்த ராஜ்ய உளவாளிகள் பெரும் திறமை வாய்ந்தவர்கள்.
சந்திரகுப்தன் அவர்கள் துணை கொண்டு தேடினான்…
சக நாட்டு ருத்திரசிம்மன் அவர்களைச் சிறைப்பிடித்ததைக்   கேள்விப் பட்டான்.
விரைவில் சக நாடு எல்லையை அடைந்தான்.

ராமகுப்தனைக் காவல் காக்கும் ருத்திரசிம்மன் வீரர்கள்
சந்திரகுப்தனையும் அவனுடன் இருந்த இருபது வீரர்களையும் பார்த்தனர்.
குடிபோதையில் கண் மண் தெரியாமல் சிரித்தார்கள்.

‘ஹேய்… நீ குப்தனா? இது தான் உன் பெரும் படையா?”
அனைவரும் பெரிதாகச் சிரித்து ஓய்ந்தனர்.

“உனது மகாராஜாவும் ராணியும் எப்படி சுகமாக இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டுமா?”

அவர்களை ராமகுப்தன் இருப்பிடம் அழைத்துச் சென்றனர்.
சங்கிலியால் கட்டப்பட்டு நாய்போல் இருந்த அண்ணனைக் கண்டு சந்திரகுப்தனுக்கு,  துக்கத்துடன் கோபமும் வந்தது. அதை அடக்கிக்கொள்ளுமுன் துருவாதேவி அழுகையுடன் அலறத் தொடங்கினாள்:

“சந்திரகுப்தா.. தான் அரசாள்வதற்காக உங்கள் அண்ணன் என்னை சக ராஜன் ருத்திரசிம்மனுக்குக் கொடுத்து விட முடிவு செய்து விட்டார்”- ஓலமிட்டாள்.

சந்திரகுப்தன் திடுக்கிட்டான்.

“இது என்ன அநீதி அண்ணா? இதை எவ்வாறு செய்யத் துணிந்தாய்? நமது தந்தையின் பெருமையை நினைத்துப் பார். கேவலம் அரசாட்சிக்காக அன்பும் அழகும் நிறைந்த மனைவியை விட்டுக் கொடுப்பாயோ? வெட்கம் வெட்கம்”

ராமகுப்தன்:
“போதும் உன் அறிவுரை.. இவள் என் மனைவியாய் இருந்து நான் உயிர் விடுவதை விட, குப்த அரசனாக இருந்து புகழ் பெறுவதையே விரும்புகிறேன்”

துருவாதேவி இதைத் தாங்கமுடியாமல் மண்ணில் விழுந்தாள்.

சந்திரகுப்தன் சொன்னான்:
“தேவி. நான் இது நடக்க விடமாட்டேன். போர் புரிந்து உங்களை மீட்பேன்”

முன்னாளில் தன் இரு கரங்களினால் ஒரு சிங்கத்தையே கொன்ற சந்திரகுப்தன்.. உடனே தனது கத்தியை விசிறிப் போர் புரிந்தான். காவலர்களைக் கொன்றான்.

ஆயினும் காட்டைச் சுற்றி சூழ்ந்திருந்தான் சக நாட்டுப் பெரும் படையுடன் ருத்திரசிம்மன்.

சந்திரகுப்தன் :”உங்கள் மன்னனிடம்… துருவாதேவியை அழைத்து வந்திருப்பதாகக் கூறி என்னைக் கூட்டிச்செல்”

சந்திரகுப்தன் ஒரு பெண் வேடம்  பூண்டு சக வீரர்களிடம்.. தன்னை ருத்திரசிம்மனிடம் அழைத்துச் செல்லப் பணித்தான்.

பீமன் திரௌபதை போல் வேடம் தரித்துச் சென்று கீசகனைக் கொன்றதுபோல்…

சந்திரகுப்தன் ருத்திரசிம்மனை அடைந்து போர் புரிந்து தன் வெறும் கைகளினாலே ராக்ஷசன்போன்ற அவன் கழுத்தை நெரித்துக் கொன்றான்.

தோல்வியுற்ற சக நாட்டு சேனை ஓட்டம் பிடித்தது.

அண்ணனையும் துருவாதேவியையும் மீட்டு பாடலிபுத்திரம் அடைந்தான்.

