

சபை நடுவே ‘நீட்’ ஓலை வாசியான் நின்ற மரம் போல நிற்கின்றது தமிழகம்.
என்ன ? கமலுடைய ட்விட்டர் பதிவு மாதிரி புரியாமலிருக்கிறதா?
தமிழகத்தின் இன்றைய போராட்டங்களைப்பற்றியும் புரிந்து கொள்ள முடியவில்லை.
நீட்டுக்கு எதிராக உயர்நீதி மன்றம் சென்ற அனிதாவைப் பாராட்டுகிறோம்.
ஆனால் அதற்காகத் தற்கொலை செய்துகொண்ட அனிதாவை எப்படிப் பாராட்டுவது? காரணம் எவ்வளவு வலுவுள்ளதாக இருந்தாலும் தற்கொலை தவறானதுதான்.
தமிழகத்தின் தரம் குறைந்த கல்வி முறையைக் குறை கூறுவதா?
இந்தியா முழுவதும் ஒரே மாதிரிக் கல்வியைத் தரத் தவறிவிட்ட அரசு இயந்திரங்களைக் குறை கூறுவதா?
எதிலும் இந்திக்காரர்களுக்குச் சாதகமாக முடிவெடுக்கும் மத்திய இந்தியாவின் வெறியர்களைக் குறை கூறுவதா?
மருத்துவக் கல்விக்குக் கோடிக்கணக்கில் கட்டாய நன்கொடை வாங்கும் பண முதலைகளைக் குறை கூறுவதா? அல்லது அதைத் தடுக்க வக்கில்லாமல் இருக்கும் அரசுத் துறையைக் குறை கூறுவதா?
அநீதிக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தால்தான் நீதி கிடைக்கும். போராடுபவர்களின் குறிக்கோள் வெவ்வேறு மாதிரி இருக்கலாம்.
அக்டோபர் புரட்சியிலிருந்து, இந்தி எதிர்ப்பு தொடர்ந்து, தொழிற்சங்கப் போராட்டங்கள் பரவி, ஜல்லிக்கட்டுவரை எண்ணற்ற போராட்டங்களை நாம் சந்தித்திருக்கிறோம்.

அந்த வகையில் நீட் போராட்டத்தின் குறிக்கோளைப் பாராட்டுகிறோம். ( நீட்டுக்கு எதிரான போராட்டங்களைத் தடை செய்யச்சொல்லி உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது )
இது மோடிக்கு எதிரானது அல்ல. நாட்டுக்கு எது முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வதற்காகவே நடக்கும் போராட்டம்.
ஜாதி, மதம், அரசியல், உணர்ச்சி வேகம் போன்றவற்றைத் தாண்டி யோசித்து முடிவெடுப்போம்.

அனைவரையும் பேசவிடுங்கள். மாற்றுக் கருத்துக்களை நசுக்காதீர்கள். ‘ தேசம் கேட்க விரும்புகிறது ‘ என்று வெற்றுக் குரல் எழுப்பாதீர்கள். எதிர்மறைக் கருத்துக்களை எடுத்து எறியுங்கள்.
முடிவில் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அப்போதுதான் , சபை நடுவே ‘நீட்’ ஓலை வாசியான் நின்ற மரம் போல நாம் அனைவரும் நிற்க வேண்டிவராது.
