
சிற்றிதழ்களே தன் உயிர்மூச்சு என்று கூறி , அதற்காகவே சிற்றிதழ் உலகம் என்ற மின்னிதழைத் துவக்கியவர் திரு க்ரிஷ் ராமதாஸ் அவர்கள். முக நூலில் அவரது பதிவுகளைப் படித்து அவரைப் பாராட்டி குவிகம் இதழுக்காக சிற்றிதழ்பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதுமாறு வேண்டிக் கொண்டோம். அவர் மின்னிதழ் துவக்க இருந்ததால் பிறகு எழுதுவதாக வாக்களித்தார்.
அவரது மின்னிதழைப் பாராட்டிக் குவிகம் ஜனவரி 2017 இதழில் எழுதிய கட்டுரையின் பகுதி இது:
உலக அளவிலான சிற்றிதழ்கள், கட்டுரைகள், ஆய்வுகள், பதிவதற்கான தளம் – ” சிற்றிதழ்கள் உலகம்” என்ற மின்னிதழ்.
கிருஷ்.ராமதாஸ் அவர்களின் முயற்சியால் இந்தப் பொங்கல் சமயத்தில் வெளிவந்திருக்கிறது!
சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ், துபாய் அருகில் உள்ள அல் அய்ன் நகரில் தஞ்சை திரு.வரதராசன் அவர்களால் 13.01.2017 அன்று வெளியிடப்பட்டது . முதல் பிரதியை திரு.கருணாகரன் அவர்கள் பெற்றுக்கொள்ள நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.
சென்னை புத்தகக் கண்காட்சியிலும் இது வெளியிடப்பட்டது.
வாழ்க! வளர்க! இவர்தம் தொண்டு !!
அப்படிப்பட்ட நண்பர் மூளையில் தோன்றிய கட்டியினால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்.
அவரது இழப்பு சிற்றிதழ் உலகிற்கே பேரிழப்பு.
அவரது பிரிவால் வாடும் உறவினருக்கும் நண்பர் வட்டத்திற்கும் குவிகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