பாடலிபுத்திரத்தின் தெருக்கள் திருவிழாக்கோலம் பூண்டன.
சந்திரகுப்தனின் சாகசங்களை மக்கள் கொண்டாடினர்.
அவனது உருவப்படத்தை தெருக்களில் வரைந்து மகிழ்ந்தனர்.
அதே சமயம் ராமகுப்தனின் கோழைத்தனத்தை வெறுத்தனர்.
சில தெருக்களில் அவனது கொடும்பாவி வைத்திருந்தனர்.
‘நாட்டாசைக்காக மனைவியைப் பயணம் வைத்த துரோகி’ என்று மக்கள் அந்த கொடும்பாவியில் காரி உமிழ்ந்தனர்.

ராமகுப்தனுக்கு வருத்தம், கோபம், குற்ற உணர்ச்சி, பொறாமை எல்லாம் ஒன்று சேர்ந்திருந்தது.
தன்னை மக்கள் தூற்றுவது ஒரு புறம்.
சந்திரகுப்தனை மக்கள் ஏற்றுவது மறுபுறம்.

அரசவை கூடியது.

ராமகுப்தன் நடந்த நிகழ்ச்சியை தனது வெற்றியாக அறிவிக்க முயன்றான்.

துருவாதேவி எழுந்து பேசினாள்:
ஒரு காளி சிங்கத்தின் மேலிருந்து இறங்கியதைப் போன்ற தோற்றம்..

‘மந்திரிமார்களே…மக்களே..இந்த துரோகம்… அநீதி நீங்கள் அறிவீர்கள்..
ருத்திரசிம்மனிடம் என்னை அனுப்பத் துணிந்த இந்த அற்பனுக்கு என் மீது இனி எந்த தார்மீக உரிமையும் இல்லை. அந்த மணம் முறிந்து விட்டது. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் இன்றும் எல்லா அரசர்களும் பின்பற்றி வரும் ஒரு தத்துவம். அதில் அவர் கூறியது: ‘ஒரு பெண்ணுக்கு மறுமணம் செய்து கொள்ள காரணங்கள்: கணவன் மனைவியை விட்டுக் கண்காணா இடம் சென்றாலோ, அரசனுக்கு எதிராகக் குற்றம் செய்தாலோ, மனைவியின் உயிருக்கு ஊறு விளைவித்தாலோ, ஆண்மைக் குறைவு உள்ளவனாக இருந்தாலோ’”

மேல் மூச்சு வாங்கியதால் அவளது உடல் துடித்தது.
சமஸ்கிருதப் பாண்டியத்தியம் பெற்றிருந்ததால், அவள் மேலும் கூறினாள்:

“இதே காரணங்களை பராசர் முனிவரும் புராணங்களில் கூறியிருக்கிறார்
இன்று நான் ராமகுப்தன் மனைவியுமல்ல.. அவன் எனக்குக் கணவனுமில்லை.”
என்றாள்.

அவையினர் அனைவரும் ஆமோதித்தனர்.
‘துருவாதேவி வாழ்க’ என்று பெருங்கோஷமிட்டனர்.
ராமகுப்தன் தலை குனிந்தான்.

அன்று மாலை…இடம் ராமகுப்தனின் அறை:

“மந்திரி..எனக்கு இப்படி ஏன் நிகழ்ந்தது? இதற்கு  ஏதாவது செய்யவேண்டுமே”- என்றான்.

பழைய மந்திரியை அழைத்தான்.
அந்த மந்திரி..
அதே கொடிய மந்திரி..
பொய்யுரைத்து ராமகுப்தனை அரசனாக்கிய அதே மந்திரி.

“ராமகுப்தா… உனது கோழைத்தனம் உனது முட்டாள்தனத்தால் இன்று பகிரங்கமாகி நாடு முழுதும் பரவி நாறி விட்டது”

ராமகுப்தன் ஒடிந்து கிடந்தான்.

“எனினும் இன்றும் நான்தானே ராஜா? ஏன் ஒருவரும் என்னை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை”

மந்திரி சிந்தித்தான்.
கொடுமதியானுக்கு தீய எண்ணங்கள் எளிதாக உருவெடுக்கும்.
மந்திரி சொன்னார்:

“ஒன்று மட்டும் நிச்சயம். உங்களது தம்பி இங்கு இருக்கும்வரை உனக்கு மரியாதையும் கிடைக்காது. சந்தோஷமும் இருக்காது.”

