சால்மன்  என்பது  பசிபிக் கடலிலும்,  கடலை ஒட்டிய மலைப் பாங்கான பகுதிகளிலும் வாழும் ஒரு வித மீன்.

அது கடலிலிருந்து  1000 மைலுக்கு  அப்பால் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் இருக்கும்  நல்ல தண்ணீர் ஓடையின் கீழே அல்லது ஆற்றோரம் இருக்கும்  பாறைகளில் முட்டையிடும்.  2 /3 மாதங்களில் பிங்க் வண்ணத்தில் இருக்கும் அந்த முட்டைகளை உடைத்துக் கொண்டு சால்மன்  சின்னஞ் சிறு வடிவில் வெளிவரும்.

அந்தக் குட்டி சால்மன்கள் பல வாரங்கள்,  தான் இருந்த முட்டையின் கருவையே  உணவாக்கிக் கொண்டு பாறைகளிலேயே வாழும்.பிறகு 5 முதல் 10  வாரத்தில் கொஞ்சம் பலம் பெற்று சின்னஞ் சிறு மீன்களாகத் தண்ணீரில் நீந்தத் தொடங்கும்.

அதற்குப் பிறகு அவை கடலை நோக்கிச் செல்லும் பயணத்தை ஆரம்பிக்கும்.   சலசலக்கும் ஒடைகளின்  நீரில் குதித்துக்கொண்டும் நீந்திக் கொண்டும் தான் வாழப்போகும் பசிபிக் கடலை அடையப் புறப்படும்.  அது  ஆயிரம் மைல்களாக இருந்தாலும் சால்மன்களுக்குக் கவலை இல்லை.

வழியே அவற்றிற்குத்தான் எத்தனை இடையூறுகள் காத்திருக்கின்றன?

ஆனால் தன் முயற்சியில் சற்றும் தளராத இந்த சால்மன்கள்  வேகமாகப் பாயும் அருவிகளில் நீரின் வேகத்தோடு இறங்கி ஆற்றில் நீந்தி கடைசியில் தான் வாழப்போகும் கடலை நோக்கிச் செல்லும்.  இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். இந்த சமயத்தில் இந்த  சால்மன்ளகளுக்குக் கடல் நீரில் வசிக்கத் தகுந்தமாதிரி உடலின் வாகு மாறும். ஆறு அங்குல நீளத்தில் உடலில் சில வரிகளோடு இவை பயணத்தைத் தொடரும். ஓரிரு வருடங்களில் கடலில் வசிப்பதற்கான முழுத் தகுதியையும் அடைந்து விடும்.

கடலை அடைந்தவுடன் அங்கு இருக்கும் சால்மன் கூட்டத்தோடு இந்த இளம் சால்மன்களும் கலந்து கொள்ளும். அவற்றின் நிறமும் தகதகவென்று வெள்ளி போல மாறும்.  இனத்தோடு வாழ்ந்து வாலிபம் எய்து நாலைந்து வருடங்கள் குஷியாக இருக்கும்.  அப்போது அவற்றின் நீளம் 20 அங்குலம் முதல்  ஐந்தடி  வரை இருக்கக் கூடும் .

Timothy Knepp/ U.S. Fish and Wildlife Service

வாலிப சால்மன்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் வயது வந்தவுடன் செய்யும் காரியம்தான் மகத்தானது. தான் பிறந்த பாறைகளில்தான் தன் குஞ்சுகளும் பிறக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் அவை மீண்டும் ஆறுகள் வழியாக அருவிகள் வழியாகச் செல்லத்தொடங்கும். . இந்த முறை அவை நீரின் வேகத்திற்கு எதிர்த் திசையில்  செல்லவேண்டும்.  கடலில் இருந்தபோது இவை தன்உடலில் சேர்த்து வைத்திருந்த  கொழுப்புக்களே  இவற்றிற்கு இந்த சக்தியைக் கொடுக்கின்றன.          (பாகுபலியில் அருவிக்கு மேலே நாயகன் செல்வதுபோலே இவையும் செல்லும்) .

அப்போதும் அவற்றைப் பிடிக்க மனிதர்களும் மற்ற  விலங்குகளும் காத்துக் கொண்டிருக்கும். பாறையிImage result for alaska bears eating salmonல் ஒளிந்திருக்கும் கரடிகள் சுவையான சால்மனைத்  தின்னக் காத்துக் கொண்டிருக்கும்.  பலசமயம்  இந்த சால்மன்கள் துள்ளிக் குதித்து, காத்திருக்கும் கரடியின் வாயிலேயே நேராக விழுவதும் உண்டு..

இந்தப் பயணத்தின்போது அவை தன் உடல் கொழுப்பை வேகமாகக் கரைத்து அடுத்த தலைமுறையைக் கொடுக்கத் தயாராயிருக்கும். முடிவில்,  தான் பிறந்த இடத்தை அடைந்ததும் பெண் சால்மன் அதே ஓடைத்  தண்ணீரின் அருகே உள்ள பாறைகளில்    2500  முதல் 7000 வரை முட்டைகள் இடும். ஆண் சால்மன்கள் அந்த முட்டைகளைக் கருத்தரிக்க வைக்கும்.

அதற்குப் பின் நடப்பதுதான் மிகமிகக் கொடுமையானது.

முட்டைகள்   கருத்தரித்ததும்  அந்த ஆண் சால்மனும் பெண் சால்மனும் ஓரிரு வாரங்களில் தான் பிறந்த பாறையிலேயே தன் உயிரையும் விட்டுவிடும்.

அதற்குப் பிறகு அந்த முட்டைகளிலிருந்து வந்த புது சால்மன் குஞ்சுகள் தங்கள் வாழ்க்கை வட்டத்தை மீண்டும் துவக்கும்.

சால்மனின் தியாகம் உணமையிலேயே மகத்தானது.