இரண்டாவது அத்தியாயம்

Image result for film shooting

சென்ற அத்தியாயத்தைப் படித்தவர்கள் சிலர் மிகப்பிரபலமான ஒரு ஆங்கில வசனத்தை (ஷேக்ஸ்பியர் எழுதியது) மேற்கோள் காட்டி இருந்தனர்

உலகமே ஒரு நாடக மேடை அதில் நடிப்பவர்கள் யாவரும் நடிகர்கள்

ஒப்புக்கொள்கிறேன் உலகமே நாடக மேடைதான்.  நாம் எல்லோரும் நடிகர்கள்தான்.  இருந்தும் சிலர்தானே பிரபலமான நடிகர்கள் ஆகிறார்கள்.  எல்லோரும் இல்லையே !

அந்த வாக்கியத்தை இப்படித்தான் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த உலகைப் படைத்தவன், ஒரு திரைக்கதை எழுதுகிறான். அதில் நாம் எல்லோரும் பாத்திரமேற்று அவன் எழுதியபடி நடிக்கிறோம்.

நமக்குத்   தெரியாமல் அவன் நாம் ஏற்று இருக்கும் பாத்திரத்தையும் காட்சி அமைப்புகளையும் அப்போதைக்கு அப்போதுதான் எடுத்துச் சொல்கிறான்.  முன்கூட்டித்  தெரிவிப்பதில்லை ! ஒரு  ரிகர்சல் பார்ப்பதில்லை!  நேரடியாக  ஆக்ஷன் தான்.

ஆகையால் இது அந்த நேரத்து நடிப்பு !

எந்த ரசிகனுக்காகவும் நடத்தப்படுவதில்லை

நம்மைப் படைத்தவனுக்காக , அவன் இஷ்டப்படி ஆட்டுவிக்க நாமும் ஆடுகிறோம்.

இதில் நம் நடிப்பு எங்கே வெளிப்படுகிறது ? திறமை எங்கே உள்ளது  ?

ஆனால்  இங்கு மேடையில் , தொலைக்காட்சியில் , திரைப்படத்தில் நிலைமை அப்படி இல்லையே !

இறைவன் நடத்தும் நாடகமாகிய நமது வாழ்க்கையில் நமக்கு அடுத்த வினாடி என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாது.

வாசலில் ஒரு அழைப்பு மணி ஒலிக்கும்போது யார் அழைக்கிறார்கள் என்று தெரியாது.

ஸ்கூட்டரில் போனால் அது பஞ்சர் ஆகுமா என்று தெரியாது.

பஸ்  பிரேக் டவுன் ஆகாமல் போகுமா  என்று தெரியாது.

அலுவலகம் போனால் மேனேஜரிடம் திட்டு விழுமா எனத் தெரியாது.

காதலி காத்திருப்பாளா இல்லை கோபித்துக்கொண்டு போய் விடுவாளா  என்பது தெரியாது.

அடுத்த மாதம் நமக்கு உடம்பு சரியில்லாமல் போகுமா தெரியாது.

ஒவ்வொரு வினாடியும் வாழ்க்கையில் நமக்கு சஸ்பென்ஸ்தான்.

இப்படி இருக்கையில் நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கப் போகிறவர்கள் யார் ? யாருடன் நமக்கு பகைமை ஏற்படப்  போகிறது?  யாரை  நாம் எப்போது இழக்கப் போகிறோம் ? பத்து வருடங்கள் கழித்து நாம் யாராக, எங்கே,  எப்போது , எப்படி இருக்கப் போகிறோம் என்பது கடவுள் நமக்கு அமைத்து வைத்திருக்கும் மர்மங்கள் நிறைந்த ஸ்கிரிப்ட்   வாழ்க்கை .

இதைத்தான் வள்ளுவர்

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்து உலகு.

என்கிறார்.

ஆனால்

நீங்கள் நடிகனாக ஏற்கும் கதாபாத்திரத்தைப்  பாருங்கள்.

ஒரு நடிகனுக்கு அவன் ஏற்கும் கதா பாத்திரங்கள் என்னவாகப் போகிறது, எப்போது இறக்கப்போகிறது என்று சகல விவரங்களும் தெரியும்.

அவன் ஆயுள்  எழுபது  வருடங்கள் என்றால் ஒவ்வொரு ஆண்டும் அந்தக் கதா பாத்திரம் என்னவாகப் போகிறது என்று அவன் அறிவான்.

தனது மகனை அன்பான பாசமுடன் வளர்க்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கு அவன் வளர்ந்தபின் பெரிய கிரிமினல் ஆகித் தன்னையே எதிர்க்கப்போகிறான் என்று முன்கூட்டியே தெரியும்

Image may contain: 1 person, smiling

(தங்கப்பதக்கம் திரைப்படம்)

தான் காதலிக்கும் பெண் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனை மணக்கப்போகிறாள் என்று காதலனுக்குத் தெரியும்.

நெருங்கிய நண்பன் துரோகியாக மாறினால் அதுவும் முன் கூட்டியே தெரியும் .

என்ன இது ?  இப்படி எல்லோருக்கும் தெரிந்த ஒரு சாதாரண விஷயத்தை ஏதோ ஒரு பெரிய விஷயம் போலச்  சொல்கிறேனே என்று சலித்துக் கொள்கிறீர்களா?

( தொடர்ந்து பேசுவோம் )