ராமகுப்தன் :
“நீ சொல்வது சரிதான். அவனை நாடு கடத்தி விட வேண்டும்”

மந்திரி தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு மேலும் கூறலானான்:
“அப்படிச்செய்தால் …சந்திரகுப்தன் ஒரு படையைத் திரட்டி உன்னை எளிதில் வென்று ஆட்சியைக் கைப்பற்றுவான்.
ஆனால்…அவன் திடீரென இறந்து போனால் ????
அனைவரும் நாளடைவில் அவனை மறந்து போவர்.
சரித்திரத்தில் அவனுக்கு ஒரு வரி கூட இருக்காது.
பிறகு…
காலம் உன்னை கேவலமாக்கியது.
அதே காலம் உங்களைக் கோலமிட்டு அலங்கரிக்கும்.
குப்தர்களின் பொற்காலம் உங்களால் உருவாகும்.
அது உங்களால்தான் என்று சரித்திரம் பேசும்”

மந்திரியின் வார்த்தை ஜாலம் ராமகுப்தனை ஈர்த்தது.

“மந்திரி.. நீ சொல்வது சரி தான்.. ஆனால் சந்திரகுப்தன் நெடுங்காலம் வாழ்வானே!” என்று நொந்து கொண்டான்.

மந்திரி: ‘அவனது விதியை மாற்றிவிட்டால் நமது விதியும் மாறும்.
ஒரு வேளை… சந்திரகுப்தன் தூக்கத்திலேயே மர்மமாக இறந்து விட்டால்?”.

ராமகுப்தனுக்கு விளங்கிவிட்டது.

மந்திரி தொடர்ந்தார்:

“இன்றே! நீங்கள் அவனைக் கொல்ல வேண்டும்.
இன்றிரவே!
அவனில்லாமல் அரசாள நான் உங்களுக்கு உதவுவேன்”

அன்றிரவு…
குப்த சாம்ராஜ்யத்தின் எதிர் காலத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் இரவு.
நள்ளிரவு கடந்து இரண்டு மணி நேரம் கடந்திருந்தது.
இருட்டு எங்கும் பரவி ஒரு பயங்கரம் நிகழப் போவதை அமைதியாக அறிவித்தது.
பேயும் உறங்கும் வேளை.
சந்திரகுப்தன் தனது அறையில் படுத்திருந்தான்.
ஒரு சிறிய விளக்கு முணுமுணுத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தது.
‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது’ என்பதைப் போல்…சந்திரகுப்தனுக்கு
உறக்கம் வரவில்லை .
‘துருவாதேவி’யை எண்ணி அவன் மனம் அலை பாய்ந்தது.
‘விதி நம் வாழ்வில் எப்படி விளையாடிவிட்டது?
துருவாதேவி எனக்கு மனைவியாயிருப்பாள்..
ஆனால் ராமகுப்தனை மணம் செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டது..
இப்படி ருத்திரசிம்மனுக்குக் கொடுக்க ராமகுப்தன் முனைந்தது’
இந்த எண்ணங்கள் அவனைத் தூங்கவிடவில்லை.

அந்த நேரம் .. ஒரு கருப்பு உருவம் சத்தம் செய்யாமல் அவன் படுக்கையை நெருங்கியது.
அதன் கைகளில் நீண்ட வாள்.
அந்த தூங்காவிளக்கு அந்த வாளை மட்டும் காட்டியது.
ஓங்கிய வாள் சந்திரகுப்தனின் தலையைக் கொய்திருக்கும்.
சந்திரகுப்தன் பந்துபோல் பாய்ந்து .. வந்தவனின் கரத்திலிருந்த வாளைப் பிடுங்கி..

‘இந்நேரத்தில் என்னைக் கொல்ல வந்திருக்கும் துஷ்டா..” என்று கூறியபடி..

அவன் வயிற்றில் வாளைப் பாய்ச்சினான்.
அவனது அலறல் சந்திரகுப்தனைத் தாக்கியது.
காவலர் விளக்குப் பந்தங்கள் கொண்டு வந்தனர்.

இரத்த வெள்ளத்தில் ராமகுப்தன்.
உயிர் பறந்து விட்டது..
சந்திரகுப்தன் துடி துடித்துப் போனான்.
அண்ணனின் உடலை மடியில் தாங்கியபடி.
‘ஐயோ அண்ணா… “அலறினான்.

“என்னைக் கொல்ல நீயே வந்தாயா? ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் இந்த நாட்டை விட்டே சென்றிருப்பேனே. நேராகக் கேட்டிருந்தால் என் உயிரையும் தந்திருப்பேனே. துருவாதேவி கிடைக்காமல் போனதுமுதல் நான் ஒரு நடைப்பிணமாகத்தானே இருக்கிறேன். ஐயோ .. என்ன செய்வேன்..தந்தையார் எவ்வளவு சொல்லியிருந்தார்? ‘உன் அண்ணனைக் காப்பதற்காக உன் உயிரையும் கொடுக்கத் தயங்காதே’- என்று சொன்னாரே. இன்று  உன் உயிரை நானே பறித்து விட்டேனே” – புலம்பினான்.

உண்மையான பாசமுள்ள தம்பியும் துரோகம் நிறைந்த அண்ணனும் ஒரு தாய் வயிற்றில் பிறப்பது கதை போல் தோன்றினாலும்… நிகழ்ந்தது.

மந்திரி வந்தார்.

“சந்திரகுப்தா! அண்ணன் இறந்து விட்டான்.
தம்பியையே கொலை செய்ய முற்பட்டது துரோகத்தின் எல்லை.
அவன் கொல்லப்பட்டது அவனது துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனை.
நீ கலங்காதே!”

மேலும்:
“நான் ராமகுப்தனின் ஆதரவாளனாக இது நாள்வரை இருந்தேன்.
ஆனால் இன்று ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
தங்கள் தந்தை… தந்தை என்ற நிலையில் குடும்பத்தில் ஒற்றுமை நிலவவேண்டும் என்று விரும்பினாலும்..மன்னன் என்ற நிலையில் தாங்கள்தான் அரசனாகத் தகுதியாளர் என்றும் கருதினார். தங்களை மன்னனாக்க என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் எனது சுயநலம் கருதி ராமகுப்தனுக்கு ஆதரவளித்தேன்.
இன்று அவன் இறந்ததும் உங்கள் பக்கம் சாய்கிறேன் என்று நீங்கள் எண்ணக்கூடும்.
அனால் உண்மையைக் கூறாமல் இறந்தால் என் கட்டை வேகாது. இனி எனக்குத் தாங்கள் எந்த தண்டனை அளித்தாலும்  ஏற்றுக் கொள்ளத் தயார்.”
மந்திரியின் வாக்கில் சத்தியம் இருந்தது.
மன்னன் மன்னித்தான்.

சில நாட்கள் சென்றன.
சந்திரகுப்தன் அரண்மனைப் பூங்காவில் இருந்த மணிமண்டபத்தில் அமர்ந்திருந்தான்.
‘என் வாழ்வில் எப்படிப்பட்ட சோகங்கள் நடந்து விட்டது’  என்று எண்ணினான்.
பூங்காவில் வண்ண மலர்கள் குலுங்கிக் கிடந்தது.
வாடைக் காற்று பூங்காவில் அனுமதியின்றி நுழைந்தது.
அத்துடன் ஒரு சுகந்தம் வீசியது.
மெல்லிய சலசலப்பு அவன் கவனத்தைக் கவர்ந்தது.
துருவாதேவி அவன் அருகில் வந்தாள்.
சந்திரகுப்தன் மனதில் பலவித எண்ணங்கள் அலைமோதின.
துக்கம், பச்சாதாபம், சுயவெறுப்பு….

‘தேவி … என்னை மன்னித்துவிடுங்கள்… அண்ணனை நான்..” சொல்வதற்குள்…

துருவாதேவியின் மலர்க்கரங்கள் அவனது இதழைப் பொத்தியது.

“மன்னா… நீங்கள் ஒன்றும் சொல்லவேண்டாம்..இறைவன் நம்மை ஒன்று சேர்ப்பதற்காக இப்படிச் செய்தான் என்று நினைக்கிறேன்.
உங்கள் பண்பும், நற்குணமும், வீரமும், தெய்வத்தன்மையும் என் மனதில் என்றும் கோவிலாக இருக்கிறது. என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள். நான் உங்கள் அடிமை.”

சந்திரகுப்தன் ஒரு நொடியே யோசித்தான்.
‘இந்த மலர் ஏன் வாடவேண்டும்?
நமது தோட்டத்தில் என்றும் மணம் பரப்பவேண்டும்’

துடித்த அவள் இதழ்கள் அவன் இதழ்கள் சேர அடங்கியது.
பல காலம் காத்துக்கிடந்த இரு கிளிகள் அன்பைப் பரிமாறிப் பசியாறியது.

சந்திரகுப்தன் அரசனாக முடி சூடினான்.
அதற்கு முன் துருவாதேவியை மணந்தான்.
ராமர் பட்டாபிஷேகம் அயோத்தியை மக்களுக்குக் கொடுத்த மகிழ்ச்சி அன்று பாடலிபுத்திரத்திலும் இருந்தது.

 

 

 

 

 

 

(சந்திரகுப்தன்- துருவாதேவி)

இருவரும் ராஜா-ராணியாகி இந்தியாவின் பொற்காலத்தை உருவாக்கினர்.

  • சரித்திரம் அதைச் சொல்வதற்குக் காத்திருக்கிறது…